இது உங்கள் இடம் | இது உங்கள் இடம் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : நவ 29, 2011 | கருத்துகள் (7)
Share
எதை நோக்கி பயணிக்கிறோம்? என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அப்துல் கலாம், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய சர்ச்சையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற முனைப்புடன், அணு மின் நிலையத்திற்கு வருகை தந்து, அணு மின் உலையை ஆராய்ந்து, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்றும், இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுப்புற
 இது உங்கள் இடம்

எதை நோக்கி பயணிக்கிறோம்?

என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அப்துல் கலாம், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய சர்ச்சையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற முனைப்புடன், அணு மின் நிலையத்திற்கு வருகை தந்து, அணு மின் உலையை ஆராய்ந்து, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்றும், இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் வாக்குறுதி அளித்தார்.மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விஞ்ஞான அறிவும், தனிமனித ஒழுக்கமும், பொது வாழ்க்கையில் நன்னடத்தையும் மேலோங்கி வளரவேண்டுமென்று அறிவுறுத்துகிற, அப்துல் கலாம் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியின் வார்த்தைகளை, கூடங்குளம் போராட்டக்காரர்கள் செவியேற்காமல் நிராகரித்து விட்டனர்.இன்றைய இந்தியாவில் நாகரிகம், பண்பு, நேர்மை, அறிவு கூர்மையுள்ள சிறந்த மனிதராக அப்துல்கலாமை அனைவரும் கருதுகின்றனர். மனசாட்சியுடன் செயல்படும் நல்ல மனிதரென அவர் மீது, அனைவரும் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். இத்தகைய நிலையில், கூடங்குளம் போராட்டக்காரர்கள் அவரை சந்தேக கண்ணுடன் பார்ப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.கூடங்குளத்தின் பாதுகாப்பு குறித்து விளக்கும் விஞ்ஞானிகள், நம் நாட்டைச் சார்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்பதை, நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் மேல் சந்தேகம் கொள்வதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. அது எந்தவிதத்திலும் நியாயமல்ல.இந்தியாவில் நிலவும் இத்தகைய நிலைமையை உற்று நோக்கும் போது, இந்திய மக்கள் எதை நோக்கி பயணிக்கின்றனர் என, நினைக்கவே அச்சமளிக்கிறது.

தமிழனுக்காக கவலைப்படுகிறாரா?சிரிப்பு வருது!

ச.ஜான் பிரிட்டோ திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: ஆடு நனைவதை எண்ணி ஓநாய் அழுத கதையை, கருணாநிதி சமீபகாலமாய், மக்களுக்கு உணர்த்தி வருகிறார். பஸ் கட்டண உயர்வை, நாளிதழ்களுக்கே தெரியாதபடி அறிவிக்கப்படாமல் அமல்படுத்தியதை, தமிழர்களாகிய நாம் மறக்கத்தான் முடியுமா?"மின்பற்றாக்குறைக்கு தி.மு.க.,வே பொறுப்பு. அதனால், தோல்வி ஏற்படலாம்' என, உரக்கக் கூறிய ஆற்காட்டாரின் வாக்கியத்தையும் நினைக்காமல் தான் இருக்க முடியுமா?முதல்வர் ஜெயலலிதா கூறியது போல், தமிழர்களாகிய நமக்காக, நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் உச்சகட்ட காமெடி எதுவெனில், அது மதுக்கடை சாடல் அறிக்கை தான்."தமிழனுக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராது' என, முரசொலி நாளிதழில், அடுத்தவர் மூலம் சாடிய கருணாநிதி, மதுக்கடையின் "எலைட் பார்' வகைகளை சாடி, அரசை மட்டுமன்றி, தமிழர்களையும் ஏளனப்படுத்தியுள்ளார். தமிழர்களை மீளாக் கடன்காரர்களாக்கி விட்டு, இலவசங்களை அள்ளி வீசும் வித்தையை, மதுக்கடை வருமானத்தின் மகத்தான துணையுடன், பிற மாநிலங்களுக்கு கற்றுத் தந்த விஞ்ஞான மூளைக்காரரான கருணாநிதி, இன்று மதுக்கடையின் வளர்ச்சி பற்றி கவலைப்படுவது, நமக்காகத்தான் என, எந்தத் தமிழனாவது நினைத்தால், அது அவர்களின் அறியாமையேயாகும்.மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என, ராமதாசுக்கு அல்வா கொடுத்து, கூட்டணியை பலப்படுத்திய கருணாநிதி, மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பில் நிலைகுலைந்து போயுள்ளார் என்பதே நிதர்சன உண்மை. மதுவிலக்கை மனதளவிலும், தன் ஆட்சிக்காலத்தில் நினைத்து பார்க்காத கருணாநிதி, ஒரு வேளை மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருந்தால், "எலைட் பாரும்' அறிவிக்கப்படாத திட்டத்தில் சார்ந்திருக்கும். "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' என்ற புதுமொழி போல், டாஸ்மாக் வருமானத்தையும் நம்பிக்கொண்டு, "அ.தி.மு.க., ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்' என்ற வெறுப்பில், ஐந்துமுறை சம்பள உயர்வாக மொத்தத் தொகையே ஆயிரம் கூடத்தொடாத அளவிற்கு மறைமுகமாக பழி தீர்த்தவர் கருணாநிதி என்பதை, டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் அறிவர்.ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரைப்போல் "மதுவிலக்கு' என கருணா
நிதியால் அறைகூவல் விடமுடியுமா? முடியாது.

"தர்ம அடி'யிலிருந்து யாரும் தப்ப முடியாது!

வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "ஊழல் அரசியல்வாதிக்கு இது தான் தண்டனை' என, சூப்பராக டயலாக் பேசி, மத்திய அமைச்சர் பவாரின் கன்னத்தில், "பளார்
பளார்'ன்னு அறைந்திருக்கிறார் வீரம் செறிந்த சீக்கிய இளைஞர் ஒருவர். அவருடைய திருநாமம் ஹர்வீந்தர் சிங் என்பதாகும்."அடப்பாவமே! பவாருக்கு ஒரே ஒரு அறை தான் விழுந்ததா! கன்னம் வீங்கும் அளவுக்கு, நிறைய அறைகள் விழவில்லையா' என, மிகவும் பச்சாதாபப்பட்டிருக்கிறார் ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் அன்னா ஹசாரே.வழக்கம் போல பிரதமர், பிரணாப் முகர்ஜி போன்ற அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். நாளைக்கு, நமக்கும் இதே கதி தான் என்ற பயம், இவர்களுக்கு இப்போதே வந்துவிட்டது.இந்த மாவீரன் ஹர்வீந்தர் சிங், பவாரை மட்டும் தாக்கவில்லை. ஊழல் மன்னன் சுக்ராமையும் தாக்கியிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம். அவரை கைது செய்து, "மனநலம் பாதிக்கப்பட்டவர்' என, முத்திரை குத்தப்போவது வேறு விஷயம்! இப்போது நம் விவகாரம், "பளார்' சம்பந்தப்பட்டது மட்டுமே!சிதம்பரத்துக்கு செருப்பு பூஜை நடக்க இருந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டார்! பாவம், இன்னும் எத்தனை தலைவர்களின் கன்னங்களில் இப்படி, "பளார்' விழப்போகிறதோ!இந்தியர்களுக்கு இப்போது தான் ரோஷம், மானம், கோபம் எல்லாம் பொங்கி வர ஆரம்பித்திருக்கிறது. "பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா...' என, வீர வசனம் பேசிய கண்ணாம்பா மாதிரி, அன்னைகள் பலர் இருந்தால், நம் இளைஞர்கள் நிச்சயம் பொங்கி எழுவர் என்பதில் சந்தேகம் இல்லை.கோர்ட் அளிக்கும் தண்டனையிலிருந்து ஊழல் மன்னர்கள் தப்பிவிட்டாலும், மக்கள் தரும், "தர்ம அடிகளிலிருந்து' தப்பிக்கவே முடியாது. கன்னத்தில் அறைவதை அரசியல்வாதிகளோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. அதிகாரிகளுக்கும் இந்தத் தண்டனை அவசியம் தான். அப்படி செய்தால் தான், ஊழல் செய்ய பயப்படுவர். "அடி உதவுவது போல, அண்ணன், தம்பி உதவமாட்டார்கள்' என்ற பழமொழி, அரசியல்வாதிகளுக்கும் சொல்லப்பட்டது தான்."ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல்' என வியாக்கியானம் பேசுபவர்கள், தங்களை ஒரு முறை ஆத்ம சோதனை செய்து கொள்வது, ரொம்ப ரொம்ப அவசியம்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X