பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி| Puduchery Youth describesThane horror | Dinamalar

பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி

Added : ஜன 20, 2012 | கருத்துகள் (4) | |
புதுச்சேரி: "கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன்' என, கடலில் மூழ்கிய இத்தாலி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய புதுச்சேரி வாலிபர் கூறினார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பிரமாண்டமான கப்பல், ஜிக்ஜியோ தீவில் தரை தட்டி மூழ்கத் துவங்கியது. இதில் பயணம் செய்த, 3,000க்கும் மேற்பட்ட பயணிகளும், 1,023 சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், இந்தியாவை
Puduchery Youth describesThane horrorபிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி

புதுச்சேரி: "கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன்' என, கடலில் மூழ்கிய இத்தாலி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய புதுச்சேரி வாலிபர் கூறினார்.


இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பிரமாண்டமான கப்பல், ஜிக்ஜியோ தீவில் தரை தட்டி மூழ்கத் துவங்கியது. இதில் பயணம் செய்த, 3,000க்கும் மேற்பட்ட பயணிகளும், 1,023 சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், இந்தியாவை சேர்ந்த, 300 பேர் இருந்தனர். இந்தக் கப்பலின் ஓட்டலில், புதுச்சேரி, முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், வேலை செய்து வந்தார். ராம்குமாரின் நிலை குறித்து தெரியாமல், அவரின் தந்தை தேவேந்திரன் மற்றும் உறவினர்கள் பரிதவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, இத்தாலி நாட்டு தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, ராம்குமார் மீட்கப்பட்டதை உறுதி செய்தார்.


புதுச்சேரி திரும்பிய ராம்குமார், கூறியதாவது: ஜிக்ஜியோ தீவு அருகே சென்ற போது, வழக்கத்தை விட கப்பல் தள்ளாடியதால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக, தரை தளத்தில் உள்ள என் அறைக்கு சென்றேன். அங்கு, இடுப்பளவிற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறிதுநேரத்தில், கப்பல் சாய்ந்து மூழ்கத் துவங்கியதால், பயத்தில் உறைந்து போனோம். என்னால் முடிந்த அளவிற்கு, சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றி தப்பிக்க வைத்தேன். பின், நாங்கள் படகில் ஏறி தப்பினோம். கப்பலில் வைத்திருந்த என்னுடைய சம்பளம், சான்றிதழ்கள், லேப்-டாப்கள் மூழ்கிவிட்டன. எனக்கு நீச்சல் தெரியாது. பிழைப்பேன் என்று, நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு ராம்குமார் கூறினார்.


சென்னை: இத்தாலி சொகுசு கப்பல் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில், முதற்கட்டமாக, நேற்று முன்தினம் இரவு, எமிரேட்ஸ் விமானம் மூலம், எட்டு பேர் சென்னை திரும்பினர். இரண்டாம் கட்டமாக, நேற்று காலை, 8.30 மணிக்கு, எமிரேட்ஸ் விமானம் மூலம், எட்டு பேர் சென்னை வந்தனர். இவர்களில், ரெபகா, சிம்ராய் ஆகிய இரு பெண்களும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள்.


சென்னை விமான நிலையத்தில், விபத்தில் சிக்கியவர்கள் கூறியதாவது: கடந்த, 13ம் தேதி இரவு 9 மணிக்கு, கப்பல் ஆடத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில், கப்பல் சாயத் துவங்கியது. அனைவரும் அலறினோம். இரண்டு மணி நேரத்தில், கப்பல் முழுவதுமாக, கடலில் சாய்ந்து விட்டது. இதற்கிடையில், படகுகள் மூலம் பயணிகள், அருகில் உள்ள தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் மீட்புக் குழுவினர் வந்து, எங்களை மீட்டு, அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைத்தனர். மறுநாள், அனைவரும் ரோம் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம், சென்னை வந்து சேர்ந்தோம். நாங்கள் வைத்திருந்த பாஸ்போர்ட், சான்றிதழ்கள், கடலில் மூழ்கி விட்டன. எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.


கப்பல் விபத்தில் தப்பிய 7 பேர் திருச்சி வருகை: கொழும்பிலிருந்து திருச்சி வந்த கிங்பிஷர் விமானம் மூலம், கப்பல் விபத்தில் சிக்கிய ஏழு பேர், நேற்று அதிகாலை 3 மணிக்கு, திருச்சி வந்தனர். இவர்கள், சொகுசு கப்பலில் கேட்டரிங் பிரிவில் பணியாற்றியவர்கள். மறு பிறவி கண்டது போல், விபத்தில் சிக்கிய கப்பலிருந்து தப்பி, நேற்று அதிகாலை, திருச்சி விமானம் நிலையம் வந்த துறையூர் ராஜா,25, பொன்னமராவதி ராஜாகுமார்,35, கொடுமுடி கார்த்திகேயன்,24, சேலம் கிருஷ்ணன்,27, அறந்தாங்கி முத்துக்குமார்,31, சிவகாசி செல்வக்குமார்,25, நெய்வேலி ராஜ்குமார்,25, ஆகிய ஏழு பேரையும், அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.


100ம் ஆண்டில் மற்றொரு டைட்டானிக் சம்பவம்: கடந்த, 1912ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வெள்ளிக் கிழமை தான், "டைட்டானிக்' என்ற சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி, அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த, 100வது ஆண்டுக்கு, இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், சரியாக, 13ம் தேதி வெள்ளிக் கிழமையே கோஸ்டோ கான்கார்டியா சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X