சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை: 9ம் வகுப்பு மாணவர் கைது

Updated : பிப் 10, 2012 | Added : பிப் 09, 2012 | கருத்துகள் (83)
Share
Advertisement
சென்னை: பள்ளிக்கு சரியாக வராத மாணவர் குறித்து, ரிப்போர்ட் எழுதிய பெண் ஆசிரியரை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். 160 ஆண்டு பழமையான பள்ளி: சென்னை, பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது, செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் தனியார் பள்ளி; 160 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 1,500 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஏழு ஆண்டுகளாக, இந்தி மற்றும் அறிவியல் பாட

சென்னை: பள்ளிக்கு சரியாக வராத மாணவர் குறித்து, ரிப்போர்ட் எழுதிய பெண் ஆசிரியரை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.


160 ஆண்டு பழமையான பள்ளி: சென்னை, பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது, செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் தனியார் பள்ளி; 160 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 1,500 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஏழு ஆண்டுகளாக, இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றுபவர், உமாமகேஸ்வரி,39. மந்தைவெளியில் வசிக்கும் இவரின் கணவர் பெயர் ரவிசங்கர்; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள். உமாமகேஸ்வரி, சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனின் உறவினர். ஏழுகிணறு, போர்ச்சுகீசியஸ் தெருவை சேர்ந்தவரின், 15 வயது மகன், இந்த பள்ளியில், ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறான். பள்ளியில், காலை 9.15 மணிக்கு வகுப்புகள் துவங்குவது வழக்கம். ஒவ்வொரு பாட வேளை முடிந்ததும், ஆசிரியர்கள், வகுப்பு மாறிச் செல்வது வழக்கம். இரண்டாம் பாட வேளை முடிந்ததும், மூன்றாம் பாட வேளை துவக்குவதற்காக, ஆசிரியை உமா மகேஸ்வரி, பத்தாம் வகுப்பு அறைக்குச் சென்றார்.


மாணவன் கொலவெறி: அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். முதலில், கழுத்து பகுதியில் வெட்டியதும், ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில், ஆசிரியையின் கழுத்து நரம்புகள் வெட்டுப்பட்டன. அடுத்து, முகம், வயிறு மற்றும் இடுப்பு என, மொத்தம் ஏழு இடங்களில் குத்தினான். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற மாணவர்கள், சக மாணவன், கையில் கத்தியுடனும், ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதையும் பார்த்து, பதட்டமடைந்து, பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பள்ளி முதல்வர், மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆசிரியையை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, ஆசிரியை உமாமகேஸ்வரி இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உமாமகேஸ்வரியின் கணவர், உறவினர் நாஞ்சில் குமரன் உள்ளிட்டோர், அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.


பெற்றோர், மாணவர்கள் பதட்டம்: சம்பவ இடம் விரைந்த போலீசார், கையில் கத்தியுடன் நின்ற மாணவனை, கைது செய்தனர். மதிய சாப்பாட்டுக்கு பிள்ளைகள் வராததாலும், கொலை பற்றிய செய்தியை அறிந்ததாலும், பீதியடைந்த பெற்றோர், பொதுமக்கள், பள்ளி முன் திரண்டனர். பள்ளி நுழைவாயில், இழுத்து பூட்டப்பட்டது. கொலை செய்த மாணவனை, போலீசார் அழைத்துச் சென்றதும், மற்ற மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


திங்கள் வரை பள்ளி விடுமுறை: கொலை சம்பவத்தை அடுத்து, வரும் திங்கள் கிழமை வரை, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க, பள்ளி முன், அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து, பள்ளி நிர்வாக உறுப்பினரான போஸ்கோ பெரியநாயகம் கூறியதாவது: ஆசிரியருக்கு மாணவர்களிடத்தில் நல்ல பெயர்: இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டமானது. கொலை செய்யப்பட்ட ஆசிரியர் உமாமகேஸ்வரி, எங்கள் பள்ளியில், ஏழாண்டுகளாக ஆசிரியராக உள்ளார். மாணவர்கள் மத்தியில், அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. கொலை செய்த மாணவன், எப்போதும் அமைதியாக, யாரிடமும் அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளாதவர். பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பவர். இது தொடர்பாகத் தான், ஆசிரியர் ரிப்போர்ட் எழுதி, பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் அனுப்பியுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த மாணவன், ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சம்பவம் நடந்தபோது, வேறு யாரும் கத்திக்குத்து சம்பவத்தை பார்க்கவில்லை. சம்பவம் நடந்த பிறகே, அலறல் சத்தம் கேட்டு, மாணவர்களும், ஆசிரியர்களும் சென்று பார்த்துள்ளனர். இது தொடர்பான அனைத்து விசாரணைக்கும், பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு போஸ்கோ பெரிய நாயகம் கூறினார்.


* ஆர்.ஆனந்தகிருஷ்ணன், பெற்றோர், திண்டுக்கல்: மாணவர்களின் மன அழுத்தமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம். தற்போது, பள்ளிகளில் கல்வியை திணிக்கின்றனர். பாடம் படிப்பது மட்டுமே பிரதானமாக உள்ளது. விளையாட்டு, கலை, தியானம் போன்ற துறைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை. சில பள்ளிகளில் உள்ள கட்டுப்பாடுகளால், ஆசிரியர்- மாணவர் உறவு சீராக இல்லை. ஆசிரியர்களை எதிர் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். மாணவர்களை கையாளுவதில் சில பள்ளிகள் தவறி விடுகின்றன. மாணவர்களுக்கு தண்டனை அளிப்பதை தவிர்த்து, வேறு வகைகளில் தவறுகளை உணர்த்தலாம். புத்தகம் மட்டும் படிப்பு அல்ல. இதில், அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. சில பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. பெற்றோரின் தவறுகளும், தாக்கமும் மாணவர்களை பாதிக்கின்றன. மாணவர்- ஆசிரியர் உறவை சீராக்கினால் தவறுகளுக்கு இடம் இல்லை.


கொலை நடந்தது எப்படி: பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் உள்ள ஏ, பி, மற்றும் சி உள்ளிட்ட பிரிவில், இந்தி மொழி பயில்பவர்கள், வெறும் ஆறு பேர் மட்டுமே. அதில், கொலை செய்த மாணவனும் ஒருவன். இவன், ஒன்பதாம் வகுப்பில், ஏ பிரிவில், படித்து வருகிறான். இந்த ஆறு பேருக்கும், கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள, பத்தாம் வகுப்பு, "சி' பிரிவு அறையில், இந்தி பாடம் நடப்பது வழக்கம். நேற்றும், பாடம் நடத்துவதற்காக, ஆசிரியை உமாமகேஸ்வரி வகுப்பறைக்குச் சென்றபோது, இந்த மாணவன் தவிர, வேறு யாரும் வந்திருக்கவில்லை. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மாணவன், 10.50 மணியளவில், ஆசிரியையை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசிரியையை பார்த்து, ரத்தம் தோய்ந்த கத்தியுடன், வெறித்தபடி நின்றிருக்கிறான். மற்ற ஐந்து மாணவர்களும், இந்த நேரத்தில் தான் வகுப்பறைக்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த ஆசிரியையையும், கையில் கத்தியுடன் மாணவனையும் பார்த்து, அதிர்ச்சியடைந்து, உடனே பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து, கூடுதல் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: மாணவன் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர். அவரைப் பற்றிய மற்ற விவரங்கள் குறித்து, எதுவும் கூறமுடியாது. அவர், ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். முதல் கட்ட விசாரணையில், கத்தியை காகிதத்தால் மூடி, பள்ளிக்கு எடுத்து வந்திருப்பது தெரிகிறது. ஆசிரியையை, ஐந்துக்கும் மேற்பட்ட இடத்தில் குத்தியுள்ளார். நடந்த சம்பவத்தை அடுத்து, மாணவன், அதிர்ச்சியில் இருக்கிறான், என்றார்.


கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் குறித்து, அவன் பயிலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவனது நண்பர்கள் கூறியதாவது: மாணவன், எப்போதும் அமைதியாகவே இருப்பான். யாரிடமும் அவ்வளவாகப் பேச மாட்டான். சமீபத்தில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்விலும், குறிப்பிடும்படி மதிப்பெண் இல்லை. பள்ளி வருகை நாட்களும் குறைந்து இருந்ததால், ஆசிரியை, "ரிப்போர்ட்' எழுதி, அவனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நிலையில் தான், மாணவன், ஆசிரியையை குத்திக் கொன்றுள்ளான்.


மதுரையில் அஞ்சலி: திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9, 10ம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள், சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமாமகேஸ்வரிக்கு நேற்று மவுன அஞ்சலி செலுத்தினர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் காசிப்பாண்டி, பேரையூர் பொறுப்பாளர் அழகுமுருகன் பங்கேற்றனர். சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், வாடிப்பட்டி வட்டார பொறுப்பாளர் முருகன் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலூரில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகி பாண்டியராஜன், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி சார்லஸ், அருள்செல்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


மாணவனுக்கு பரிசோதனை: பாரிமுனை தனியார் பள்ளியில், ஆசிரியை உமாமகேஸ்வரியை கத்தியால் குத்திய மாணவன், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு வயது, 15. மாணவன், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருப்பதாக போலீசார் கருதுவதால், அவனுடைய வயது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்ய, நேற்று மாலை, அரசு மருத்துவமனைக்கு மாணவன் அழைத்துச் செல்லப்பட்டதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மாலையே, ஆசிரியை உமாமகேஸ்வரியின் உடல், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


மாணவர் சமுதாயத்தைக்கெடுக்கும் சினிமா, "டிவி': பள்ளியிலேயே மாணவனால் ஆசிரியை கொல்லப்பட்டது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்? எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவ சமுதாயமே, கையில் கத்தி எடுத்தால் நாடு என்னாகும்?


ஆசிரியர்கள், பெற்றோரிடம் கேட்ட போது...


* தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன்: வன்முறையை சினிமா, "டிவி'க்களில் பார்த்துவிட்டு, மாணவர்கள் அதேமாதிரி நடக்க முயற்சிக்கின்றனர். மாணவர்களை கண்டிக்கக் கூடாது என பெற்றோர் மற்றும் அரசு கூறுவதால் தண்டிக்க முடியவில்லை. எனவே மாணவர்கள் நாம் செய்வதெல்லாம் சரியானதுதான் என கருதுகின்றனர். எனவே இது குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, ஆசிரியர்களுக்கு சரியான, தெளிவான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள், அறிவுறுத்துதல்களை வழங்க வேண்டும்.


* தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் எம்.சேவியர்: மாணவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என, அரசு ஆசிரியர்களின் கையை கட்டிப்போட்டுள்ளது. எனவே அவர்களை திருத்துவதற்குக்கூட, ஆசிரியர்கள் சுயமாக செயல்பட முடிவதில்லை. "தன்மகனை குச்சியால் அடித்து திருத்தாத தகப்பன், மகனுக்கு எதிராக பாவம் செய்கிறான்' என்பது பைபிள் வாசகம். எனவே மாணவர்களை குறிப்பிட்ட வயது வரை கண்டித்து திருத்த வேண்டும். அது இல்லாததற்கு சினிமா, "டிவி' காரணம். நடத்தை சரியில்லையெனில் அதை பெற்றோருக்கே தெரியப்படுத்தக் கூடாது என மாணவர்கள் கருதுகின்றனர். அவர்களை உளவியல் ரீதியாக நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் நல்லது, கெட்டது தெரிவதற்கான வயது வரை கண்டிப்பதில் தவறேதும் இல்லை.


* மதுரை மனநல நிபுணர் டாக்டர் சி.ராமசுப்ரமணியம்: சமுதாயம் சீரழிவை நோக்கிப் போவதையே இந்த சம்பவம் காட்டுகிறது. முன்பெல்லாம் ஆசிரியர்-மாணவர் உறவு குரு-சீடர் உறவாக இருந்தது. மாணவரின் குடும்பத்திற்கே ஆசிரியர் வழிகாட்டியாக இருந்தார். ஆனால் இப்போது வியாபார நோக்குடைய உறவாக போய்விட்டது. ஒரு ஆசிரியர் இல்லையெனில், வேறு ஆசிரியர் மூலம் மதிப்பெண்ணையும், அதன்மூலம் எதிர்காலத்தில் பணத்தையும் சம்பாதிக்கலாம் என மாணவர்கள் கருதுகின்றனர். பெற்றோரின் வளர்ப்பு முறை, அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், மாணவர் தவறு செய்யும்போது அவர்களாலேயே கண்டிக்க முடிவதில்லை. அப்படி இருக்கும்போது, ஆசிரியர்கள் கண்டிக்கும்போதும் ஆத்திரப்படுகின்றனர். தாங்கள் வைத்ததே சட்டம், செய்வதே நடைமுறை என கருதுகின்றனர். முன்பிருந்த நீதி, நியாயம், ஒழுங்கு முறை இல்லாததற்கு சினிமா, டிவி காரணம். மாணவர்களை திருத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் அவசியம். இதற்காகவே உலக சுகாதார அமைப்பானது மாணவர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சியில் குறிக்கோளுடன் வாழ்வது எப்படி, பொறுமை, சகிப்புத்தன்மை, ஒழுக்கம் போன்ற 10 விஷயங்களில் பயிற்சி அளிக்கும்படி தெரிவித்துள்ளது. பெற்றோருக்கும் கவுன்சிலிங் தேவை.


ஒழுக்கக் குறைபாடு, மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது


""சூழ்நிலை காரணமான மன அழுத்தம், அதிக உணர்ச்சிவசப்பட்டு தவறான செயலுக்கு தூண்டும்'' என, அரசு மன நல மருத்துவர் ஆனந்த பிரதாப் தெரிவித்துள்ளார்.


ஆனந்த பிரதாப் கூறியதாவது: மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளைக் கூறி வளர்க்க வேண்டும். குறையை மட்டும் சுட்டிக் காட்டுவது, வன்முறையைத் தூண்டும் காட்சிகள் போன்ற காரணங்களால், அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். சிறு வயதிலிருந்தே, ஒழுக்க நெறிகள், தோல்வியுற்றால் ஊக்கப்படுத்துவது போன்ற செயல்களில், பெற்றோர் ஈடுபட வேண்டும். வீட்டில் பெற்றோர் பிள்ளைகளை திட்டுதல், வெறுப்பைக் காட்டுதல் போன்ற நிகழ்வுகளும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பாகப் பழகாமல் இருப்பது, தவறை மட்டும் சுட்டிக் காட்டுவது, பாடத்தில் தோல்வியுற்றால் திட்டுவது போன்ற செயல்களால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இது, தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. இந்த குழந்தைகள், "சூழ்நிலை காரணமான மன அழுத்தம்' (கான்டக்ட் டிஸ்சார்டர்) நோய்க்கு தள்ளப்படுகின்றனர்.


மன அழுத்தத்திற்கு தீர்வு:


பெற்றோர்களுக்கு...
* குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
* கேட்பதை உடனடியாக வாங்கித் தராமல், காலம் தாழ்த்தி வாங்கிக் கொடுக்க வேண்டும்.
* அதிக செல்லம் கொடுக்கக் கூடாது.
* குறைகளை அன்போடு சுட்டிக் காட்டி திருத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு...
* அன்போடு நடந்து கொள்ள வேண்டும்.
* தேர்வில், விளையாட்டில் தோற்றால், ஊக்கப்படுத்தும் கதைகள் மற்றும் முயற்சியால், முன்னேறியவர்கள் கதையைக் கூற வேண்டும்.
* தலைமையாசிரியர் வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம், கண்டிக்கும் விதம் போன்றவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
* பள்ளிகளில் ஒழுக்க நெறி வகுப்புகளை, கட்டாயம் நடத்த வேண்டும்.


"இந்தி சினிமாவை பார்த்து கொல்ல தெரிந்து கொண்டேன்': ஆசிரியை "பிளாக் மார்க் ரிப்போர்ட்' எழுதியதால் கொன்றதாக மாணவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆசிரியை உமா மகேஸ்வரியைக் கொலை செய்த மாணவர் போலீசாரிடம் கூறியதாவது: பள்ளிக்கு அடிக்கடி லீவு போட்டதால், ஆசிரியை "பிளாக் மார்க் ரிப்போர்ட்' எழுதினார். இதனால், ஆசிரியை மீது கோபம் அதிகமாகி கொலை செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன். ஆனால், எப்படி கொலை செய்வது என தெரியாமல் இருந்தபோது, "அக்னி பாத்' என்ற இந்தி படத்தை பார்த்து கொலை செய்வதை தெரிந்து கொண்டேன். இதற்காக கடையில் 10 ரூபாய் கொடுத்து கத்தியை வாங்கினேன். அதை, பேப்பரில் மறைத்து பள்ளிக்கு எடுத்து சென்றேன். சந்தர்ப்பம் கிடைத்தபோது, ஆசிரிரியை கழுத்து, கை, வயிற்றுப் பகுதியில் வெட்டினேன். இவ்வாறு மாணவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan Amuthakuamar - woodlands,சிங்கப்பூர்
11-பிப்-201200:35:24 IST Report Abuse
Murugan Amuthakuamar நான் என்ன சொல்ல வரேன், அந்த மாணவன் இருந்தாலும் இப்படி கொலை செய்யகூடாது. அந்த மேடம் குடும்பத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்..மு.அமுதகுமார் காட்டுடையார் .சிங்கபூர்
Rate this:
Cancel
sudha - chennai,இந்தியா
10-பிப்-201220:26:33 IST Report Abuse
sudha Evil doers, be it young or old, must be severely punished. Then everything will be set right, as it would enable them to realize the mistakes they did and the chance of committing such errors would be reduced. If the boy (who murdered his teacher mercilessly and left her husband and children semi-orphaned is not punished), such evil - doers will take advantage of it. May the good God come to the aid of the two female children who have lost their one and only mummy by sing some human messengers. I pray that such evil doers like this boy may realize the value of a human being and behave like human beings
Rate this:
Cancel
Ramkumar Venkataraman Venkataraman - Chennai,இந்தியா
10-பிப்-201219:34:42 IST Report Abuse
Ramkumar Venkataraman Venkataraman சில நாட்களுக்கு முன்பு வடபழனிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன், கூட்டம் அதிகமில்லை,என்னையும் சேர்த்து ஐந்து பேர் இருந்தோம். ஒரு இளைஞன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் இருமிகொண்டிருந்தார் இரு பெண்மணிகள் (வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள் ) வேறு யாரும் இல்லை. கண்டக்டர் "பேப்பர் ல என்ன தம்பி செய்தி ?" என்றார் "என்ன அக்கிரமம் பாருங்க அம்பத்துர்ல ஒரு ஸ்கூல் பையன் வாத்தியார் திட்டினார்னு தூக்கு போட்டுகிட்டானாம் ..இந்த வாத்யாருங்களுக்கு எப்படி பாடம் சொல்லி தர்றதுன்னே தெரியல்ல ..பாவம் அந்த பையன் உசிரு போயிடுச்சி .." "ஏன் தம்பி அந்த வாத்தியார் ஏன் திட்டினாராம்.?" என்றார் பெரியவர். "அது ஒண்ணும் இல்லைங்க அந்தபையன்தான் எப்பையும் கிளாஸ் பஸ்ட் வருவானாம் .. இந்தவாட்டி அவனுக்கு உடம்பு சரி இல்லை ரெண்டு மாசம் ஸ்கூல் போகல்ல அதுனால் என்ன பண்ணிட்டான் முழு ஆண்டு தேர்வுல பிட் அடிச்சிட்டான் அதை அந்த வாத்தியார் பார்த்து கண்டிச்சிட்டு பேப்பர பிடிங்கிகிட்டு போயிட்டாரு .. இதுதான் விஷயம் ..இப்ப சொல்லுங்க அந்த வாத்தியார் பண்ணினது தப்புத்தான ??" விவாதம் சூடு பிடித்தது "என்ன தம்பி பேசற .. அந்த பைய்யன் செஞ்சது தப்புத்தான ?" "அதுக்காக கண்டிக்கலாமா இப்படி அப்படின்னு திட்டலாமா? இப்ப பாருங்க பையன் செத்து போய்ட்டான் ?" "சரி அவன்தான் நல்ல படிக்கற பையனாச்சே ஏன் பிட் அடிச்சான் தெரிஞ்சத எழுதினாலே பாஸ் ஆயிடுவானே ?" "யோவ் பெருசு விஷயம் புரியாம பேசாத ..அவன் அவங்க வீட்டுக்கு ஒரே பையன் இப்ப என்ன ஆச்சு ..? யாரு பொறுப்பு ?" "தம்பி ஆசிரியர்கள் கண்டிக்கனும்தான் அப்பத்தான் பசங்க ஒழுங்கா படிப்பாங்க இந்த காலத்துல குடும்பம் சின்னதா போயிட்டுது .. ஒரே குழந்தையோட நிறுத்திகிட்டாங்க..ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்கறாங்க..இதமாதிரி பசங்க எல்லாம் பின்னாடி எப்படி உருப்புடுவாங்க..? தாங்கும் சக்தி மனதுக்கு இல்ல .. கோழையா இருக்காங்க அந்த பையன் நல்லா படிக்கற பையன்னு சொல்றிங்க அவன் நிலவரத்த ஒழுங்கா தலைமை ஆசிரியர்கிட்டக்க சொல்லி இருந்தா காலாண்டு அறையாண்டு மார்க்க வெச்சியே பாஸ் போட்டிருப்பாங்க... இதுக்கு உதாரணங்கள் இருக்கு " பெரியவர் காரசாரமாக விளாசிக்கொண்டிருந்தார். "தம்பி .. எங்க காலத்துல எங்க அப்பா ஆசிரியர் கிட்டக்க சொல்லுவாங்க " அய்யா என் பையன் ரெண்டு கண்ண மட்டும் விட்டுடுங்க மீதி என்ன வேணா செய்யுங்க" அப்படின்னுதான் சொல்லுவாங்க அதுனாலதான் நாங்க இந்த அளவுக்காவது நல்லா இருக்கோம் ... உங்களோட வாதம் தப்பு இதே நிலைல உங்க பையன வளர்த்து கெடுத்துடாதீங்க.... தங்கத்த அடிச்சாதான் நகைய பண்ணலாம் ...கத்திய வெச்சித்தான் அறுவ சிகிச்சை செய்யணும் அதுக்கு பயந்த முடியுமா ? போப்பா வேலைய பாரு .." கைதட்டல் கேட்டது . தட்டியது இரு பெண்மணிகள் -ஒருவிஷயம்.... இருவரும் ஆசிரியைகள் -ராம்ஜி-சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X