பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்தலசயனப் பெருமாள் கோவில்: தொல்லியல் துறை நடத்தலாமா?

Added : ஆக 05, 2012 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஸ்தலசயனப் பெருமாள் கோவில்: தொல்லியல் துறை நடத்தலாமா?

மல்லையில் எழுந்துள்ள சர்ச்சை! ஸ்தல சயனப் பெருமாள் கோவிலை மத்தியத்தொல்லியல் துறை எடுத்தாள்வது சரியா? என்பதாகும். மாமல்லபுரத்தின் நடுவில் அமைந்துள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை, மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி, மேம்படுத்துதல் சார்பாக சமீபத்தில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. மத்தியத் தொல்லியல் துறையின் எ.எம்.எ.எஸ்.ஆர்., சட்டத்தின் கீழ், ஸ்தல சயனப் பெருமாள் கோவில், ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலமாக அறிவிக்கப்பட உள்ளது. உலக புராதனச் சின்னங்களில் ஒன்றான மாமல்லையுள் இக்கோவிலும் அடங்கும். அரசியல்வாதிகள் கூக்குரலுக்கும், உள்ளூர் சுயநலவாதிகளின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல், கோவிலுக்கும், அந்த தலத்திற்கும், இந்த சட்டத்தினால் வரும் நன்மைகளை மனதில் கொண்டு, மக்கள் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதனை விளக்கவே இந்த கட்டுரை.


வரலாற்று பெருமை: மாமல்லபுரத்திலுள்ள அனைத்து சின்னங்களும், உலக புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை என்பது எல்லாரும் அறிந்ததே. உலக சின்னங்கள் நிபுணர்களின் கூற்றின்படி, "மனித வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த வரலாறின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் இடம்' என்று கூறப்பட்டுள்ளது. மகேந்திர பல்லவன் மகேந்திரவாடி, மண்டகப்பட்டு, தளவானூர் என்று பல இடங்களில் குடைவரைக் கோவில்களை பாறைகளைக் குடைந்து செய்த பின்னர், இந்த கடற்கரையைக் கண்டதும்தான் எல்லா கலை அம்சங்களும் வெளிப்படுத்தும் விதமாக, இங்கிருந்த பாறைகளில் எல்லாம் பல உருவங்களையும், சின்னங்களையும் படைக்கிறான். தன்னை, "விசித்திரச் சித்தன்' என்றும் கூறிக் கொள்கிறான். காலத்தால் அழியக் கூடிய மண், சுண்ணாம்பு, உலோகம், மரம் ஆகியவற்றைத் தவிர்த்து, என்றும் நிலையாக இருக்கக் கூடிய கல்லிலே எமது இறைவனும், அவனது கோவிலும் சமைப்பேன். எனவே, நான் விசித்திரச் சித்தன், என்று தன்னை பறைசாற்றிக் கொள்கிறான். அதுவரை அழியக்கூடிய பொருள்களால் செய்யப்பட்ட கோவில்களும், சிலைகளும் கல்லிலே செதுக்கியதற்கான முன்னோடி, மகேந்திர பல்லவன். அவனும் அவன் பின் மூன்று தலைமுறைகளுக்கும் பல்லவர்களின் பங்களிப்பால், மல்லையில் கோவில்களும், புடைப்புச் சிற்பங்களும் எழுந்தவண்ணம் இருந்தன. எனவேதான், குடைவரைக் கோவில், புடைப்பு சிற்பங்கள், தனி முப்பரிமாண சிற்பங்கள், ஒரே கல்லில் வடிக்கப்பட்ட கோவில்கள், அடுக்கிவைத்துக் கட்டப்பட்ட கோவில் என்று கோயிற் கலையின் எல்லா வளர்ச்சியையும் ஒரே இடத்தில் பல்லவர்கள் காட்டியதை உலக வரலாற்று நிபுணர் குழு, "மனித வரலாற்றின் மிகப்பெரிய முன்னேற்றப் பாதைக்கான அடையாளம்' என்று சிலாகித்துப் போற்றுகிறது. கடந்த 1984ல், மல்லையும், அதனுள் அமைந்த அனைத்து கலைகளும், உலகச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. அன்று முதல், இன்று வரை அந்த குழுவின் பரிந்துரைபடியே, புனரமைப்பும், பராமரிப்பும் நடந்து வருகின்றன.


உலகச் சின்னம்: உலகச் சின்னம் என்று அறிவித்த நாளிலிருந்து, அந்த குழு காலங்காலமாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லா சின்னங்களையும் அவ்வப்போது பார்வையிட வரும். அப்போது அவ்விடங்களில் உள்ள எல்லா நிலம், பொருள், சின்னங்கள் ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டு, ஒரு வரைப்படம் தயாரிக்கப்படும். பின்னர், பல காலகட்டங்களில், அக்குழுவின் பரிந்துரையின்படி, புனரமைப்பும், பராமரிப்பும் நடந்தால் மட்டுமே உலக சின்னம் எனும் அந்தஸ்து நிலை நிறுத்தப்படும். மல்லையைப் பொறுத்தவரை, மல்லை சின்னங்கள் மட்டுமல்லாது, முழு ஊரும், அதன் சுற்றுப்புறமும் எவ்வாறு சுத்தப்படுத்தி அகலப்படுத்தி, உலக தரத்திற்கு மேம்படுத்தவேண்டும் என்ற கட்டமைப்பு வரைபடம் "ஹட்கோ' வினர் தயாரித்து பணிகள் மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டன. அப்போது மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஜெகன்மோகன், தனிக் கவனத்துடன் செயலாற்றி, மல்லைக்கு உலகச் சின்னம் அங்கீகாரம் பெற மிகவும் முனைந்து தமது துறை, தொல்லியல் துறையினர், மற்றும் ஹட்கோ அதிகாரிகளுடன் நித்தம் கலந்தாலோசித்து, குழுக்களின் பரிந்துரையை உடனுக்குடன் நிறைவேற்றினார்.


சீரமைப்பு: முதல் கட்டமாக, கடற்கரைக் கோவில் சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் தோட்டங்கள் மற்றும் வேலிகள் அமைத்து செப்பனிட்டார்கள். 2005ல் இப்பணிகள் நிறைவடைந்தன. இரண்டாம் கட்டமாக, பஞ்ச பாண்டவர் ரதம் எனப்படும் இடம் சீரமைக்கப்பட்டு, அங்குள்ள உள்ளூர் கல்தச்சர்கள், ஸ்தபதிகளுக்கான கடைகளும் ஒதுக்கப்பட்டு, சங்கு மற்றும் கைவினைப்பொருட்கள் வியாபாரிகளுக்கான கடைகளுக்கான இடங்களையும் ஒதுக்கித் தந்தது மத்திய தொல்லியல் துறை. இதனால் கலைப் பொருட்களை வாங்குபவர்கள், தயாரிக்கும் கலைஞரிடமே விலை பேசி வாங்க வழிசெய்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. சின்னங்களைச் சுற்றி அழகிய பூங்காக்களும், சின்னங்களை பராமரிக்க நிரந்தர பணியாளர்களும் உள்ளனர். மூன்றாம் கட்டப் பணிகள் அர்ச்சுனன் தவசுப் பாறையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களைப் பராமரித்தலுமாகும். இந்த உலகப் பிரசித்தி பெற்ற பாறையின் முன்னேதான் சர்ச்சைக்குட்பட்டுள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவில் உள்ளது. உலகத் தர சின்னங்களிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு, எந்த மாற்றங்களும், நவீன கட்டடங்களும் வரலாகாது என்பதே சட்டம். உதாரணமாக, கர்நாடகாவிலுள்ள ஹம்பி கோவில்கள் உலகச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. அப்போது இருந்த அரசு, பத்மாவதி ஆற்றின் குறுக்கே ஒரு நவீன அணை கட்டியது. உடனடியாக அதனை நீக்கவில்லையெனில், ஹம்பி கோவில்கள் உலகதரச் சின்னம் என்ற அந்தஸ்தை இழந்துவிடும் என்ற எச்சரிக்கை வந்ததும், அந்த பாலத்தையே கர்நாடக அரசு உடைந்தெடுத்துவிட்டது! நவீன முறையில் அருகே உணவு விடுதிகளும், தங்கும் அறைகளும் கட்டுதல், கடை விரித்தல் ஆகியவை அந்த சூழலில் புராதனத் தன்மையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றி நவீன இயந்திரங்களால் தோண்டும் போது சின்னங்களில் விரிசல்கள் தோன்றக் காரணமாக கூட அமையலாம்! எனவேதான் இந்த பாதுகாப்பு எச்சரிக்கை.


ஒரு தனியாரின் பரம்பரை பரிபாலன நிறுவனமும், இந்து அறநிலையத்துறையும் இணைந்துதான், ஸ்தலசயனப்பெருமாள் கோவிலை நிர்வகிக்கிறது. இன்ன பிற கோவில்கள் புனரமைக்கும் போது, சிமென்ட், ரசாயனப் பெயின்ட்டுகள் கொண்டே இவர்களால் வேலைகள் நடத்தப்படுகின்றது என்பது பொதுவாகத் தெரிந்த விஷயம். மத்தியத் தொல்லியல் துறை தன் கீழ் உள்ள எல்லா சின்னங்கள், கோவில்கள், பழமை மாறாமல், சுண்ணாம்பு மற்றும் கற்களைக் கொண்டே செப்பனிடுகிறது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். எனவே, மல்லை கோவிலும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தால், கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும், பாதுகாக்கப்படும், பராமரிக்கப்படும். மேற்படி செலவுகள் அனைத்தையும் மத்தியத் தொல்லியல் துறையே பார்த்துக் கொள்ளும்.


நேரில் பார்த்தது...: சமீபத்தில், ரீச் பவுண்டேஷன் சார்பில் கம்போடியா செல்லும் சுற்றுலாக் குழுவை வழிநடத்திச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. அப்போது, பழங்காலச் சின்னங்களைப் பேணி காப்பதில், நம்மைவிட வருமானம் குறைவாக உள்ள நாடுகள் பல, சிறப்பாக செயல்பட்டுவருகின்றன என்பதை கண்கூடாக அறிந்து கொண்டேன். உதாரணமாக, இந்துக் கோவில்களும், புத்தர் கோவில்களும், மடங்களுமாக ஒரு சேரக் காணக் கிடைக்கும் கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் வளாகத்தில், 2 கி.மீ., முன்னரேயே எந்த வாகனங்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20,000 மக்கள் வருகை தரும் அம்மாபெரும் கோவில்கள் வளாகத்தை, "அப்ஸரா' எனும் அந்நாட்டின் அரசுதுறை பராமரித்து வருகிறது. அந்த 2 கி.மீ., தூரம் வரை எந்த புதுவீடுகளோ, நவீனக் கட்டடங்களோ காணமுடியவில்லை. பன்னாட்டு பராமரிப்பு நிறுவனங்களுடன் (இந்தியாவில் மத்திய தொல்லியல் துறை உட்பட) கலந்தாலோசித்து அவர்கள் மிகவும் செம்மையாக, உலக சின்னங்கள் குழுவின் பாராட்டைப் பெறும் வண்ணம் பழங்காலச் சின்னங்களைப் பேணி காத்து வருகின்றனர். இவர்களின் செயல்பாட்டை செம்மை படுத்த முன்னேறிய நாடுகள் பல, மனமுவந்து உதவுகின்றன. குறிப்பாக, அமெரிக்க அரசு பல நவீன முறைகளை புகுத்தியுள்ளது. உதாரணமாக, 3 - 4 நாட்களுக்குண்டான நுழைவுச் சீட்டினை சுற்றுலாப் பயணியின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக, ரூபாய் 40க்குள் தருகின்றனர்.


கனிவு: பல நவீனமயமாக்கப்பட்ட நாடுகளில் கூட இப்படிப்பட்ட வசதி கிடையாது. முக்கியமாக, அங்கோர்வாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய விஷ்ணு கோவிலில், 2 கி.மீ., தூரமும் நடந்தேதான் உள்ளே செல்ல வழியமைத்துள்ளனர். இம்மாதிரி உலகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட, வரலாற்றுச் சின்னங்களே தங்களது வருமானத்திற்கான நல்வழி என்றும், தங்கள் கலாசாரமே உலகினர் அங்கே வருவதற்கான வாயிலின் திறவுகோல் என்பதை உணர்ந்து செயல்படுகின்றன, வசதியும், பொருளாதாரமும், பராமரிப்பு வழிகளும் தெரிந்த நம் மக்களும், அரசும், ஒருமித்த சிந்தனையோடு உலகத்தரம் வாய்ந்த மாமல்லை போன்ற சின்னங்களை காக்க, தன் நலம் கருதாது, அச்சின்னங்களே நம் நாட்டின் பெருமை என்பதை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்க ஒருமித்து செயல்படமாட்டார்களா என்ற ஏக்கமே நம் மனதுள் எழுகிறது!


பூஜை நடக்கும்...: மக்களின் மற்றொரு கவலை கோவில் உற்சவங்கள், நித்திய பூஜைகள் முன்பு போல் நடக்குமா என்பதே. மத்திய தொல்லியல் துறையின் கீழ் வாழும் கோவில்கள் எனப்படும், (பூஜைகள் தொடர்ந்து நடக்கும் கோவில்கள்) பலப்பல. உதாரணமாக, வடக்கே பூரி ஜெகன்னாதர் கோவில், துவாரகா போன்றவை மக்கள் கூட்டம் அலைமோதும் சிறப்பான கோவில்கள். தமிழகத்தை எடுத்துக் கொண்டால், பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோவில், திருவிடந்தை நித்யகல்யாணசுவாமி ஆலயம் ஆகியவற்றில், இன்றும் ஆகம முறைகளின் படி நித்திய பூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.


- முனைவர் தியாக.சத்தியமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர், தலைவர் - ரீச் பவுண்டேஷன்


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
06-ஆக-201207:01:17 IST Report Abuse
Appan தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றிருகிரீர்களா ?. நெல்லையப்பர் கோவில் சுற்றி கடைகள். கோவில் இருக்கிரதே தெரியவில்லை. சிதம்பரம் நடராஜர் கோவில் எப்படி பராமறிக்கப்பட்டு உள்ளது ?. இந்த கோவில் கம்போடியாவின் ஆங்கர்வாட்டிர்க்கு அடுத்த பெரிய கோவிலாக இருக்கும். அப்படி பட்ட கோவில் மதில்கள் இடிந்த்து, கொவிலுள்ளே துர்நாற்றம் வீசுகிரது. ஏன் மதுரை மீனாட்சி கோவில் எப்படி உள்ளது ?. கோவிலை சுற்றி கசமுசா என்று கடைகள். ஒரு புண்ணிய சேஸ்த்திரதிர்க்கு சென்ற மாதிரி உள்ளதா ?. மதுரை தமிழினத்தின் சின்னம். அங்கு பல கோவிகள் இடிநிலயில் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலா கோவில்கள் சூரையாடப்பட்டு உள்ளன. திருவனந்தபுரம் கோவிலின் சொத்துக்கள் பாதுகாக்கப்படு இப்போ பல ஆயிரம் கோடிகள் உள்ளது. ஆனால் ஒரு தமிழக கோவிகளிலும் அப்படி ஒரு பொக்கிஷம் இல்லை. இந்த மன்னின் மைந்தர்கள் கோவிலை பாதுகாக்காமல் சுரண்டுகிரார்கள். தஞ்ஜை பெறிய கோவிலை தொல்பொருள் துறை பாறாமரிக்கிரது. அது கொஞ்ஜம் நேர்தியாக, ஒழுங்காக உள்ளது மற்ற தமிழக கோவிகளை தமிழா ஆரசு பராமறிக்கிரது. இந்த பராமறிப்பது என்பது உள்ளூர் அரசியள்வாதிகள் கொள்ளை அடிக்கிரதிர்க்கு. கொள்ளை அடிதாலும் பரவாக இல்லை எந்த கோவிலும் சுதமாக, சுகாதாரமாக உள்ளதா ?. கோவில்கள் தமிழைனத்தின் சரித்திரம், பாறாம்பாறியம். இதை போணி காப்பாற்றாவிட்டால் , தமிழினத்தின் சரித்திரம் அழிக்கப்பட்டுவிடும். கோவில்களை உள்ளூர்மக்களே பராமரித்தால் நல்லதுதான். இப்போ உள்ளூர் மக்கள் இதை சரிவர செய்ய முடியவில்லை அதனல் தொல்பொருள் துறை பராமரித்தால் கொஞ்ஜம் நல்ல இருக்கும்.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394