அத்வானியின் சர்ச்சை பேச்சால் பார்லிமென்டில் புயல்| Advani dubs UPA-II as 'illegitimate', creates storm in LS | Dinamalar

அத்வானியின் சர்ச்சை பேச்சால் பார்லிமென்டில் புயல்

Updated : ஆக 08, 2012 | Added : ஆக 08, 2012 | கருத்துகள் (88)
Share

அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. "பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது' என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது: அசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான். அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன. ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம். அசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர். அதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர். இது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு. ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது. இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது. இவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, "சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்' என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. "அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்' என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.

வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, ""வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,'' என்றார்.

மீண்டும் கோபம்: இப்போது மீண்டும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கோபம் கொண்டனர். "எப்படி திரும்பவும், அதுபோல கூறலாம்' என்று அத்வானியை நோக்கி, விரல் நீட்டி உலுக்கி எடுத்தனர். பதிலுக்கு பா.ஜ., - எம்.பி.,க்களும் கோபம் கொண்டு, களமிறங்க, சபை நிலைகுலைந்தது. 15 நிமிடங்களாக, இந்த களேபரம் நீடித்தபடி இருந்தது. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் எழுந்து, ""அசாம் பிரச்னை குறித்துதான், ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேச வேண்டும். அதை விட்டு விட்டு அத்வானி ஏதேதோ பேசுவது ஏற்கத் தக்கதல்ல. அவர் தன் பேச்சை வாபஸ் வாங்க வேண்டும்,'' என்றார். ஆனாலும், பிரச்னை முடியாமல் இழுத்துக் கொண்டே போக, அமளிக்கு மத்தியில் சபையை நடத்த முடியாது என்று உணர்ந்த சபாநாயகர், சபையை ஒத்திவைத்தார்.

அனைவருமே அமைதி: தி.மு.க., கொந்தளிப்பு: வழக்கத்துக்கு மாறாக நேற்று, சோனியா பெரும் கோபத்துடன் காணப்பட்டார். அத்வானியுடன் நேருக்கு நேராக, அவர் வார்த்தைகளை வீசி கோபத்துடன் பேசியது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தங்கள் தலைவி, இத்தனை உக்கிரமாக கோபப்படுகிறாரே என்று, எம்.பி.,க்கள் பலரும், சற்று கூடுதலாகவே தங்கள் பங்கிற்கு ஆவேசப் பட்டனர். "சட்டவிரோத அரசு' என, அத்வானி குறிப்பிட்ட போது முன்வரிசையில் இருந்த பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அமைதியாகவே இருந்தனர். ஆனால், சோனியா வெகுண்டெழுந்து, தன் எம்.பி.,க்களை குரல் கொடுக்கச் சொன்னார். சோனியாவும், அவரது கட்சி எம்.பி.,க்களும் ஆவேசமாக பேசிய போது, கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் ஆகியவை அமைதியாக வேடிக்கை பார்த்தன. அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளும் அமைதி காத்தன. பா.ஜ.,வை எதற்கெடுத்தாலும் எதிர்க்கும், லாலு பிரசாத் கூட நேற்று வாய் திறக்கவில்லை. ஆனால், சோனியாவின் ஆவேசத்தை கண்ட, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, மிக வேகமாக எழுந்து நரம்பு புடைக்க, அத்வானியை நோக்கி குரல் கொடுத்தார். மற்ற தி.மு.க., - எம்.பி.,க்களையும் எழுந்து, குரல் கொடுக்க வலியுறுத்தினார். இளங்கோவன், தாமரைச்செல்வன் போன்றோர் எழுந்து சில நிமிடங்கள் நின்று விட்டு அமர்ந்தனர். பாலு மட்டுமே கடைசி வரை, இடைவிடாமல் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஆட்சியிலும், கடந்த ஆட்சியிலும், சோனியா சபையில் எதுவும் பேசியதே கிடையாது. முன் வரிசையில் அமர்ந்து, அமைதியாகவே சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு விட்டு, கிளம்பி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X