புதுடில்லி: கூடங்குளத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் வேளையில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்த முடியாது என்றும் இதற்கு தடை விதிக்க முடியாது என்றும் இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்து விட்டது. இதனால் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பெரும் சம்மட்டி அடி விழுந்துள்ளது. இதனால் தற்போதைய போராட்டம் இனிமேல் சட்டப்பூர்வமாக ஏற்க முடியதாததாகிவிடும் இத்துடன் இவர்கள் போராட்டம் தொடர்ந்து நடத்துவது நியாயமற்றதாகி விடும்.
கூடங்குளத்தில் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட தயார் பணியில் முக்கிய எரிபொருளான யுரேனியம் நிரப்பும் பணி துவங்கவுள்ளது. இதற்கென டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் குழு முழு அளவில் ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு அறிக்கை அளித்ததும் யுரேனியம் நிரப்பப்படும். இந்த அளவிற்கு இறுதிக்கட்டத்தை எட்டி நிற்கும் வேளையில் உதயக்குமார் தலைமையிலான குழுவினர் போராட்டத்தை துவக்கினர். இது கடந்த 9ம் தேதி வன்முறையாக வெடித்தது. கடந்த வாரத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இநத மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியானது. 300 பக்கம் கொண்ட தீர்ப்பில் மனுதாரர்களின் அச்சம தேவையற்றது என்று கருத்து தெரிவித்தது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
விபத்துக்களை பட்டியலிட்ட வக்கீல் :
வழக்கில் மனுதாரர் சார்பில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார், இவர் தனது வாதுரையில் ; உலகம் முழுவதும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அணு உலை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களை பட்டியலிட்டு காட்டினார். சமீபத்திய புகுஷிமா விபத்தையும் இதனால் மக்கள் வெளியேற்றத்தை சுட்டிக்காட்டினார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றார். ஆனால் இவரது வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இது வரை யாரும் தடை இல்லை:
அரசு வக்கீல் வாதிடுகையில்; இந்த திட்டம் ரூ. 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு பிரச்னையில் மாநில அரசு மத்திய அரசு கமிட்டிகள் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். தமிழக அரசு முதலில் எதிராக இருந்து பின்னர் முழு அளவில் ஏற்றுக்கொண்டது. இந்த திட்டத்திற்கு இதுவரை எந்த இடத்திலும் தடை பெறப்படவில்லை . எனவே இந்த திட்டத்தை நிறுத்தும் பணிக்கு தடை விதித்தால் அரசுக்கு பெரும் நஷ்டம் வரும். மின்சார பிரச்னையை சமாளிக்க முடியாது எனவே தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.
இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கை விரித்து விட்டனர். இந்த வழக்கு வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஆய்வு அறிக்கைகளையும் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள் என்றும் நீதபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே தற்போது சட்டரீதியான தடை இல்லை. இதனால் போராட்டம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் 15 நாளில் யுரேனியம் நிரப்பும் பணி துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.