சென்னை : சங்கர நேத்ராலயா மற்றும் ஆர்வோ கண் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் "நீரிழிவு நோயினால் கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு' குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.
இக்கருத்தரங்கை துவங்கி வைத்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசும் போது, ""நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு நீரிழிவு விழித்திரை நோய் ஒரு பொதுவான கண் பிரச்னையாக அதிகரித்து வருகிறது.
கண் மருத்துவ நிபுணர்கள், மூலக் கூறியல் அறிவியலாளர்கள், நீரிழிவு இயல் நிபுணர்கள் தனித்தும் இணைந்தும் நீரிழிவு விழித்திரை நோய் மற்றும் அதன் அடிப்படை காரணிகள் குறித்து ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நோய் தடுக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்கர நேத்ராலயா அகடமி மூலம் நடத்தப்படும் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
கருத்தரங்கில் நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் கண் மருத்துவ துறை தலைவர் டாக்டர் அரூப்தாஸ் பேசும் போது, ""உலகின் தலை சிறந்த கண் மருத்துவ நிபுணர்கள், ஆய்வியல் அறிவியலாளர்கள், நீரிழிவு இயல் நிபுணர்கள் கலந்து கொள்வதால், இந்நோய் குறித்து சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், அதன் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேம்படுத்துவதற்கும் நல்ல வாய்ப்பாக இக்கருத்தரங்கு அமையும்,'' என்றார். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்கள். சங்கர நேத்ராலயாவின் கண் விழித்திரை நோய் மருத்துவப் பிரிவு தலைமை டாக்டர்கள் ராஜீவ்ராமன், காசிநாதன், சங்கர நேத்ராலயா கண் ஆராய்சி மையத் தலைவர் மாதவன், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தருண் சர்மா, டாக்டர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.