சொக்க வைத்த செய்னா நேவல்: ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 4

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (2012, ஜூலை 27-ஆக.,12) 30வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதற்கான துவக்க விழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்று பெருமை சேர்த்தார். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 46 தங்கம், 28 வெள்ளி, 29 வெண்கலம் உட்பட மொத்தம் 103 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது. இந்தியா சார்பில் 13 பிரிவுகளில் 83 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்), சுஷில் குமார் (மல்யுத்தம்) வெள்ளி வென்றனர். பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலம் கைப்பற்றினர். இதில், பாட்மின்டன் தனிநபர் பிரிவில் செய்னா அரையிறுதியில் சீனாவின் இகான் வாங்கிடம் வீழ்ந்தார். வெண்கலத்திற்கான போட்டியில் சீனாவின் சென் வாங் பாதியில் விலக, செய்னாவுக்கு வெண்கலம் பெறும் அதிர்ஷ்டம் அடித்தது. இதன் மூலம், ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 6 பதக்கங்கள் கிடைத்தன. இது, ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கமானது.

Advertisement