‘வெள்ளி’ நாயகி சிந்து: ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 3

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டி (2016, ஆக. 5-21) நடந்தது. இது, தென் அமெரிக்காவில் நடந்த முதல் ஒலிம்பிக். இதில் 207 நாடுகளை சேர்ந்த 11,238 பேர் பங்கேற்றனர். 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என, 121 பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அடுத்த இரு இடங்களை இங்கிலாந்து (27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம்), சீனா (26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம்) கைப்பற்றின. போட்டியை நடத்திய பிரேசிலுக்கு 13வது இடம் (7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம்) கிடைத்தது. இந்தியா சார்பில் 63 வீரர், 54 வீராங்கனைகள் என, 117 பேர் பங்கேற்றனர். துவக்க விழா அணி வகுப்பில், பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) தங்கம் வென்ற துப்பாக்கி இந்திய சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, மூவர்ணக் கொடி ஏந்திச் சென்றார். இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 58 கி.கி., எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக் ஷி மாலிக் வெண்கலம் கைப்பற்றினார். பாட்மின்டன் ஒற்றையரில் அசத்திய இந்திய வீராங்கனை சிந்து பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். தவிர இது, ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே, லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீராங்கனை செய்னா வெண்கலம் வென்றிருந்தார்.

Advertisement