விருந்து கொடுத்த மீராபாய் சானு * ‘லிப்ட்’ தந்த லாரி டிரைவர்களுக்கு...

இம்பால்: துவக்க காலத்தில் பயிற்சிக்கு செல்ல 'லிப்ட்' கொடுத்து உதவிய லாரி டிரைவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தினார் மீராபாய் சானு. இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 26. டோக்கியோ ஒலிம்பிக்கில் 202 கிலோ எடை துாக்கிய இவர், ஒலிம்பிக் அரங்கில் வெள்ளி வென்ற முதல் பளுதுாக்குதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து நாங்போக் காக்சிங் கிராமத்தை சேர்ந்தவர்.

துவக்க காலத்தில் தனது வீட்டில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ள இம்பால் விளையாட்டு அகாடமிக்கு சென்று வர பொது போக்குவரத்து வசதி சரியான நேரத்தில் கிடைக்காது. பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மீராபாய்க்கு, தனியாக வாகனத்தில் சென்று வரும் வசதியும் இல்லை. இதனால் இம்பாலுக்கு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் 'லிப்ட்' கேட்டு பயணம் செய்து, பயிற்சியில் ஈடுபட்டார்.

சரியான நேரத்தில் தனக்கு கிடைத்த உதவிகளை மறக்காமல் மனதில் வைத்திருந்தார் மீராபாய்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இவர், அதே வேகத்தில் பயணத்துக்கு 'லிப்ட்' கொடுத்த டிரைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்தார். சுமார் 150 பேருக்கு வீட்டில் விருந்து கொடுத்து மகிழ்வித்தார். பிறகு அனைவருக்கும் ஆடைகள், மணிப்பூரின் பாரம்பரிய சால்வையை பரிசாக கொடுத்தார்.

Advertisement