தங்கம் வென்ற அனுபவம்: நீரஜ் சோப்ரா பெருமிதம்

டோக்கியோ: ''ஈட்டி எறிதலில் சாதிக்க அசுர வேகம், வலிமை அவசியம். எனது அடுத்த இலக்கு 90மீ., இலக்கை எட்டுவது தான். தலையணை அருகில் தங்கப்பதக்கம் இருக்க, இரவில் நன்கு துாங்கினேன்,''என நீரஜ் சோப்ரா தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில்(87.58 மீ., துாரம்) அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த இவர், தங்க மகனாக ஜொலிக்கிறார். பதக்கம் வென்ற நாளின் அனுபவம் குறித்து நீரஜ் கூறியது:

ஈட்டி எறிதல் பைனலில் எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை. ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா பதக்கம் வென்றது இல்லை என்பது போன்ற விஷயங்கள் மனதில் தோன்றின. ஆனால் ஈட்டியை கையில் பிடித்ததும் மற்றவை எல்லாம் மறைந்து போயின. எனது செயல்பாட்டில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தேன். முதல் 'த்ரோ' சிறப்பாக இருந்தால் பதட்டம் இருக்காது. இதற்கேற்ப முதல் வாய்ப்பில் சிறப்பான துாரம் எறிந்தேன். இரண்டாவது வாய்ப்பிலும் சிறப்பான துாரத்தை எட்டியது நிம்மிதி அளித்தது. இது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இறுதியில் தங்கத்தை வசப்படுத்தினேன்.

பதக்கம் வென்ற போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணம் உணர்ச்சிகரமானது. இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. டோக்கியோ வந்ததும் பயிற்சியில் இறங்கியதால் மிகவும் 'பிசி'யாக இருந்தேன். இரவில் சரியான துாக்கம் இல்லாமல் தவித்தேன். தங்கம் வென்ற பின் முதல் இரவு மகிழ்ச்சிகரமானது. மனதில் பாரம் குறைந்த உணர்வு ஏற்பட்டது. சோர்வாகவும் இருந்தேன். என் தலையணை பக்கத்தில் தங்கப்பதக்கத்தை வைத்துக் கொண்டு, நீண்ட நாட்களுக்கு பிறகு நன்கு துாங்கினேன்.

கடந்த சில ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்காக கவனம் செலுத்தி வந்தேன். தற்போது தங்கம் வென்று விட்டேன். இந்தியா வந்ததும் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது பற்றி திட்டமிடுவேன். எனது அடுத்த இலக்கு 90 மீ., இலக்கை எட்டுவது தான்.

நல்ல நண்பர்: ஒலிம்பிக் போட்டிக்கு முன் என்னால் ஜெர்மனியின் ஜோகனஸ் வெட்டரை வீழ்த்த முடியாது, என அவரே சவால் விடுத்திருந்தார். இவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். எனது நல்ல நண்பர் என்பதால் அவரது கருத்துக்கு பதில் அளிக்க விரும்பில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் பைனலில் இவர் சாதிக்க தவறியது வருத்தமாக இருந்தது.

தடகளத்தில் மெதுவாக தான் வளர்ச்சி காண முடியும். அதிலும் ஈட்டி எறிதல் மிகவும் நுட்பமான விளையாட்டு. அசுர வேகம், வலிமை, வளைந்து கொடுக்கும் உடல்வாகு அவசியம். தவறுகளை போகபோகத் தான் திருத்திக் கொண்டேன். இந்திய, வெளிநாட்டு பயிற்சியாளர்கள் உதவியுடன், இந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளேன். எனது வளர்ச்சிக்கு கைகொடுத்த இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய தடகள கூட்டமைப்புக்கு நன்றி.

இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.வெற்றி ரகசியம்

இந்திய தடகள தேசிய பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் கூறுகையில்,''கேரளாவில் 2015ல் நடந்த தேசிய விளையாட்டில் நீரஜ் சோப்ராவை பார்த்தேன். ஜிம்னாஸ்டிக்ஸ் வீரரை போல உடல்வாகு இருந்தது. தசைகள் வளைந்து நெளிந்து கொடுத்தன. ஈட்டியை மிக வேகமாக எறியும் பலம் கைககளுக்கு இருந்தது. இதுவே இவரது வெற்றிக்கு உதவியது. ஆரம்பத்தில் ஈட்டி எறிதலில் சில தவறுகள் செய்தார். உடல் அசைவு நிபுணர்கள் பயிற்சியில் சிறந்த வீரராக மாறினார்,''என்றார்.குவியும் பரிசு

நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகள் குவிகின்றன

* பஞ்சாப் அரசு -ரூ. 2 கோடி

* ஹரியானா அரசு-ரூ. 6 கோடி

* பைஜூஸ் நிறுவனம்-ரூ. 2 கோடி

* பி.சி.சி.ஐ., -ரூ. 1 கோடி

* சென்னை அணி- ரூ. 1 கோடி

* இண்டிகோ விமானத்தில் ஒரு ஆண்டு இலவச பயணம்

* மஹிந்திரா எக்சியுவி 700 கார்

Advertisement