இந்தியா ‘ஏழு’ அதிசயம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் கலக்கல்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்திய இந்திய நட்சத்திரங்கள் ஒரு தங்கம் உட்பட 7 பதக்கம் வென்றனர். ஜப்பானில், டோக்கியோ ஒலிம்பிக் நடந்தது. இதில் இந்தியா சார்பில் முதன்முறையாக அதிகபட்சமாக 124 பேர் பங்கேற்றனர். இந்தியாவுக்கு துவக்கமே அமர்க்களமாக அமைந்தது. முதல் நாளில் பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 49 கி.கி., எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதன்முறையாக, முதல் நாளில் பதக்கம் கிடைத்தது.

துப்பாக்கியில் ஏமாற்றம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றமே மிஞ்சியது. ஹாக்கி, தடகளத்துக்கு அடுத்து அதிகபட்சமாக 15 பேர் பங்கேற்றனர். மனு பகார், இளவேனில் உள்ளிட்ட மற்றவர்கள் பைனலுக்கு கூட தகுதி பெறாதது சோகம். இதேபோல டேபிள் டென்னிசில் அஜந்தா சரத் கமல், மணிகா பத்ரா, சத்யன், வில்வித்தையில் தீபிகா குமாரி, அடானு தாஸ் உள்ளிட்டோர் ஏமாற்றினர். டென்னிசில் அனுபவ சானியா மீண்டும் சொதப்பினார்.

சபாஷ் சிந்து: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, பாட்மின்டனில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக வெண்கலம் வென்று ஆறுதல் தந்தார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார்.

குத்துச்சண்டையில், 6 முறை உலக சாம்பியன் மேரி கோம், மீண்டும் பதக்கம் வெல்ல முடியாமல் வெளியேறினார். இந்நிலையில் லவ்லினா, வெண்கலம் வென்று ஆறுதல் தந்தார்.

மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் ஏமாற்றம் தந்தார். ஆனால் ரவிக்குமார் தாஹியா வெள்ளி, பஜ்ரங் புனியா வெண்கலம் வென்று நம்பிக்கை தந்தனர்.

41 ஆண்டுகளுக்கு பின்: ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் அணி 41 ஆண்டுகளுக்கு பின் பதக்கத்தை கைப்பற்றியது. அரையிறுதி வரை சென்ற பெண்கள் அணி, 4வது இடம் பிடித்து தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதித்தி, 4வது இடம் பிடித்து நுாலிழையில் வெண்கலத்தை தவறவிட்டார். இதேபோல மல்யுத்தத்தில் தீபிக் புனியா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியடைந்தார்.

முதல் தங்கம்: தடகளத்தில் வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர், பைனல் வரை சென்று ஆறுதல் தந்தார். ஆண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் ஆரோக்கிய ராஜிவ் அணி பைனல் வாய்ப்பை இழந்தாலும் ஆசிய சாதனை படைத்தது மகிழ்ச்சி. ஈட்டி எறிதலில் அசத்திய நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. தவிர, ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பின் தங்கம் வென்ற 2வது இந்தியரானார்.

ஒட்டுமொத்தமாக ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கங்களை அள்ளிய இந்தியா, லண்டன் ஒலிம்பிக்கில் (2012) பெற்ற பதக்க எண்ணிக்கையை (2 வெள்ளி, 4 வெண்கலம்) முறியடித்தது.

அடுத்து வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயரும் என்று வாழ்த்துவோம்.முதன்முறை...

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக நிகழ்ந்த சாதனைகள்.

* ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.

* பெர்முடா, பிலிப்பைன்ஸ், கத்தார் நாடுகள் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றன.

* சான் மரினோ, பர்கினா பாசோ, துருக்மெனிஸ்தான் நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றன.

பிரதமர் மோடி பாராட்டு

இந்திய வீரர்கள் வென்ற ஒலிம்பிக் பதக்கத்தால் தேசம் பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடியின் 'டுவிட்டர்' பதிவில், 'கொரானா சூழலிலும் ஒலிம்பிக் போட்டியை நன்கு திட்டமிடலுடன் வெற்றிகரமாக நடத்திய ஜப்பான் அரசுக்கு வாழ்த்துகள். இது போன்ற நேரத்தில் போட்டியை நடத்துவது, மீண்டு வருவதற்கான வலிமையையும், விளையாட்டு எவ்வாறு சிறந்த ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது.

இந்தியாவில் கீழ் மட்டத்தில் இருந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த இதுதான் நேரம். அப்போதுதான் திறமையான வீரர்களை அடையாளம் காண முடியும். எதிர்காலத்தில் அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவர். இந்தியாவின் பதக்கம் உண்மையிலேயே நாட்டை பெருமை, உற்சாகப்படுத்தியுள்ளது. போட்டியில் திறமை வெளிப்படுத்திய அனைத்து இந்திய வீரர்களுக்கும் வாழ்த்துகள். அவர்கள் சிறந்த திறமை, அணி ஒருங்கிணைப்பு, அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தினர். நாட்டுக்காக விளையாடிய ஒவ்வொரு வீரரும் சாம்பியன் தான்,' என தெரிவித்துள்ளார்.Advertisement