பாரிசில் ஒலிம்பிக் கொடி

பாரிஸ்: வரும் 2024ல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான கொடி பாரிஸ் வந்தது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி வரும் 2024ல் நடக்கவுள்ளது. இதற்கான கொடியை, டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா நிகழ்ச்சியில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) தலைவர் தாமஸ் பாக், பாரிஸ் நகர மேயர் ஹிடால்கோவிடம் வழங்கினார். இந்த ஒலிம்பிக் கொடி, நேற்று விமானம் மூலம் பாரிஸ் கொண்டு வரப்பட்டது. இதனை, உலக அதிசயங்களில் ஒன்றான 'ஈபிள் டவர்' அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏற்றப்பட்டது. அப்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் நட்சத்திரங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதுகுறித்து ஹிடால்கோ கூறுகையில், ''டோக்கியோ ஒலிம்பிக் கடினமான சூழ்நிலையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த கொடி, பாரிஸ் ஒலிம்பிக் வந்து கொண்டிருக்கிறது, விரைவில் வந்துவிடும் என்பதற்கான அடையாளமாகும். இது, நேர்மறையான எண்ணத்தை நம் நாட்டுக்கு வழங்குகிறது,'' என்றார்.

Advertisement