உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம் * இங்க எல்லாருமே இனி உங்காளப்பா... * ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

புதுடில்லி: இந்திய மக்களின் உள்ளங்களை கவர்ந்த ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு டில்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில், 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா உட்பட பதக்கம் வென்றவர்கள் பங்கேற்றனர். ஜப்பானின் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் முதன் முறையாக அதிகபட்சம் 124 பேர் பங்கேற்றனர். இதற்கேற்ப முதன் முறையாக இந்தியா, அதிக பட்சம் 7 பதக்கங்கள் வென்றது. பதக்கப்பட்டியலில் 48 வது இடம் பிடித்தது. ஒலிம்பிக் தடகளத்தில் முதன் முறையாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். மீராபாய் சானு (பளுதுாக்குதல்), ரவிக்குமார் (மல்யுத்தம்) வெள்ளி வென்றனர். சிந்து (பாட்மின்டன்), லவ்லினா (குத்துச்சண்டை), பஜ்ரங் புனியா (மல்யுத்தம்) வெண்கலம் கைப்பற்றினர்.

41 ஆண்டுக்குப்பின் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் (வெண்கலம்) வென்றது.

தாயகம் திரும்பினர்

நேற்று வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பினர். டில்லி விமானநிலையத்தில் மாலை அணிவித்து, சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. நிர்வாகிகள், வீரர், வீராங்கனைகளின் பெற்றோர், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

'கேக்' கொண்டாட்டம்

முதல் வீரராக நீரஜ் சோப்ரா, விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தார். உடனடியாக ரசிகர்கள் முன்னோக்கி வந்து குவிந்தனர். இவர் தனது காரை அடையவே நீண்ட நேரம் ஆனது. அடுத்து பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் வந்தனர். அங்கிருந்து நேராக தனியார் 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். இங்கு பெரிய 'கேக்' ஒன்று தயாராக இருந்தது. ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் 'கேக்' வெட்டி, சக வீரர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். அடுத்து இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், சக அணியினருடன் இணைந்து 'கேக்' வெட்டினார். பின் தேசிய கீதம் பாடினர்.

இங்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பூங்கொத்து, சால்வை, பரிசு வழங்கப்பட்டன. மீராபாய் சானு, சிந்து தவிர மற்றவர்கள் இதில் பங்கேற்றனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரீந்தர் பத்ரா உட்பட பலர் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தினர்.

தோளில்... பஜ்ரங்

வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, அவரது தந்தையை விமான நிலையத்தில் இருந்து ரசிகர்கள் தோளில் சுமந்தனர்.

கார் பவனி

பதக்கம் வென்ற நட்சத்திரங்கள் திறந்த வெளி காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பலரும் பாய்ந்து வந்து 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

அப்பாவை பார்க்க ஆசை

குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா கூறுகையில்,''நீண்ட நாட்களுக்குப் பின் இந்தியா திரும்பியது மகிழ்ச்சி. எனது அப்பா இங்கு வந்துள்ளார். விரைவில் அவரை பார்த்து பேச வேண்டும்,'' என்றார்.

130 கோடி வாழ்த்து

மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில்,'' இந்தியாவை பெருமைப்படச் செய்த நமது ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்காக இந்த மாலைப் பொழுது சிறப்பாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த 130 கோடி இந்தியர்கள் சார்பில் அனைவரையும் வாழ்த்துகிறேன். அதிகமானோர் பங்கேற்றது, 7 பதக்கங்கள் வென்றது, 121 ஆண்டு காத்திருத்தலுக்குப் பின் தடகளத்தில் நீரஜ் சோப்ரா பதக்கம் கைப்பற்றியது, என டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதன் முறையாக பல்வேறு சம்பவங்கள் நடந்தன,'' என்றார்.

ஆக., 15ல்...

ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிந்து(ஐஸ் கிரீம்), நீரஜ் சோப்ரா(சுர்மா -ரொட்டி, நெய், வெல்லம் கலந்தது) சில உணவுப் பொருட்களை தவிர்த்து வந்தனர். இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில்,''நீரஜ்... உங்களுக்கு பிடித்த 'சுர்மா', சிந்துவுக்கு பிடித்த ஐஸ் கிரீமை இப்போது தரமுடியவில்லை. அனைத்தும் ஆக., 15ல் பிரதமர் மோடியை சந்திக்கும் போது கட்டாயம் கிடைக்கும்,'' என்றார்.இந்தியாவுக்காக 'தங்கம்'

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறுகையில்,''நான் பதக்கம் வென்றது இந்தியாவுக்காக. இது இந்தியாவின் தங்கப்பதக்கம். இதை வென்றதில் இருந்து எனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தான் சுற்றி வருகிறேன். இந்த பதக்கத்தை பார்த்ததும் எல்லாம் சரியாகி விடுகிறது.

பொதுவாக போட்டிகள் கடுமையாகத் தான் இருக்கும். இதற்காக உங்களது எதிரணியினரை பார்த்து ஒருபோதும் பயந்து விடக் கூடாது. எதற்கும் பயப்படாமல் 100 சதவீத உழைப்பை கொடுத்தால் போதும். டோக்கியோவில் இரண்டாவது வாய்ப்பில் ஈட்டி எறியச் சென்ற போது,'இது தான் எனது சிறந்த துாரமாக இருக்கும்,' என்று நினைத்தேன். போட்டிக்குப் பின் மறுநாள் எனது தோள்கள் கடுமையாக வலித்தன,'' என்றார்.

Advertisement