வினேஷ் போகத் ‘சஸ்பெண்ட்’ * மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை

புதுடில்லி: ஒலிம்பிக் கிராமத்தில் தங்க மறுத்த வினேஷ் போகத் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காலிறுதியில் தோல்வியடைந்தார். ஹங்கேரியில் இருந்து டோக்கியோ சென்ற இவர், ஒலிம்பிக் கிராமத்தில் தங்க மறுத்தார். சக இந்திய நட்சத்திரங்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட மறுத்தார். போட்டியின் போது இந்தியா சார்பில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உடையை அணியாமல் தனியார் நிறுவனம் தேர்வு செய்த ஆடை அணிந்து பங்கேற்றார்.

இதனால் கோபமடைந்த இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,), இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு (டபிள்யு.எப்.ஐ.,) நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து வினேஷ் போகத்தை டபிள்யு.எப்.ஐ., தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்தது. தவிர மூன்று சம்பவங்களுக்கும் ஆக., 16க்குள் விளக்கம் கேட்டு இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இல்லையெனில் மல்யுத்தம் தொடர்பான எவ்வித நிகழ்வுகள், போட்டிகளில் இவர் பங்கேற்க முடியாது. இதேபோல சோனம் மாலிக்கிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பிரச்னை என்ன

இதுகுறித்து டோக்கியோ சென்ற அதிகாரி ஒருவர் கூறியது:

ஒலிம்பிக் கிராமத்தில் சோனம், அன் ஷு, சீமா அறைகளுக்கு அருகில் வினேஷ் போகத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் இருந்து வந்தவர்களுடன் இருந்தால் கொரோனா வந்து விடும், நான் கிராமத்தில் தங்க மாட்டேன் என அடம் பிடித்தார். தவிர இதே காரணத்துக்காக சக வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. சில நேரங்களில் பயிற்சியை தவிர்த்து விட்டார்.

'சீனியர்' வீராங்கனையின் இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல 19 வயது வீராங்கனை சோனம் உள்ளிட்டோர் 'தாங்கள் மிகப்பெரிய நட்சத்திரம், எதுவும் செய்யலாம் என நினைக்கின்றனர். டோக்கியோ செல்ல பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ள மறுத்து, இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவு இடுகின்றனர். இதை எப்படி ஏற்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement