‘உலகை’ வெல்வாரா நீரஜ் சோப்ரா * அடுத்த சவாலுக்கு ‘ரெடி’

புதுடில்லி: ''காமன்வெல்த், ஆசிய விளையாட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று விட்டேன். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும்,'' என நீரஜ் சோப்ரா தெரிவித்தார். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்திய இவர் 87.58 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்று தந்தார். 120 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஆனார்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா 23, கூறியது:

இந்திய தடகள 'ஜாம்பவான்', 'பறக்கும்' சீக்கியர் மில்கா சிங். இவரது பல்வேறு பேட்டிகளை பார்த்துள்ளேன். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வதை பார்க்க வேண்டும் என்பது தான் அவரது முக்கிய கனவாக இருந்தது. அப்போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டால் தான் தனது கனவு நிறைவேறும் என்றார். ஒவ்வொரு முறை பாட்டியாலா அல்லது சண்டிகர் பயிற்சி முகாமிற்கு வரும் போதெல்லாம் அவர் கூறியதை நினைத்துப் பார்ப்பேன்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க குறைவான நாட்கள் இருந்த போதும், எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் எனது லட்சியமாக இருந்தது. இதற்கான கடுமையாக போராடினேன். நான் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இப்படித் தான் கடின பயிற்சியில் ஈடுபடுவர். என்னைப் பொறுத்தவரையில் தங்கம் வெல்ல வேண்டும் என எண்ணவில்லை ஆனால், ஏதாவது ஒரு பதக்கம் பெற வேண்டும் என முயற்சித்தேன்.

டோக்கியோவில் பதக்கம் வென்ற போது, நுாலிழையில் ஒலிம்பிக் பதக்கத்தை நழுவவிட்ட மில்கா சிங், பி.டி.உஷா உட்பட பலர் நினைவில் வந்து சென்றனர். இதில் மில்கா சிங் தற்போது இல்லை என்றாலும் அவர் போட்டியை பார்த்து, பதக்கம் வென்றதற்காக என்னை மேலிருந்து பாராட்டியிருப்பார் என நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

மற்றபடி இந்தியா அல்லது வேறு நாடு என யாராக இருந்தாலும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும், தேசத்திற்காக பதக்கம் வெல்ல வேண்டும், தேசிய கீதத்தை இசைக்கச் செய்ய வேண்டும் என்பது கனவாக இருக்கும். எனக்கு இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைத்தது, அதிர்ஷ்டம் தான். என்னுடன் இணைந்து ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்த இலக்கு

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த்தில் ஏற்கனவே தங்கம் வென்றுள்ளேன். தற்போது ஒலிம்பிக் பதக்கமும் வென்று விட்டேன். எனது அடுத்த இலக்கு 2022ல் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப்பில் சாதிக்க வேண்டும். இது மிகப்பெரிய போட்டி. ஒலிம்பிக்கை விட சவால் நிறைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய ஈட்டி எறிதல் தினம்

நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்திய இவர் 87.58 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்று தந்தார். ஒலிம்பிக் தடகளத்தில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஆனார். இதைக் கொண்டாடும் வகையில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஈட்டி எறிதல் தினமாக கொண்டாட, இந்திய தடகள கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தேசத்தின் ஆதரவு

நீரஜ் சோப்ரா கூறுகையில்,''நான் எங்கு சென்றாலும் தேசத்தின் ஆதரவு கிடைத்தது. ஒட்டுமொத்த மக்களின் வேண்டுகோள் தான் டோக்கியோவில் பலித்தது. கடைசியில் தேசத்திற்காக தங்கம் வென்றது மகிழ்ச்சியாக இருந்தது,'' என்றார்.

Advertisement