பதக்கம்... பிரதமர் மோடி ஊக்கம்! * இந்திய ஹாக்கி கேப்டன் பெருமிதம்

புதுடில்லி: ''பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள் அற்புதங்கள் நிகழ்த்தின. இந்திய வீரர்கள் மத்தியில் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினோம்,''என ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்தார். டோக்கியோவில் நடந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி எழுச்சி கண்டது. ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்று அசத்தியது.

இது குறித்து கேப்டன் மன்பிரீத் சிங் கூறியது:

அரையிறுதியில் பெல்ஜியத்திடம் தோற்ற போது இந்திய வீரர்கள் சோகமாக இருந்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் பேசுகையில்,'நீங்கள் எல்லோரும் நன்றாக விளையாடினீர்கள். வெண்கலப்பதக்கத்திற்கான அடுத்த போட்டியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நாடே உங்களை நினைத்து பெருமைப்படுகிறது,' என்றார்.

இந்த வார்த்தைகள் எங்களுக்கு தேவையான ஊக்கம் அளித்தது. வீரர்கள் இடையே நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தியது. 'நமக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. வெறுங்கையுடன் திரும்பினால் வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஜெர்மனிக்கு எதிரான 60 நிமிடங்களில் சிறப்பாக விளையாடினால், சிரித்த முகத்துடன் தாயகம் திரும்பலாம்,' என எங்களுக்குள் நடந்த கூட்டத்தில் உறுதி மேற்கொண்டோம். இறுதியில் வெண்கலம் வென்ற தருணம் உணர்ச்சிகரமானது.

கடின பயிற்சி

மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றேன். 2012, 2016ல் சோபிக்க முடியவில்லை. இம்முறை கேப்டனாக பதக்கம் வென்றது சிறப்பானது. ஒலிம்பிக் போட்டிக்கு முன் பெங்களூருவில் கடினமாக பயிற்சி மேற்கொண்டோம். கொரோனா காரணமாக வேறு எங்கும் செல்லவில்லை. முந்தைய ஹாக்கி சாம்பியன்களின் வரலாற்றை படித்தோம். அவர்கள் சந்தித்த பிரச்னைகள், போட்டியை எதிர்கொண்ட விதம் பற்றி அறிந்து கொண்டோம். ஒரே இடத்தில் இருந்ததால் வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. நிறைய தியாகம் செய்திருக்கிறோம். டோக்கியோவில் சிறப்பாக விளையாடினால் பதக்கம் உறுதி என நம்பினோம். ஒலிம்பிக் ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட போது சிறிது ஏமாற்றம் அடைந்தோம். பின் கூடுதல் அவகாசம் கிடைத்திருப்பதாக நினைத்து, பயிற்சியை தீவிரப்படுத்தினோம்.

துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என தோற்ற போதும், நம்பிக்கையுடன் மீண்டு வந்தோம். அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி நல்ல முன்னேற்றம் கண்டோம். 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வென்றது பெரிய விஷயம். இது வருங்கால இந்திய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு மன்பிரீத் சிங் கூறினார்.

Advertisement