நீரஜ் சோப்ராவின் மந்திர தருணம்: உலக தடகளம் கவுரவம்

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது, 'டாப்-10' சிறந்த தருணங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. ஜப்பானில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 23, தங்கம் (87.58 மீ.,) வென்றார். இதன்மூலம் 120 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், தடகளத்தில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். தவிர இது, ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம். ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா (2008, பீஜிங்) தங்கம் வென்றிருந்தார்.

ஹரியானாவின் பானிபட் நகரை சேர்ந்த நீரஜ், இந்திய ராணுவத்தில் 2016 முதல் 'சுபேதராக' பணியாற்றி வருகிறார். இவருக்கு, இந்திய ராணுவம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக நீரஜ், தனது பெற்றோருடன் இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே, முப்படைத் தளபதி பிபின் ரவாத் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது இந்திய ராணுவத்தின் 'ராஜ்புதானா ரைபிள்' கர்னல் கே.ஜே.எஸ். தில்லான், ரூ. 6 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார்.

இந்நிலையில், சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில், டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் 'டாப்-10' சிறந்த தருணங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சர்வதேச தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், ''டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு, தடகளம், ஈட்டி எறிதலில் தீவிரமான ரசிகர்கள் மட்டுமே நீரஜ் சோப்ராவை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்தனர். ஆனால், ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த பின்பு, அவரை பற்றி தெரிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது,'' என, தெரிவித்திருந்தது.34 லட்சம் பேர்

ஒலிம்பிக் போட்டிக்கு முன் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் மட்டும் நீரஜ் சோப்ராவை 1,43,000 பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் இவர், தங்கப் பதக்கம் வென்ற பின் இந்த எண்ணிக்கை 34 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

Advertisement