சச்சினிடம் வாழ்த்து: மீராபாய் உற்சாகம்

மும்பை: ''சச்சினின் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் என்றும் என்னுடன் இருக்கும்,'' என, மீராபாய் சானு தெரிவித்துள்ளார். இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 27. சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கி.கி., எடைப்பிரிவில் வெள்ளி வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் பளுதுாக்குதலில் பதக்கம் வென்ற 2வது இந்தியரானார். ஏற்கனவே கர்ணம் மல்லேஸ்வரி (வெண்கலம், 2000 சிட்னி ஒலிம்பிக்) பதக்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில் மீராபாய் சானு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை, மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை காட்டிய மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் சச்சின். இதுகுறித்த புகைப்படத்தை மீராபாய், தனது 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார். இதில் சச்சின், வெள்ளிப் பதக்கத்தை எடுத்துப் பார்ப்பது போன்றும், சானுவுக்கு பூங்கொத்து வழங்குவது போன்றும் புகைப்படம் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து சானு வெளியிட்ட செய்தியில், ''சச்சினை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது அறிவான, ஊக்குவிக்கும் வார்த்தைகள் என்றும் என்னில் நிலைத்திருக்கும். அவை என்னை வெகுவாக கவர்ந்தன,'' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து சச்சின் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், ''உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. மணிப்பூரில் இருந்து டோக்கியோ சென்ற உங்களின் உற்சாகமூட்டும் பயணத்தை பற்றி பேசியது அருமை. நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளன. கடினமாக உழைக்கவும்,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement