கூடுதல் பயிற்சி, களம் தேவை * ‘ஒலிம்பிக்’ ஆரோக்கிய ராஜிவ் வலியுறுத்தல்

திருச்சி: ''இந்திய வீரர்களுக்கு தரமான களமும், கூடுதல் பயிற்சிகளும் தேவை,'' என ஆரோக்கிய ராஜிவ் தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீ., தொடர் மற்றும் கலப்பு ஓட்டத்தில் பங்கேற்றார் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ் 40. இந்தியா திரும்பிய ஆரோக்கிய ராஜீவ், திருச்சி வந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கூறியது:

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு முன்பை விட சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருந்த போதும் இன்னும் கூடுதல் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. சிறுசிறு தவறுகள் செய்ததால், எங்களால் இம்முறை பதக்கம் வெல்ல முடியவில்லை. அடுத்த முறை அந்த தவறுகளை சரி செய்து, நிச்சயம் வெற்றி பெறுவோம். தடகள போட்டியில் முதன் முறையாக இந்தியா தங்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த தருணத்தில், நாங்கள் அங்கு இருந்தோம். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

ஒலிம்பிக் போட்டியின் களம் என்பது வேறு மாதிரியாக உள்ளது. அது போன்ற களத்தில் விளையாட, இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் இன்னும் அதிகம் தேவை. பயிற்சியின் போது எங்களுக்கான பிரேத்யேக உணவுக்கு கூடுதல் பணம் செலவாகிறது. அதற்கு அரசு உதவி செய்தால் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement