நீரஜ் சோப்ரா ‘நம்பர்–2’: ஈட்டி எறிதல் தரவரிசையில் முன்னேற்றம்

புதுடில்லி: ஈட்டி எறிதல் போட்டிக்கான உலக தரவரிசையில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் ஈட்டி எறிதல் போட்டிக்கான உலக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 1315 புள்ளிகளுடன் 16வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலில் அதிகபட்சமாக 87.58 மீ., துாரம் எறிந்த இவர், தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் 120 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், தடகளத்தில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். தவிர இவர், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பின் தங்கம் வென்ற 2வது இந்தியரானார்.

ஜெர்மனியின் ஜோஹனஸ் வெட்டர், 1396 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் பைனலில் 82.52 மீ., துாரம் எறிந்து 9வது இடம் பிடித்த வெட்டர், இந்த சீசனில் மட்டும் 7 முறை 90 மீ., துாரத்திற்கு மேல் எறிந்துள்ளார். போலந்தின் மார்சின் க்ருகோவ்ஸ்கி (1302 புள்ளி), 3வது இடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களில் முறையே, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக்குடியரசின் யாகுப் வாட்லெச் (1298), ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (1291) உள்ளனர்.

Advertisement