இளம் வீரர்களுக்கு மோடி ஊக்கம் * கபில்தேவ் பாராட்டு

புதுடில்லி: ''பிரதமர் மோடியின் செயல்கள் வளரும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும்,'' என கபில்தேவ் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றது. இந்திய நட்சத்திரங்கள், பயிற்சியாளர் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் மோடி, தன் வீட்டில் விருந்து கொடுத்து கவுரவித்தார். தனிப்பட்ட முறையில் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது கூறுகையில்,''டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் எழுச்சி காரணமாக, இனி விளையாட்டை தேர்வு செய்யும்படி பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பர். நீங்கள் ஒவ்வொருவரும் 2023, ஆக. 15க்குள் குறைந்தது 75 பள்ளிகளுக்கு சென்று விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி, தேசப்பற்றை வளர்க்க வேண்டும்,'' என்றார்.

இதுகுறித்து 1983ல் இந்திய கிரிக்கெட்டுக்கு உலக கோப்பை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியது:

மக்கள் பொதுவாக விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிகளை மட்டும் தான் கண்டு கொள்வர். ஒருவேளை தோற்று விட்டால் அவ்வளவு தான், எல்லோரும் மறந்து விடுவர். இருப்பினும் வெற்றி, தோல்வி, காயங்களை பொருட்படுத்தாமல், அவர்கள் அடைந்த போராட்டத்தை பற்றி கண்டு கொள்ள ஒருவர் உள்ளார் என்பது வாழ்க்கையில் முக்கிய விஷயமாக இருக்கும்.

விளையாட்டு நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போது, வெறும் பதக்கங்களுக்காக மட்டுமல்ல, அவர்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டியுள்ளார் எனத் தெரிகிறது. ஒலிம்பிக் நட்சத்திரங்களுடன் அவர் பங்கேற்ற நிகழ்வு, இதை தெளிவாக உணர்த்தியது. பதக்கம் வென்றவர்களுடன் மட்டுமன்றி, வெற்றி பெற போராடியவர்களுடன் நேரம் செலவிட்டார்.

நமது விளையாட்டு நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் மோடி அறிந்திருக்கவில்லை. அவர்களது தனிப்பட்ட வளர்ச்சி குறித்தும் தெரிந்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பார்த்து, ஒவ்வொரு விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்தும் தெரிந்துள்ளார். இதனால் தான் பஜ்ரங் புனியா காயத்துடன் பங்கேற்றது, ரவிக்குமார் காது கடிக்கப்பட்டது குறித்தும் அவரால் பேச முடிந்தது.

ஒரு பிரதமர் தங்களது போட்டிகளை எப்படி தொடர்ந்து பார்க்கிறார் என்பதை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் அது. நீரஜ் சோப்ராவுக்கு 'சுர்மா', சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகியிருக்கலாம்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் தலைவராக உள்ள ஒருவர், விளையாட்டு, விளையாட்டு கலாசாரமும் முக்கியம் என நினைக்கிறார் என்பதை இந்த அழகான தருணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இது இளம், வளரும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். அவர்கள் மதிக்கப்படுவர், பொக்கிஷமாக போற்றப்படுவர் என்பதை அறிந்து கொள்வர்.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

Advertisement