வெள்ளித்திரையில் தோன்றுவாரா * ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா...

பானிபட்: ''நடிக்க விருப்பம் இல்லை. தொடர்ந்து போட்டிகளில் கவனம் செலுத்தப் போகிறேன்,'' என, நீரஜ் சோப்ரா தெரிவித்தார். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 23. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், 120 ஆண்டு இந்திய வரலாற்றில் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். இந்தி சினிமா இயக்குனர் மாதுர் பந்தர்கர், சமீபத்தில் நீரஜ் சோப்ரா, மீராபாய் சானுவை சந்தித்தார்.

இதனால் நீரஜ் சோப்ரா சினிமாவில் நடிக்கப் போகிறாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து மாதுர் பந்தர்கர் கூறுகையில், ''உலகம் முழுவதும் உங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். நீங்கள் இப்போது சூப்பர் ஸ்டார் ஆகி விட்டீர்கள். பார்ப்பதற்கும் நன்றாக உள்ளீர்கள், சினிமாவில் நடிக்கும் திட்டம் உள்ளதா, என நீரஜிடம் கேட்டேன். இதற்கு அவர்,' எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. தொடர்ந்து போட்டிகளில் கவனம் செலுத்தப் போகிறேன்,'' என்றார்.

காய்ச்சல் தொல்லையா

இதனிடையே டோக்கியோவில் இருந்து திரும்பியது முதல் மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் நடத்திய பாராட்டு விழா, இந்திய விளையாட்டு ஆணையம், அடுத்து குடியரசு தலைவர் நிகழ்ச்சிகள், சுதந்திர தினவிழாவில் பங்கேற்பு, பிரதமர் மோடியுடன் காலை உணவு என தொடர்ந்து 'பிசியாக' உள்ளார்.

இவர், டில்லியில் இருந்து தனது சொந்த ஊரான பானிபட் (110 கி.மீ.,) செல்ல ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இங்குள்ள கண்டாரா கிராமத்தில் பாராட்டு விழா நடந்தது. தொடர்ச்சியான பயணம், களைப்பு காரணமாக நீரஜ் சோப்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழாவில் இருந்து பாதியில் வெளியேறிய இவர், பானிபட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு தேறினார். நேற்று உ.பி., மாநில அரசின் விழாவில் பங்கேற்றார்.

Advertisement