உள்ளத்தில் நல்ல உள்ளம்... * ‘வெள்ளி’ விற்று உதவிய வீராங்கனை

வார்சா: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே விளையாட்டு நட்சத்திரங்களின் உச்சபட்ச லட்சியமாக இருக்கும். கஷ்டப்பட்டு பெற்ற இப்பதக்கத்தை பொக்கிஷமாக பாதுகாப்பர். ஆனால், இரக்க குணம் கொண்ட மரியா, தனது வெள்ளிப்பதக்கத்தை எட்டு மாத குழந்தையின் இருதய 'ஆப்பரேஷனுக்காக' ஏலம் விட்டு உதவியுள்ளார். இவரது பெரிய மனதை ரசிகர்கள் வாயார பாராட்டுகின்றனர். போலந்தின் ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா ஆன்ட்ரிசிஜிக். கடந்த 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெறும் 2 செ.மீ., துார வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். விடாமுயற்சியுடன் போராடிய இவருக்கு, 2018ல் எலும்பு புற்று நோய் ஏற்பட்டது. இந்த சோதனையில் இருந்து விரைவாக மீண்டு, பயிற்சியை தொடர்ந்தார். சமீபத்திய டோக்கியோ ஒலிம்பிக்கில் 64.61 மீ., துாரம் எறிந்து வெள்ளி வென்றார்.

உயிர் காக்க உதவி:

தாயகம் திரும்பிய இவர், 'பேஸ்புக்' மூலம், எட்டு மாதமே ஆன மிலோஜெக் மலிசா என்ற ஆண் குழந்தை இருதய பாதிப்பால் அவதிப்படும் அதிர்ச்சி செய்தியை அறிந்தார். ஐரோப்பிய நாடுகளில் சிகிச்சை மறுத்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை., மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார் மலிசா. உயிர் காக்கும் 'ஆப்பரேஷனுக்கு' ரூ. 3 கோடி தேவைப்படும் என டாக்டர்கள் கூறினர். மகனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைய, போதிய வசதி இல்லாத பெற்றோர் பரிதவித்தனர். பலரிடமும் நிதி உதவி கேட்டனர்.

மரியாவும் உதவ முன் வந்தார். ஒலிம்பிக்கில் முதல் முறையாக வென்ற பதக்கத்தை ஏலம் விட்டு நிதி திரட்டி கொடுத்தார். இவர் கூறுகையில், ''பதக்கம் வென்ற தருணம் இனிமையானது. அதன் உண்மையான மதிப்பு என் இதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கும். இதை தவிர பதக்கம் என்பது வெறும் பொருள் தான். என் வீட்டு 'ஷோ கேசில்' இருந்து தூசி அடைவதை காட்டிலும், ஒரு உயிரை காப்பாற்ற உதவட்டும். இதன் காரணமாகவே இருதயம் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரைக் காக்க வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட முடிவு செய்தேன். இப்போது 90 சதவீதம் நிதி சேர்ந்துள்ளது. விரைவில் 'ஆப்பரேஷன்' நடந்து, மலிசா குணமடைவான்,'' என்றார்.

மீண்டும் மரியாவிடம்:

மரியாவின் வெள்ளிப்பதக்கத்தை போலந்தின் 'ஜப்கா' சூப்பர் மார்க்கெட் நிறுவனம் ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இத்தொகை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மரியாவின் நல்ல உள்ளத்தை பாராட்டிய 'ஜப்கா' நிறுவனம், பதக்கத்தை அவரிடமே திரும்ப கொடுத்தது. இதன் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''மரியாவின் மனிதநேயத்தை பார்த்து வியந்து போனோம். டோக்கியோவில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமே இருக்கட்டும். அவருடன் சேர்ந்து நாங்களும் உதவ முடிந்ததை எண்ணி மகிழ்கிறோம்,''என்றார்.

Advertisement