1988 சியோல் ஒலிம்பிக்

கருகிய புறாக்கள்: தென்கொரிய தலைநகர் சியோலில் 24வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. துவக்க விழாவில் உலக அமைதிக்காக புறாக்கள் பறக்க விடப்பட்டன. இவற்றில் பல மைதானத்தில் எரிந்து கொண்டிருந்த ஒலிம்பிக் ஜோதியின் பக்கம் செல்ல, உயிரோடு பரிதாபமாக கருகின. இதற்கு பின் நடந்த ஒலிம்பிக்கில் "பலூன்' புறாக்கள், "பேப்பர்' புறாக்கள் பறக்க விடப்பட்டன. இப்போட்டியில் சோவியத் யூனியன் 55 தங்கம், 31 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்று அசத்தியது.
"ஊக்க மருந்து' பென் ஜான்சன்: சியோல் ஒலிம்பிக்கில் கனடாவை சேர்ந்த பென் ஜான்சன் 100 மீ., ஓட்டத்தில் (9.79 வினாடி)புதிய உலக சாதனை படைத்தார். இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக கருதப்பட்டது. பின் நடந்த சோதனையில் இவர் "ஸ்டானோசலால்' என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சாதனை ரத்து செய்யப்பட்டது. இவரது தங்கப்பதக்கம் இரண்டாவதாக வந்த அமெரிக்க வீரர் கார்ல் லீவிசுக்கு(9.92 வினாடி) வழங்கப்பட்டது.
"சூப்பர்' ஸ்டெபி: ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபி கிராப் 1988ல் நடந்த விம்பிள்டன், யு.எஸ்., ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றார். தவிர, சியோல் ஒலிம்பிக் டென்னிசில், ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இப்படி ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் "கோல்டன் ஸ்லாம்' சாதனை படைத்தார்.

Advertisement