1992 பார்சிலோனா ஒலிம்பிக்

ஜோதி ஏற்றுவதில் புதுமை: ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 25வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சோவியத் யூனியன் சிதறிய நிலையில், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து "ஒருங்கிணைந்த அணி' என்ற பெயரில் பங்கேற்றன. மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைந்த நிலையில், ஒன்றுபட்ட ஜெர்மனியாக களமிறங்கியது. 32 ஆண்டு தடைக்கு பின் தென் ஆப்ரிக்கா பங்கேற்றது சிறப்பம்சம். துவக்க விழாவில் மாற்றுத்திறனாளியான அன்டோனியோ ரிபல்லோ மிகவும் வித்தியாசமாக அம்பு மூலம் ஜோதியை ஏற்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
கனவு அணி: கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா சார்பில் மைக்கேல் ஜோர்டான், மேஜிக் ஜான்சன், லேரி பேர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய "கனவு அணி' பங்கேற்றது. அனைத்து போட்டியிலும் சராசரியாக 44 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரோஷியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜோர்டானின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, அமெரிக்கா 117-85 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது.
இனவெறி இல்லை: 10 ஆயிரம் மீ., ஓட்டத்தில் வெள்ளை இனத்தை சேர்ந்த தென் ஆப்ரிக்காவின் எலனா மெயர், கறுப்பு இன வீராங்கனை டெரார்டு டுலு இடையே கடும் போட்டி நிலவியது. 6,100 மீ ., எட்டிய போது தனக்கு முன்னால் செல்லுமாறு டுலுவை வற்புறுத்தினார் மெயர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இறுதியில் டுலு வென்றார். பின் இருவரும் கைகோர்த்து ஓடி இனவெறியை விரட்டினர். இவ்வெற்றியின் மூலம் ஒலிம்பிக் 10 ஆயிரம் மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் ஆப்ரிக்க பெண் என்ற வரலாற்று சிறப்பை பெற்றார் டுலு.

Advertisement