1996 அட்லாண்டா ஒலிம்பிக்

குண்டு வெடிப்பு: ஏதென்சில் 1896ல் நவீன ஒலிம்பிக் துவங்கியது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1996ல் நடந்த 26வது ஒலிம்பிக், நூற்றாண்டு போட்டியாக கொண்டாடப்பட்டது. முதல்முறையாக பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை (10,320) ஐந்து இலக்கை தொட்டது. அமெரிக்க அதிபர் கிளிண்டன் போட்டிகளை துவக்கி வைத்தார். குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். முதல் 8 நாட்கள் போட்டிகள் சிறப்பாக நடந்த நிலையில், 9வது நாளில் ஒலிம்பிக் நூற்றாண்டு பார்க்கில் "பைப்' குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 111 பேர் காயமடைந்தனர்.
தடகள மன்னன்: தொடர்ந்து நான்காவது ஒலிம்பிக்கில் பங்கேற்ற அமெரிக்காவின் கார்ல் லூயிஸ் சாதனை மன்னனாக வலம் வந்தார். நீளம் தாண்டுதலில் தொடர்ந்து நான்காவது முறையாக தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு போட்டியில் தொடர்ந்து நான்கு தங்கம் வென்ற மூன்று வீரர்களில் ஒருவர் என்ற சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் 9 தங்கம் வென்ற நான்கு வீரர்களில் ஒருவரானார்.
சாதித்த பயஸ்: இந்தியாவுக்கு வெண்கலம் பெற்று தந்தார் லியாண்டர் பயஸ். டென்னிஸ் ஒற்றையர் 3வது சுற்றில் சுவீடனின் தாமஸ் என்குயிஸ்ட், காலிறுதியில் இத்தாலியின் ரென்சோ பெர்லான் போன்ற முக்கிய வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் அமெரிக்காவின் அகாசியை சந்தித்தார். அகாசிக்கு கடும் சவால் தந்த போதும் பைனல் வாய்ப்பை தவறவிட்டார். வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பிரேசிலின் மெலிகெனியை வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

Advertisement