2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்

பலத்த பாதுகாப்பு: ஒலிம்பிக் பிறந்த பூமியான கிரீஸ் தலைநகர் ஏதென்சில் 28வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. 201 நாடுகளை சேர்ந்த 10,625 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பாரம்பரிய கிரேக்க கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, துவக்க விழா அமைந்தது. ஜோதியை கிரீஸ் வீரர் நிக்கோலஸ் கக்லமனாகிஸ் ஏற்றி வைத்தார். 2001 செப்., 11ம் தேதி அமெரிக்கா மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு நடந்த ஒலிம்பிக் என்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 70 ஆயிரம் போலீசார் ஏதென்ஸ் நகர பாதுகாப்பில் ஈடுபட்டனர். "நேட்டோ', ஐரோப்பிய யூனியனும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தன. ஆப்கானிஸ்தான், போரால் பாதிக்கப்பட்ட ஈராக் அணிகள் கலந்து கொண்டன.
"சூப்பர்' ரத்தோர்: துப்பாக்கி சுடுதல் "டபுள் டிராப்' பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இதன் மூலம் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதலாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றிய இவர், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷப் போட்டிகளில் திறமையை நிருபித்தார். ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று கோடிக்கணக்கான இந்திய உள்ளங்களை மகிழச்செய்தார்.
பதக்க மழையில் பெல்ப்ஸ்: அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சலில் அசத்தினார். 100 மீ., பட்டர்பிளை, 200 மீ., தனிநபர் மெட்லே, 400 மீ., தனிநபர் மெட்லே, 4*200 மீ., பிரிஸ்டைல் ரிலே, 4*100 மீ., மெட்லே ரிலே பிரிவுகளில் தங்கம் வென்றார். 200 மீ., பிரிஸ்டைல், 4*100 மீ., பிரிஸ்டைல் ரிலே பிரிவுகளில் தலா ஒரு வெண்கலம் வென்றார். 6 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்ற இவர் ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற ரஷ்யாவின் அலெக்சாண்டர் டிட்யாட்டின் (1980, ஜிம்னாஸ்டிக்சில் 8 பதக்கம்) சாதனையை சமன் செய்தார்.

Advertisement