குருவை மிஞ்சிய சிஷ்யன் * ஒலிம்பிக் நீச்சலில் பெல்ப்சிற்கு ‘ஷாக்’

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 23வது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் பெல்ப்ஸ். சிங்கப்பூரின் 21 வயது 'சிறு' வீரர் ஜோசப் ஸ்கூலிங் தங்கம் வென்று அசத்தினார். பொதுவாக ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரங்களும், அத்துறையில் சாதித்த யாராவது ஒருவரை, தங்களது 'ரோல் மாடல்', ஆஸ்தான 'ஹீரோ' 'கடவுள்' என வைத்திருப்பர். சிங்கப்பூரின் 21 வயது நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங், சிறு வயது முதல் தனது ஆஸ்தான 'கடவுளாக' நீச்சல் உலக மன்னன், அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சை, 31, போற்றி வருகிறார்.

கடந்த 2008ல் இவரது 13 வயதில் பெல்ப்சை சந்தித்து 'போட்டோ' எடுத்துள்ளார். 2014 காமன்வெல்த் போட்டியில் 100 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் வெள்ளி வென்ற போதே, உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. தற்போது ரியோ ஒலிம்பிக் பைனலில் பெல்ப்சுடன் இணைந்து களமிறங்கினார் ஜோசப். துவக்கத்தில் இருந்தே வேகமாக நீந்தினார் ஜோசப்.காரமான 'கடுகு':

சரி 'கடுகு' தானே, என்று நினைத்த பெல்ப்சிற்கு கடைசியில் மிகுந்த காரமாக அமைந்த ஜோசப், 50:39 வினாடி நேரத்தில் வந்து, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.

இவரை விட 0.75 வினாடிகள் அதிகமாக வந்த பெல்ப்சிற்கு (51:14), ஒலிம்பிக் வரலாற்றில் 23 வது தங்கம் வெல்லும் வாய்ப்பு நழுவ, வெள்ளி மட்டும் கிடைத்தது.

தவிர, பெர்ட்டிராண்டு (தெ.ஆப்.,), லாஸ்லோ (ஹங்கேரி) என, இருவரும் 51:14 வினாடி நேரத்தில் வந்து வெள்ளி வென்றனர். இதனால், வெண்கலப்பதக்கம் யாருக்கும் தரப்படவில்லை.விடை பெறுகிறார்

கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்குடன் நீச்சல் அரங்கில் இருந்து விடை பெற்றவர் பெல்ப்ஸ். பின் மீண்டும் வந்து ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், 1 வெள்ளி வென்றார். ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் அரங்கில் 22 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம் 27 பதக்கம் கைப்பற்றினார். இத்துடன் பெல்ப்ஸ், 2வது முறையாக ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.

Advertisement