Advertisement
அரசியல் செய்திகள்
விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம்
ஏப்ரல் 25,2008,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : ""விவேகானந்தர் இல்லத்தை இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை, அந்தப் பக்கம் திரும்பவுமில்லை,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபை நேற்று துவங்கியதும் செங்கோட்டையன் (அ.தி.மு.க.,), சி.ஞானசேகரன் (காங்கிரஸ்), ஆறுமுகம் (பா.ம.க.,), கம்பம் ராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.,), செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் சென்னையில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை காலி செய்துவிட்டு, தமிழ்ச் செம்மொழி மையம் அமைக்கவிருக்கும் பிரச்னை குறித்து பேசினர்.அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி எல்லாரும் பேசியிருக்கிறார்கள். கம்பம் ராமகிருஷ்ணன் பேசும்போது, "விவேகானந்தர் இல்லம் பழைய இடத்திலேயே இருக்கட்டும். அது தான் நல்லது' என்றார். ஆமாம், "பழைய இடத்தில்' இருப்பது தான் நல்லது என்று தம்பி ராமகிருஷ்ணனுக்கு அண்ணன் என்ற முறையில் நான் நினைவூட்டுகிறேன். விவேகானந்தருக்கு சொந்தம் கொண்டாட இங்கே உள்ள ஆறு கோடி மக்களுக்கும் உரிமை உண்டு. குமரி முனையில் இருக்கிற விவேகானந்தர் ஆலயத்தை வி.வி.கிரி 1970ம் ஆண்டு என் தலைமையில் தான் திறந்து வைத்தார். அப்போது அந்த மாவட்ட மக்களால் சில பிரச்னைகளுக்கு உள்ளாகி, அவைகளை நான் தான் தீர்த்து வைத்தேன்.சென்னையில் 1897ம் ஆண்டு விவேகானந்தர் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து விரிவுரைகள் செய்த நினைவாக, விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கும்படி, அந்த மடத்தின் தலைவர் அரசிடம் கோரினார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுர அடி கொண்ட அந்த இடத்தை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் மூன்றாண்டுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை நிர்ணயம் செய்து ஒப்படைக்கப்பட்டது. அந்த இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறி, இல்லத்தின் முன் உள்ள எட்டு கிரவுண்டு ஆயிரத்து 928 சதுர அடி நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி கோரியதால், 90 சதுர மீட்டர் நிலத்தை மூன்றாண்டு கால குத்தகைக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை நிர்ணயம் செய்து வழங்கப்பட்டது. இதை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்க தர வேண்டும் என்று கேட்டபோது அதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் தான் விவாதிக்க வேண்டும் என்று கூறினேன்ஏதோ விவேகானந்தர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் தி.மு.க., அரசுக்கும் தகராறு என்பதைப் போல் பத்திரிகைகள் எழுதி, "விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க தி.மு.க., ஆட்சி முயற்சி' என்று பெருந்தலைப்பே இட்டிருக்கிறார்கள். அதை ஏன் அபகரிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. விவேகானந்தரிடம் எங்களுக்கு பகையா? இல்லை. பகுத்தறிவு கருத்துக்களை பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது அவரிடம் எங்களுக்கு என்ன விரோதம். "விவேகானந்தர் கருத்துக்கள் பெரியார், அண்ணா போன்றோரின் கருத்துக்களோடு ஒத்து வருகிற காரணத்தால், எங்கள் கருத்துக்களை, அவைகளைத் துணையாகக் கொண்டு பரப்ப முடியும் என்கிற காரணத்தால், நானும் என் அமைச்சரவையில் உள்ளவர்களும் விவேகானந்தரிடம் பரிவும் பற்றும் கொண்டிருக்கிறோம்' என்று அன்றைக்கே குறிப்பிட்டேன்.

நோட்டீஸ் அனுப்பவில்லை: விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை. கடிதமும் எழுதவில்லை. மத்தியில் இருந்து எங்களுக்கு வந்த தகவல் செம்மொழியாக தமிழை ஆக்கி அதைப் பரப்ப அமைக்கப்பட்டுள்ள "ஐம்பெருங்குழு, எண்பேராயம்' போன்ற அமைப்புகள் செயல்பட 76 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் கட்டடம், ஒரு அமைப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றபோது, சோழிங்கநல்லூரில் ஒரு நிரந்தர கட்டடத்தை பிறகு கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. தற்காலிகமாக அரசுக்கு சொந்தமான இடங்கள் கிடைக்குமா என்று தேடியபோது, யாரோ ஒரு கதை கட்டி, ஏதேதோ கதை கட்டி பலிக்காத காரணத்தால், இவர்களை சாமியார்கள் பக்கம் தள்ளி விடுவோம் என்று சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் சாமியாரிடம் மோத விட்டாலும், மாமியாரிடம் மோத விட்டாலும், நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை.கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா? இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.சாமியார்கள் சவால் விடலாமா? : விவேகானந்தர் இல்லம் குறித்து முதல்வர் விளக்கம் அளித்த போது கூறியதாவது: "விவேகானந்தர் மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம். முறைப்படி தான் நடக்கிறோம்' என்று அந்த மடத்தின் பெரிய சாமியார் சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. ஆனால், சாதுக்கள் சவால் விடுகிற அளவுக்கு வரக் கூடாது. அது விவேகானந்தரின் கொள்கைக்கே, அவரது குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சர் கொள்கைக்கே விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? குமரி முனையில் அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தரின் மண்டபத்தை போஷித்து பாதுகாத்து வருகிற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல. சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தரின் விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள். அந்த இல்லத்தை இடிப்பதாகவோ, பழைய இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ, எந்தப் பிரச்னையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும். வீணாக அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். தற்காலிகமாக எங்களுக்கு கிடைத்துள்ள இடம், அதே காமராஜர் சாலையில் "பாலாறு இல்லம்'. அந்தப் பாலாறு இல்லத்தில், சோழிங்கநல்லூரில் பெரிய கட்டடம் அமைகிற வரை தற்காலிக செம்மொழி மையம் இடம்பெறும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 It looks that people have not read the full story as other newspapers carry the news including national and local channels.TheCM has not denied the report that two persons (the paper has given the name and designtions of the officials from PWD) approached the Mutt head and told that they have received oral instructions to convey that the Mutt vacate the premises and move in a few days. The CM remains and international liar as usual. He comes out only after Jayalalitha's statement that he plans to give the Tamil centre to his daughter. 
by R.Subramanian,,India    25-04-2008 14:12:23 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்