Advertisement
அரசியல் செய்திகள்
ஒரு ரூபாய் அரிசி திட்டத்தால் ஆளும்கட்சிக்கு சிக்கல் : கட்டுக்கடங்காத கடத்தலால் அரசுக்கு அவப்பெயர்
மார்ச் 16,2009,00:00  IST

Latest indian and world political news information

அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்திருக்க வேண்டிய "ஒரு ரூபாய் அரிசி' திட்டம், முறைகேடுகளாலும் அரிசிக் கடத்தலாலும் அரசுக்கு அவப்பெயர் பெற்றுத் தந்து கொண்டுள்ளது.தி.மு.க., அரசு கொண்டுவந்த சமூகநலத் திட்டங்களில், தேசிய அளவில் பெரிதும் பாராட்டப்பட்ட விஷயம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்தான். இதற்காக ஆண்டுக்கு 2,100 கோடி ரூபாயை மானியமாக அரசு செலவழிக்கிறது.இத்திட்டத்தின் பலனை அறுவடை செய்ய வசதியாக, லோக்சபா தேர்தல் வந்து விட்டது. ஆனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அரிசிக் கடத்தல் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்தும், நீலகிரியிலிருந்தும், கேரளாவுக்கு அரிசி கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாகி விட்டது. அதிலும், கேரளாவுக்கு பல்வேறு வழித்தடங்களைக் கொண்டுள்ள கோவை மாவட்டத்திலிருந்து நடக்கும் அரிசி கடத்தல் மிக அதிகம்.பொது வினியோகத் திட்டத்தில், ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் தரப்பட்ட கார்டுகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் குறைவாகவே அரிசி ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள கார்டுதாரர்களில் 50 சதவீதம் பேர் கூட, ரேஷன் அரிசியை வாங்குவதில்லை. இதனால், ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியில் 30 சதவீதம் கடத்தலுக்கு மட்டுமே செல்கிறது.ஒரு ரூபாய்க்கு இங்கு விற்கப்படும் அரிசி, கேரளாவில் 10 ரூபாய் வரை விலை போவதால், ஒரு லாரியில் ரேஷன் அரிசி கடத்தினால் கூட, குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். போலீசார், கூட்டுறவுத் துறை, உணவு வழங்கல் துறை, கடத்தலுக்கு உதவும் பைலட்கள் எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்த பின், ஒரு "டிரிப்'புக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் வரும்.கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், சிவில் சப்ளை போலீசாருக்கு மட்டுமே உள்ளது. அதிலுள்ள அதிகாரிகளின் மாற்றத்தைப் பொறுத்தே, அரிசி கடத்தல் தடுக்கப்படுகிறது.கடந்த ஆண்டில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கொண்டு வரப்பட்ட சில நாட்களில், ரேஷன் அரிசி கடத்தல் கட்டுக்கடங்காமல் போனது. அதை அறிந்த தமிழக முதல்வர் கருணாநிதி, சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக ராதாகிருஷ்ணனை நியமித்தார்.அவர் மேலிருந்து கீழ்வரை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.தயவு தாட்சண்யமின்றி பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். அவரது அதிரடிகளால், அரிசி கடத்தல் கட்டுப்பாட்டுக்கு வந்தது.அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட பிறகு, அடங்கி ஒடுங்கியிருந்த அரிசி கடத்தல்காரர்கள் தெம்படைந்தனர்; சிறையில் இருந்த பலரும் வெளிவந்தனர். இதனால், முன்னை விட பல மடங்கு அதிகமாக கடத்தல் நடந்து வருகிறது.குண்டர் சட்டத்தின் கீழ் கைதான ஜனார்த்தனன், நாராயணன் ஆகியோர் இப்போது மும்முரமாக அரிசி கடத்தலைச் செய்கின்றனர். நாமக்கல் குமார், செந்தில்மணி, அலி மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட "மெகா' கடத்தல்காரர்கள், எவ்வித தடையும் இல்லாமல் அரிசி கடத்தலைச் செய்து வருகின்றனர்.இவர்களில், நாமக்கல் குமாருக்கு, தமிழகத்தின் உணவுத் துறை வி.ஐ.பி.,யே ஆதரவு தருகிறார் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.இதேபோல, சேலத்திலுள்ள ஆளும்கட்சி வி.ஐ.பி., பெயரைச் சொல்லி, சேலம் மாவட்டத்திலிருந்து ஏகப் பட்ட அரிசி லாரிகள், கோவை வழியாக கேரளா செல்கின்றன.சேலம் மாவட்டத்துக்குள் இந்த லாரிகள் எதையும் பிடிக்கக் கூடாது என்பது, அங்குள்ள போலீசாருக்கு அந்த ஊர் ஆளும்கட்சி வி.ஐ.பி.,யின் உத்தரவாம். அதேபோல, ஈரோடு மாவட்டத்திலிருந்தும் சர்வ சாதாரணமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.பொள்ளாச்சி மற்றும் கோவை அருகிலுள்ள பல வழித்தடங்களில் தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகச் சொல்கின்றனர், விவரமறிந்த அதிகாரிகள். அவர்கள் கைப்பற்றுவது, வாரத்துக்கு ஓரிரண்டு லாரிகளை மட்டுமே.பத்திரிகைகளில் செய்தி வந்தால், அரிசி கடத்தல்காரர்களைக் கூப்பிட்டு, "நாலு நாட்களுக்கு வண்டி ஓட்டாதே' என்று ஒற்றை வரியில் உத்தரவிடும் போலீசார், அந்த நான்கு நாட்கள் கழித்து அரிசி கடத்தல்காரர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பது வாடிக்கையாக நடக்கிறது.ஆளும்கட்சியினரின் ஆதரவு, போலீசாரின் மாமூல் விருப்பம், ரேஷன் கடைக்காரர்களின் தைரியம், உணவு வழங்கல் துறையினரின் ஒத்துழைப்புடன் ரேஷன் அரிசிக் கடத்தல் உச்சகட்ட வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், தேர்தலின்போது இந்த "ஒரு ரூபாய் அரிசி', எதிர்க்கட்சி பிரசாரத்துக்கே பயன்படும் சூழல் உருவாகியுள்ளது.ஆளும்கட்சி வி.ஐ.பி.,யின் பினாமிக்கு ஆர்டர் : ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதந்தோறும் 50 ரூபாய்க்கு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம் போன்ற மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் இரு மாதங்களில், இந்தப் பொருட்கள் மிகவும் நன்றாக இருந்ததாகவும், இப்போது மிகவும் தரம் குறைந்த பொருட்கள் தரப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அந்தந்த மாவட்டத்திலேயே இதை கொள்முதல் செய்துகொள்ள, அரசு அனுமதி வழங்கியதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளும் கட்சி பிரமுகர்களே "பினாமி' பெயர்களில் இந்த ஒப்பந்தத்தை எடுத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இதன் மொத்த கொள்முதல் விலை 30 ரூபாய்க்குள் இருக்கும் என்கின்றனர் மக்கள். இதனால், ஒரு ரேஷன் கார்டுக்கு 20 ரூபாய் வீதம் லாபம் கிடைக்கும்.                                                                                - நமது சிறப்பு நிருபர்-

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்