சென்னை:தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று அதிகாலை புறப்பட்டது. முதற்கட்டமாக, 416 பேர் விமானம் மூலம் மதீனா புறப்பட்டுச் சென்றனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான், நிகோபரில் இருந்து இந்த ஆண்டு மொத்தம் 3,833 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து ஆறு குழந்தைகள் உள்ளிட்ட மூன்றாயிரத்து 458 பேரும், புதுச்சேரியில் இருந்து 247 பேரும், அந்தமான், நிகோபர் தீவுகளில் இருந்து 101 பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று காலை சென்னையில் இருந்து மதீனா புறப்பட்டது. சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் நேற்று காலை 6 மணிக்கு 198 ஆண்கள், 218 பெண்கள் உள்ளிட்ட 416 பேர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் செயலர் அலாவுதீன் உட்பட ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
அமைச்சர் மைதீன்கான் பேட்டியளிக்கையில், "ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு தேவை யான உதவிகளை செய்து வருகிறது. இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (நேற்று) துவங்கியுள்ள இந்த ஹஜ் பயணம் வரும் 31ம் தேதி வரை தொடரும்.
ஹஜ் யாத்திரை செல்பவர்கள் அங்கு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு, வரும் டிசம்பர் 4ம்தேதி முதல் திரும்பத் துவங்குவர். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக் காக வரும் விண்ணப் பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம்' என்றார்.