சென்னை : "முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று' எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், "முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, "நம்பிக்கையில்லாதோர் மீதான போர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.
"ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.