சென்னை:'தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:ரவிக்குமார் - வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது.
இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர்செல்வம் - அ.தி.மு.க: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.