விழுப்புரம் மாவட்டக் கோயில்கள் | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements
விழுப்புரம் மாவட்டக் கோயில்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2010
00:00

அன்னியூர்
விழுப்புரத்திலிருந்து வடமேற்காக செஞ்சியை நோக்கிச் செல்லும் சாலையில் 18 கிமீ பயணம் செய்து அன்னியூரை அடைகிறோம். ""அன்னையூர்'' என்பதுதான் அன்னியூர் ஆனது என்றும் ; வன்னிமரத்தைத் தலமரமாகக் கொண்டு வன்னியூர் என அழைக்கப்பட்டு பின்னர் அன்னியூராக மருவியது என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.மரத்தின் பின்னே நின்றவாறு மறைந்திருந்து வாலியை வதம் செய்த பாவம் தீருவதற்காக ராமபிரான்,இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டதால், ராமநாதீசுவரர் என்ற திருநாமங்கொண்டுள்ளார், இத்தலத்து ஈசன். ராமாயணத்தை நினைவுகூறும் வகையில், இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்களும் அமைந்திருப்பது,தலபுராணத்திற்கு வலுவூட்டுகின்றன.

அன்னை நான்கு கரங்களுடன் திரிபுரசுந்தரி என்ற திருநாமங்கொண்டு நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். தனது இடது காலை தரையில் வைத்தபடி,வலது காலை காகத்தின்மீது வைத்தபடி அமர்ந்து அபூர்வமாக காட்சி தரும் சனீசுவரர் திருவுருவம், அன்னியூர் தலத்தின் தனிச்சிறப்பாகும். அருகிலேயே நீளாதேவி, பூதேவி சமேதராக சேவை சாதிக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயமும் உள்ளது.

* பனைமலை
காஞ்சி கயிலாயநாதர் கோயிலைக் கட்டிய மாமன்னன்தான் இந்தக் கோயிலையும் கட்டியிருக்க வேண்டும் என்று, தொலைவிலிருந்தே நமது கருத்தை தெரிவித்துவிடலாம். அதுதான் பனமலை தாளகிரீசுவரர் திருக்கோயில்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில், விழுப்புரத்திற்கு வடமேற்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தபுரத்தையடுத்து உள்ளது பனமலை. பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் வயல்களுக்கு நடுவே, நீண்ட மலை ஒன்று நம் கண் எதிரில் தெரிகிறது. பாறைமேல், ஒரு பூண்டு கூட முளைத்திடவில்லை. உச்சியிலே ஒரு கோயில் கம்பீரமாகத் தெரிகிறது.

சதுரமான கருவறையில் தாளகிரீசுவரர் அருள் பாலிக்கிறார். பனைமரத்தை தலமரமாகக் கொண்ட ஆலயங்கள் வரிசையில் பனமலையும் இடம் பெறுகிறது. ""தாள்'' என்பது பனையைக் குறிக்கும். அதனால்தான் ""தாளகிரீசுவரர்'' என்று திருநாமங்கொண்டுள்ளார். இடதுபுறம் அஸ்ததாளாம்பிகை தனிச் சன்னதி கொண்டுள்ளாள். காஞ்சி கயிலாயநாதர் ஆலயம் போலவே காட்சி தருகிறது. மூன்று தள மூலவர் விமானம். கருவறை விமானத்தைச் சுற்றிலும் சிங்கத் தூண்களிடையே, சிவபராக்ரம சிற்பங்கள். கருவறையின் உள்ளே, காஞ்சியைப் போலவே சோமாஸ்கந்தர் திருவுருவம் புரைக்கற்களால் ஆனது. மூலவர் தாளகிரீசுவரரின் இருபுறமும் அயன்கலைமகள், அரி-திருமகள் சிற்பங்களைக் காணமுடிகிறது.
மலைப்பாதையிலேயே குகை ஒன்றில், சிம்மவாகினியாக அஷ்டதசபுஜ துர்க்கை ஒன்றும் உள்ளது.
வேப்பமரம் ஒன்றையும் அருகில் காண்கிறோம். பலநூறு ஆண்டுகளாயினும், பழமை மாறாமல் பொலிவு நீங்காமல், கம்பீரமாகக் காட்சித் தருகிறது பனமலை தாளகிரீசுவரர் திருக்கோயில். பனமலையைச் சுற்றிலும் உள்ள ஏழு ஊர்மக்கள், சித்திரை மாதத்தில் பெருவிழாக் கொண்டாடுகிறார்கள். சுவாமி ஏழுஊர்களுக்குத் திருவுலா செல்வது தனிச்சிறப்பு. பனமலைக்கு 3 கிமீ தொலைவில் மருதீசுவரர் அருள்பாலிக்கும் சங்கீதமங்கலம் குறிப்பிடத்தக்கது

*பிரம்மதேசம்
பனமலைக்கு கிழக்கே உள்ளது பிரம்மதேசம். செஞ்சிபுதூர் செல்லும் சாலையில் சென்று காணவேண்டிய, மிகப்பழமையான சிற்பக் கருவூலம் இந்தத் திருத்தலம். சந்தடியற்று, ஒதுங்கி நிற்கும் ஊரின் நடுவே, உள்ளூர் மக்கள் இதன் அருமையை அறியாதிருக்க, மத்திய அரசின் தொல்லியல்துறை, இதன் பழமையை அறிந்துணர்ந்து, பழமை அழியாதிருக்கும் வகையில் திருப்பணியைச் செய்து வருகிறது. வழிபாட்டுக்கு வருமா என்பதை பிரம்மபுரீசுவரர் தான் உறுதி செய்ய வேண்டிய நிலை.
வேதம் ஓதும் அந்தணர்களின் குடியிருப்பை உருவாக்கி, ஆலயமும் எழுப்பி, அந்த நாட்களில்,அந்த ஊர்களை பிரம்மதேசம், சதுர்வேதிமங்கலம் என்று அழைத்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்படி ""பிரம்மதேசங்கள்'' உள்ளதைக் காணலாம்.

இரண்டு கோயில்கள்

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தில் பாதாலீசுவரர்,பிரம்மபுரீசுவரர் என்று இரு ஆலயங்கள் உள்ளன.
பிரம்மபுரீசுவரர் ஆலயம் ஊருக்கு வடமேற்கில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர வடிவிலான கருவறையில், வட்டவடிவமான ஆவுடையாரின் மேல், பிரம்மபுரீசுவரர், சிவலிங்கத்திருமேனி நம்மைக் கவருகிறது.பூதவரிசையிலேயே பஞ்சத்தந்திரக் கதைகளும், சிவபுராணச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

* எசாலம்
பிரம்மதேசத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது எசாலம். அடித்தளம் முதல், கருவறை விமானம், உச்சியில் கலசம் வரை கல்லினாலேயே அமையப்பெற்ற திருக்கோயில்.ராமநாத ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருவையாறைச் சுற்றிலும் அமைந்துள்ள ""சப்தஸ்தான'' திருத்தலங்களைப் போலவே, முழுவதும் கற்றளி, கம்பீரமாக அமைந்துள்ளது. அன்னை, ""திரிபுரசுந்தரி'' என்ற திருநாமங்கொண்டுள்ளாள். பிரம்மதேசமும் எசாலமும், மிக அருகில் அமைந்துள்ள, முற்றிலும் பழமையான திருக்கோயில்கள்.

(உலா தொடரும்)

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X