நாவல் பகுதி: சின்ன விஷயங்களின் கடவுள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2012
00:00

அந்தப் பிற்பகலில், அம்மு ஒரு கனவின் வழியாக மேல்நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தாள். ஒரேயொரு கரத்தையுடைய ஓர் இனிய மனிதன் அவளை ஓர் எண்ணெய் விளக்கின் ஒளியால் தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டிருந்தான். தரையில் அவனைச் சுற்றித் தோன்றி மறையும் நிழல்களுடன் போராடுவதற்கு இன்னொரு கை அவனுக்கில்லை.

அவனால் மட்டும் பார்க்க முடிகிற நிழல்கள்.

அவன் வயிற்றின் தசை மடிப்புகள் தோலுக்கடியில் ஒரு சாக்லெட் பாளத்தின் பிரிவுகளைப் போல எழும்பின.

அவளை ஓர் எண்ணெய் விளக்கொளியால் தன்னோடு சேர்த்துப் பிடித்திருந்தான். மெழுகுப் பாலீஷ் இட்டது போல் மினுமினுத்தான்.

அவனால் ஒரு நேரத்தில் ஒரு விஷயம்தான் செய்ய முடிந்தது.

அவளை அவன் பிடித்துக்கொண்டிருந்தால், அவளை முத்தமிட முடியாது. அவளை முத்தமிட்டால் அவனால் அவளைப் பார்க்க முடியாது. அவளை அவன் பார்த்தால் அவனால் அவளை உணர முடியவில்லை.

அவன் உடலைத் தன் விரல்களால் லேசாகத் தொட்டு, அவன் மென்மையான தோல் சிலிர்த்துக்கொள்வதை உணர்ந்திருக்கலாம். அவனுடைய தட்டையான வயிற்றிற்கடியில் அவளுடைய விரல்களை அலையவிட்டிருக்கலாம். அந்த மெருகேற்றப்பட்ட சாக்லெட் மடிப்புகளின் மீது அலட்சியமாக. கரும்பலகையின் மேல் தட்டையான சாக்பீஸைப் போல, நெல் வயலில் காற்று அலையடிப்பதைப் போல, ஒரு நீல தேவாலய வானத்தில் ஜெட் விமானத் தீற்றுகளைப் போல அவன் உடம்பில் வெவ்வேறு வடிவ சிலிர்ப்புத் திட்டுகளை உண்டாக்கியிருக்கலாம். மிகச் சுலபமாக அவள் செய்திருக்கக் கூடும், ஆனால் அவள் செய்யவில்லை. அவனும் அவளைத் தொட்டிருக்கக் கூடும், ஆனால் அவனும் தொடவில்லை. ஏனென்றால் அந்த எண்ணெய் விளக்கின் மங்கிய ஒளிக்குப் பின்னால், நிழல்களில், இரும்பு மடக்கு நாற்காலிகள் வட்டமாக அமைக்கப்பட்டிருந்தன. அந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் சாய்வான ரைன்ஸ்டோன் கறுப்புக் கண்ணாடிகளில் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பளபளப்பான வயலின்களைத் தமது தாடைகளின் கீழ் பிடித்திருந்தனர். வில்கள் ஒரே விதமான கோணங்களில் நிலைத்திருந்தன. அவர்கள் அனைவரும் தமது கால்களைக் மடக்கி வைத்திருந்தனர். வலது காலின் மேல் இடது கால். எல்லோருடைய இடது கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன.

சிலரிடம் செய்தித்தாள்கள் இருந்தன. சிலரிடம் இல்லை. சிலர் எச்சில் குமிழிகள் ஊதினர். சிலர் ஊதவில்லை. ஆனால் அனைவரது கண்ணாடிகளிலும் அந்தத் துடிக்கும் எண்ணெய் விளக்கின் பிம்பங்கள் பிரதிபலித்தன.

மடக்கு நாற்காலிகளின் வட்டத்துக்குப் பின்னால், உடைந்த நீலக் கண்ணாடி பாட்டில்களுடன் ஒரு கடற்கரை இருந்தது. நிசப்தமான அலைகள் உடைப்பதற்குப் புதிய நீல பாட்டில்களைக் கொண்டுவந்து, பழைய பாட்டில்களைத் திரும்ப அலைக்கிழுத்துக்கொண்டிருந்தன. கண்ணாடியின் மீது கண்ணாடி மோதும் கூர்மையான ஒலிகள். கடலில் ஒரு பாறையின் மீது, ஒரு செந்நீல ஒளிக்கற்றையில் ஒரு மஹோகனியும், ஆடும் நாற்காலியும் இருந்தன. உடைத்து நொறுக்கப்பட்டு.

கடல் கறுப்பாகவும் நுரை வாந்திப் பச்சையாகவும் இருந்தன.

மீன்கள் கண்ணாடிச் சில்லுகளை உண்டன.

இரவின் முழங்கைகள் நீரில் ஊன்றியிருந்தன. வீழும் நட்சத்திரங்கள் தமது மெல்லிய சில்லுகளைச் சொடுக்கின.

விட்டில்கள் வானத்தில் விளக்கேற்றின. நிலவு காணப்படவில்லை.

அவனால் நீந்த முடியும், தன்னுடைய ஒரே கரத்தை வைத்துக் கொண்டு. அவளால் தன் இரு கரங்களாலும்.

அவன் சருமம் உப்புக்கரித்தது. அவளுடையதும்.

மணலில் அவன் காலடித் தடங்கள் பதியவில்லை. நீரில் இறங்கினால் சிற்றலைகள் உண்டாகவில்லை. கண்ணாடிகளில் பிம்பம் விழவில்லை.

அவனை அவள் விரல்களால் தொட்டிருக்க முடியும். ஆனால் தொடவில்லை. அவர்கள் வெறுமனே ஒன்றாக நின்றிருந்தனர்.

அசையாமல்.

சருமத்தோடு சருமமாக.

வண்ணத் துகள்களாக ஒரு காற்றலை அவள் கூந்தலைக் கலைத்தது. கடலோரம் செங்குத்துப் பாறை போலத் திடீரென்று முடிந்திருந்த அவனது கையற்ற தோள் மீது அவள் கூந்தல் போர்த்தியது.

இடுப்பெலும்பு துருத்திய ஒரு மெலிந்த சிவப்புப் பசு தோன்றி கடலுக்குள் பாய்ந்து, கொம்புகளை ஈரப்படுத்திக்கொள்ளாமலும், திரும்பியே பார்க்காமலும் நேராக நீந்திச் சென்றது.

அந்தக் கனத்த, கிடுகிடுக்கும் சிறகுகளில் தன் கனவில் பறந்து சென்ற அம்மு, அப்பிரம்மாண்டச் சிறகுகள் தன் மேல் கவிய, ஓய்வெடுக்க இறங்கினாள்.

அவள் கன்னங்களில் பதிந்திருந்த நீலத்தில் குறுக்குத் தையல் போட்டிருந்த ரோஜாக்களை அழுத்திக்கொண்டிருந்தாள்.

அவள் கனவுகளின் மீது அவளுடைய குழந்தைகளின் முகங்கள் இரு கரிய, கவலை தோய்ந்த நிலவுகளைப் போல தொங்கிக்கொண்டு, உள்ளே நுழைய காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

“அம்மு இறந்துகொண்டிருக்கிறாளா?” எஸ்தாவிடம் ராஹேல் கிசுகிசுப்பதை அவள் கேட்டாள்.

“பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறாள்.” எஸ்தா துல்லியமாகக் கணிப்பவன். “இவள் நிறைய கனவு காணுவாள்.”

அவன் அவளைத் தொட்டால், அவளுடன் அவனால் பேச இயலவில்லை, அவளை அவன் நேசித்தால் அவனால் விலக இயலவில்லை, அவன் பேசினால் அவனால் கேட்க இயலவில்லை, அவன் போராடினால் அவனால் வெல்ல இயலவில்லை.

அந்த ஒரு கரம் கொண்ட மனிதன் யார்? யாராக இருக்க முடியும்? தோல்விகளின் கடவுளா? சின்ன விஷயங்களின் கடவுளா? சிலிர்ப்புகளுக்கும் திடீர் புன்னகைகளுக்குமான கடவுளா? கசப்பு உலோக வாசனைகளின் - பஸ்களின் கைப்பிடிக் கம்பிகளின் வாசனைகளைப் போல, அவற்றைப் பிடித்திருக்கும் நடத்துநரின் கைகளின் வாசனையைப் போல - கடவுளா?

“எழுப்பலாமா?” என்றான் எஸ்தா.

பிற்பகலின் பின்வாங்கும் வெளிச்ச விரல்கள் திரைச்சீலை வழியாகத் திருட்டுத்தனமாக நுழைந்து அம்முவின் கிச்சிலிப்பழ வடிவ டாங்கரைன் டிரான்சிஸ்டர் ரேடியோவின் மீது விழுந்தது. ஆற்றுக்குப் போகும்போது அம்மு டிரான்ஸிஸ்டரை எப்போதும் எடுத்துச் செல்வாள். (ஜிலீமீ ஷிஷீuஸீபீ ஷீயீ விusவீநீகிற்கு எஸ்தா தனது மற்றொரு பிசுபிசுத்த கையில் ஏந்திக்கொண்டுச் சென்றதும் கிச்சலிப்பழ வடிவம்தான்.)

பிரகாசமான வெயில் பட்டைகள் அம்முவின் கலைந்த முடிகளைப் பிரகாசப்படுத்தின. அவள் கனவின் படலத்துக்கடியில் அவள் காத்திருந்தாள், அவளுடைய குழந்தைகளை உள்ளே அனுமதிக்க விருப்பமின்றி.

“கனவு கண்டுகொண்டிருப்பவர்களை நடுவில் எழுப்பக்கூடாதென்று அம்மு சொல்வாள்” என்றாள் ராஹேல். “அவர்களுக்கு மாரடைப்பு வந்துவிடும் என்பாள்.”

அவர்களுக்குள் கலந்தாலோசித்து, அவளை நேரடியாக எழுப்புவதை விட மறைமுகமாகக் கலைப்பது என்று முடிவெடுத்தனர். எனவே இழுப்பறைகளைத் திறந்தனர், தொண்டையைச் செருமினர், சத்தமாகக் கிசுகிசுத்தனர், ஒரு பாட்டை மெதுவாக முணுமுணுத்தனர். காலணிகளை நகர்த்திவைத்தனர். அலமாரிக் கதவு ஒன்று கிறீச்சிடுவதைக் கண்டுபிடித்தனர்.

கனவின் படலத்துக்கடியில் படுத்திருந்த அம்மு, கண்ணைத் திறக்காமல் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு வலிக்குமளவுக்கு அவளுக்குப் பிரியம் சுரந்தது.

ஒற்றைக் கை மனிதன் தனது விளக்கை ஊதி அணைத்துவிட்டு அந்தத் தாறுமாறான கடற்கரைக்குக் குறுக்கே நடந்து அவனால் மட்டுமே பார்க்க முடிந்த நிழல்களுக்குள் சென்று கரைந்தான்.

கடற்கரையில் அவன் காற்சுவடுகள் பதிந்திருக்கவில்லை.

மடக்கு நாற்காலிகள் மடக்கப் பட்டன. கருங்கடல் அமைதியானது. கசங்கிய அலைகள் இஸ்திரி போடப்பட்டன. கடல் நுரைகள் மீண்டும் பாட்டில்களில் அடைக்கப்பட்டன. பாட்டில்கள் மூடப்பட்டன.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இரவு ஒத்திவைக்கப்பட்டது.

அம்மு தன் கண்களைத் திறந்தாள்.

ஒற்றைக் கை மனிதனின் அணைப்பிலிருந்து அவளுடைய இரட்டைக் கரு குழந்தைகள் வரை ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்து சேர்ந்தாள்.

“கெட்ட கனவு கண்டு பயந்து போயிருந்தாய்” அவள் மகன் தெரிவித்தான்.

“கெட்ட கனவல்ல” என்றாள் அம்மு.

“நீ செத்துக்கொண்டிப்பதாக எஸ்தா நினைத்தான்.”

“நீ ரொம்ப கஷ்டமாக இருந்தாய்” என்றான் எஸ்தா.

“நான் சந்தோஷமாக இருந்தேன்” என்றாள் அம்மு, சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறோம் என்றுணர்ந்து.

“அம்மு, நீ கனவில் சந்தோஷமாக இருந்தால் அது கணக்கில் சேருமா?” எஸ்தா கேட்டான்.

“எது கணக்கில் சேருமா?”

“சந்தோஷம்-அது கணக்கில் சேருமா?”

கலைந்த குருவிக்கூட்டுத் தலைவாரலோடு அவள் மகன் கேட்பது என்னவென்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது.

ஏனென்றால் உண்மையில், கணக்கில் சேரவேண்டியது மட்டுமே சேரும்.

எளிமையான, சிக்கலற்ற குழந்தைகளின் ஞானம்.

கனவில் மீன் சாப்பிட்டால் அது கணக்கில் சேருமா? அதாவது நீங்கள் மீன் சாப்பிட்டதாகுமா?

கால்சுவடுகளற்ற அந்த இனிமையான மனிதன் - அவன் கணக்கில் சேருவானா?

அம்மு அவளது கிச்சலிப்பழ ட்ரான்ஸிஸ்டரை எட்டி எடுத்து ஒலிக்கச்செய்தாள். செம்மீன் படத்திலிருந்து ஒரு பாட்டு ஒலித்தது.

அது ஓர் ஏழைப் பெண்ணின் கதை. அவள் ஒருவனைக் காதலித்தாலும் பக்கத்துக் கடற்கரையைச் சேர்ந்த வேறொரு மீனவனோடு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அந்த மீனவன் புது மனைவியின் பழைய காதலனைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரும்போது, கடலில் ஒரு புயல் உருவாகியிருக்கிறது என்று தெரிந்தும் தனது சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் செல்கிறான். இருண்டு, காற்று அதிகரிக்கிறது. கடலின் அடியிலிருந்து பூதாகரமான ஒரு சூழல் கிளம்பி மேலெழும்புகிறது. சூறாவளி இசைக்கு மத்தியில் அம்மீனவன் அச்சூழலில் சிக்கி, கடலின் ஆழத்துக்குள் மூழ்கிப் போகிறான்.

காதலர்கள் ஒரு தற்கொலை தீர்மானத்துக்கு வந்து அவர்கள் கரங்கள் பிணைத்துக்கொண்டிருக்க, அடுத்தநாள் காலை கடலோரத்தில் பிணமாக அடித்து வரப்பட்டிருக்கின்றனர். எனவே அனைவரும் இறந்து போகின்றனர். அந்த மீனவன், அவன் மனைவி, அவளுடைய காதலன் மற்றும் கதையில் எந்தப் பங்கும் வகித்திராத ஒரு சுறா மீனும் இறந்துபோகிறது. கடல் அனைவரையும் கொண்டுவிடுகிறது.

அவளுடைய இரட்டைக் குழந்தைகளோடு, தூக்கத்தில் உப்பிய கன்னங்களில் நீலக் குறுக்குத் தையலிட்ட இருட்டும், வெளிச்ச விளிம்புகளாகக் குறுக்குத் தையலிட்ட ரோஜாக்களும் பதிந்திருக்க அம்முவும் அந்தக் கிச்சலிப்பழ ரேடியோவோடு சேர்ந்து பாடினாள். மீனவப் பெண்கள் அந்தச் சோகமான இளம் மணப்பெண்ணுக்குத் தலைப்பின்னலிட்டு, அவளுக்கு விருப்பமற்ற ஒருவனைத் திருமணம் செய்துகொள்ள தயார்படுத்திக்கொண்டு பாடும் பாட்டு,

பண்டொரு முக்குவன் முத்தினு போயி

(முன்பு ஒரு மீனவன் கடலுக்குப் போனான்.)

படிஞ்ஞாறன் காற்றத்துமுங்ஙிப் போயி

(மேற்கிலிருந்து வீசிய சூறைக் காற்றில் மூழ்கிப் போனான்.)

ஒரு விமான நிலையத் தேவதைக் கவுன் தன்னுடைய மொடமொடப்பில் தரையில் நின்றுகொண்டிருந்தது. வெளியே முற்றத்தில் மொடமொடப்பான சேலைகள் வரிசையாக வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன. ஆஃப் ஒயிட்டும் கோல்டும். அவற்றின் கஞ்சியிட்ட மடிப்புகளில் பொடிப்பொடி கற்கள் புதைந்திருந்தன. இஸ்திரி போட எடுத்துச் செல்வதற்குமுன் சேலைகளை மடிக்கும்போது அவற்றை உதறி எடுக்க வேண்டும்.

அரயத்தி பெண்ணு பிழச்சுபோயி

(கரையிலிருந்த அவன் மனைவி சோரம் போனாள்.)

ஏற்றுமானூரில் மின்சாரம் தாக்கி இறந்த யானை (கொச்சுதொம்பன் அல்ல) எரியூட்டப்பட்டது. நெடுஞ்சாலையில் ஒரு மாபெரும் சிதை எழுப்பப்பட்டது. நகராட்சியின் என்ஜினியர்கள் அதன் தந்தங்களை அறுத்தெடுத்துத் தங்களுக்குள் அதிகாரபூர்வமற்ற முறையில் பங்கிட்டுக்கொண்டனர். சமமில்லாமல். எண்பது டின் சுத்தமான நெய் யானை மேல் ஊற்றப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது. அடர்ந்த புகைச்சுருள்கள் எழும்பி வானத்தில் சிக்கலான கோலங்களிட்டன. பத்திரமான தூரத்தில் மக்கள் கூடி நின்று அவற்றின் அர்த்தங்களைப் படித்தனர்.

அங்கே ஏராளமான ஈக்கள் இருந்தன.

அவனே கடலம்ம கொண்டு போயி.

(கடலம்மா அவனைக் கொண்டுச் சென்றுவிட்டாள்.)

சுடுகாட்டுப் பருந்துகள் பக்கத்து மரங்களின் மீது இறங்கி, இறந்த யானைக்குச் செய்யப்படும் இறுதிச் சடங்குகளை மேற்பார்வையிடுவதைப் பார்வையிட்டன. மாபெரும் உள்ளுறுப்புகளைப் பிடுங்கித் தின்ன வாய்ப்பு கிடைக்கலாம். மிகப் பெரிய பித்தப்பை ஒன்றோ பிரம்மாண்டமான மண்ணீரலோ.

அவை ஏமாற்றமடையவில்லை. முழுத் திருப்தியுமடையவில்லை.

அம்மு தன் பிள்ளைகள் இருவரின் மீதும் மெலிதாகத் தூசு படிந்திருப்பதைக் கவனித்தாள். இலேசாகச் சர்க்கரை தூவப்பட்ட, ஒரே மாதிரி இல்லாத இரு கேக் துண்டுகளைப் போல. ராஹேலின் கரும் முடிச்சுருள்களுக்கு நடுவே பொன்னிறச் சுருள் ஒன்று புதைந்திருந்தது. வெளுத்தாவின் புழக்கடையிலிருந்து வந்த சுருள். அம்மு அதை வெளியே எடுத்தாள்.

“உன்னிடம் முன்பே சொல்லியிருக்கிறேன். அவன் வீட்டிற்கு நீங்கள் போவது எனக்குப் பிடிக்கவில்லை. அது சிக்கலைத்தான் உண்டாக்கும்.”

என்ன சிக்கல் என்று அவள் சொல்லவில்லை. அவளுக்குத் தெரியவில்லை.

எப்படியோ, அவன் பெயரைக் குறிப்பிடாததன் மூலம் அந்த நீலநிற குறுக்குத் தையலிட்ட பிற்பகலின் கசங்கிய நெருக்கத்துக்குள்ளும், அந்த டாங்கரைன் ட்ரான்ஸிஸ்டரின் பாடலுக்குள்ளும் அவனைத் தான் இழுத்துவந்துவிட்டதை அறிந்தாள். அவன் பெயரைக் குறிப்பிடாததன் மூலம் அவள் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பதை உணர்ந்தாள். அந்த ஒப்பந்தத்துக்குச் செவிலித்தாய்களாக இருந்தது அல்லது இருக்கப் போவது அவளுடைய மரத்தூள் தூவிய இரு கரு இரட்டைக் குழந்தைகள்தாம்.

அவன் யாரென்று அவளுக்குத் தெரிந்தது - தோல்வியின் கடவுள், சின்ன விஷயங்களின் கடவுள். ஆம், அவளுக்குத் தெரியும்.

அந்த டாங்கரைன் ரேடியோவை அணைத்தாள். பிற்பகல் மௌனத்தில் (வெளிச்ச விளிம்புகள் ஜரிகையிட்டிருக்க) அவள் குழந்தைகள் அவளுடைய கதகதப்புக்குள் சுருண்டுகொண்டனர். அவளது வாசம். தம்முடைய தலைகளை அவளுடைய கூந்தலால் மூடிக்கொண்டனர். அவளுடைய தூக்கத்தில் அவர்களை விட்டு அவள் பயணப்பட்டுவிட்டதை அவர்கள் எப்படியோ உணர்ந்தனர். அவளுடைய மேல் வயிற்றின் மீது பரப்பி வைத்திருந்த தமது சிறிய உள்ளங்கைகளால் அவள் தோலைப் பற்றி அவர்களிடம் இழுத்துக்கொண்டனர். அவளது பாவாடைக்கும் ஜாக்கெட்டுக்கும் நடுவே. அவர்களுடைய பின்னங்கைகளின் பழுப்புநிறம் அவர்களுடைய அம்மாவின் வயிற்றுத் தோலின் பழுப்புடன் மிகச் சரியாக ஒத்திருந்ததை ஆசையுடன் கவனித்தனர்.

“எஸ்தா, இங்கே பார்” அம்முவின் தொப்புளிலிருந்து தெற்கே செல்லும் மென்மையான கோட்டை ராஹேல் பிடித்துக் கிள்ளிக்கொண்டே கூறினாள்.

“இங்கேதான் நாங்கள் உன்னை எட்டி உதைத்தோம்.” எஸ்தா ஒரு வெள்ளி ரேகை மேல் விரலை ஓட்டினான்.

“அது பஸ்ஸிலா, அம்மு?”

“வளைந்து வளைந்து போகும் எஸ்டேட் ரோட்டிலா?”

“பாபா உன் தொப்பையை எப்போது பிடித்துக் கொண்டார்?”

“நீங்கள் டிக்கெட் வாங்க வேண்டியிருந்ததா?”

“உன்னை நாங்கள் கஷ்டப்படுத்தினோமா?”

பின், தன்னுடைய குரலைச் சாதாரணமாக ஆக்கிக்கொண்டு, ராஹேல் கேட்டாள்: “நம்முடைய அட்ரஸை அவர் தொலைத்து விட்டிருப்பாரோ?”

அம்முவின் சுவாசத்தில் நிகழ்ந்த ஒரு சிறிய இடைவெளி, ராஹேலின் நடு விரலை எஸ்தா அவனுடைய விரலால் தொட வைத்தது. நடு விரலோடு நடு விரலைக் கோத்து அவர்களுடைய அழகான அம்மாவின் மேல்வயிற்றில் வைத்து அந்த ரீதியிலான தமது கேள்விகளைக் கைவிட்டனர்.

“இது எஸ்தாவின் உதை, இது என்னுடைய உதை” என்றாள் ராஹேல். “. . . இது எஸ்தாவுடையது. இது என்னுடையது.”

அவர்களுடைய அம்மாவின் ஏழு வெள்ளிநிறப் பிரசவச் சுருக்கங்களைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டனர். பின் ராஹேல் தன் வாயை அம்முவின் வயிற்றின் மேல்வைத்து, மென்மையான சதையை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினாள். தலையைப் பின்னுக்கிழுத்துக்கொண்டு அவள் அம்மாவின் தோலில் மேல் லேசான சிவப்பில் தன் பல் தடத்தையும் பளபளக்கும் எச்சில் வட்டத்தையும் ரசித்தாள்.

அந்த முத்தத்தின் களங்கமின்மையை அம்மு வியந்தாள். அது பளிங்கைப் போன்ற தெளிவான முத்தம். சிறுவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் அவர்கள் வளர்வதற்காகக் காத்திருக்கும் வெறியோ ஆசையோ சூழ்ந்திருக்காத முத்தம். திருப்பி முத்தத்தைக் கோராததொரு முத்தம்.

கேள்விகளால் நிரம்பி, பதிலைக் கேட்கும் சந்தேக முத்தமல்ல.

கனவுகளில் வரும் அந்த இனிய, ஒற்றைக் கை மனிதனின் முத்தங்களைப் போல.

அவர்கள் தன்னைக் கையாள்வதில் இருக்கும் ஒழுக்க வரம்பு அம்முவுக்குச் சோர்வு ஏற்படுத்தியது. தன் உடலைத் திரும்பப் பெற விரும்பினாள். அது அவளுடையது. போதுமென்ற சலிப்பில் குட்டிகளை உதறிவிட்டு விலகும் பெண் நாயைப் போல அவளுடைய குழந்தைகளை விலக்கிவிட்டு எழுந்தாள். கூந்தலைச் சுருட்டி கழுத்தருகில் முடிச்சிட்டுக்கொண்டாள். கட்டிலிலிருந்து காலை அகற்றி இறங்கி, ஜன்னலருகே சென்று திரைச்சீலையைத் திறந்தாள்.

பிற்பகலின் சாய்ந்த வெயில்கற்றை அறைக்குள் வெள்ளமாகச் சரிந்து, படுக்கையிலிருந்த இரு குழந்தைகளையும் பிரகாசமாக்கியது.

அம்முவின் குளியலறைக் கதவின் தாழ்ப்பாள் பூட்டப்படும் சத்தம் இரட்டையர்களுக்குக் கேட்டது.

க்ளிக்.

குளியலறையிலிருந்த உயரமான கண்ணாடியில் அம்மு தன்னைக் கவனித்தாள். அவளது எதிர்காலத்தின் கோரத்தோற்றம் அவளைக் கிண்டல் செய்வது போலத் தோன்றியது. ஊறலிட்டு, சாம்பல் நிறத்தில். கபமிட்ட கண்கள். தளர்ந்து தொங்கும் கன்னங்களில் குறுக்குத் தையல் ரோஜாக்கள். எடைப்பைகளைப் போல தொங்கும் வதங்கிய மார்புகள். கால்களுக்கிடையில் எலும்பைப் போல் உலர்ந்து, ரோமங்கள் சிறகு போல் வெளுத்து. உதிரியாக. நசுங்கிய பெரணிச் செடி போல நொய்ந்து.

செதிள் செதிளாக, உறைபனி போல உதிரும் சருமம்.

அம்மு நடுங்கினாள்.

அந்த வெப்பமான பிற்பகலில் வாழ்க்கை வாழ்ந்து தீர்ந்து விட்டதென்ற அப்பட்டமான உணர்வும் அவளது கோப்பை முழுக்கப் புழுதி நிரம்பியிருக்கின்றனவென்றும் நிதரிசனமாயின. அந்தக் காற்று, அந்த வானம், அந்த மரங்கள், அந்தச் சூரியன், அந்த மழை, அந்த ஒளியும் இருட்டும், அனைத்தும் மெதுவாக மணலாக மாறி நாசித்துவாரங்களை, நுரையீரல்களை, வாயை அந்த மணல் நிரப்பும். அந்த பாரம் அவளைக் கீழே தள்ளி, அவளும் தரைக்குள் திருகிக்கொண்டே புதைந்து போவாள். கடற்கரை நண்டுகள் சடுதியில் வளை தோண்டிக்கொண்டு மணலில் புதைவது போல.

அம்மு உடைகளைக் களைந்துவிட்டு ஒரு சிவப்பு நிற டூத் பிரஷ்ஷை எடுத்துத் தன் மார்பகத்துக்கடியில் வைத்துப் பிடித்துக்கொண்டு நிற்கிறதாவென்று பார்த்தாள். அது கீழே விழுந்தது. அவள் தன்னையே தொட்டுப் பார்த்துக்கொள்ளும்போது தசை விறைத்து, வழவழப்பாயிருந்தது. அவள் கைகளுக்குள் அவள் மார்புக்காம்புகள் சுருக்கி, கருப்புக் கொட்டைகளைப் போல இறுகி, அவள் மார்புகளின் மிருதுவான சருமத்தை இழுத்தன. அவள் தொப்புளிலிருந்து இறங்கிய மெல்லிய கோடு, அவள் அடிவயிற்றின் மென்மையான வளைவில் சரிந்து அவளுடைய கரிய முக்கோணத்தில் முடிந்தது. வழி தொலைத்த பயணிக்கு வழிகாட்டும் அம்பைப் போல. அனுபவமற்ற காதலனைப் போல.

கூந்தலை அவிழ்த்துவிட்டு அது எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறதென்று திரும்பிப் பார்த்தாள். அது அலையலைகளாகவும், சுருள் சுருள்களாகவும் கீழ்ப்படியாத முடிக்கற்றைகளாக - உள்ளே மிருதுவாகவும், வெளியே சொரசொரப்பாகவும் - சரிந்து, சிறிய, வலுவான இடையின் வளைவு தொடங்கும் இடத்துக்குக் கொஞ்சம் கீழே வரை வந்தது. குளியலறை புழுக்கமாக இருந்தது. சிறிய வியர்வை முத்துக்கள் அவள் சருமத்தின் மேல் வைரங்கள் போல கோத்திருந்தன. பின்பு அவை உடைந்து வழிந்தன. நடு முதுகின் பள்ளக்கோட்டில் வியர்வை ஓடியது. அவளுடைய உருண்ட கனத்த பின்பக்கத்தைக் கொஞ்சம் கவலையுடன் பார்த்தாள். அவ்வளவொன்றும் பெரிதாக இல்லை. (ஆக்ஸ்போர்டின் சாக்கோ இதைச் சந்தேகமின்றி ஜீமீக்ஷீsமீ பெரியவையல்ல என்றிருப்பான்.) அவளுடைய மற்ற பாகங்கள் மெல்லியவையாக இருப்பதால் இவற்றைப் பெரியவையெனலாம். வேறொரு பருத்த உடம்பிற்குச் சொந்தமானவை போல.

இவை ஒவ்வொன்றும் நிச்சயம் ஒரு டூத் பிரஷ்ஷைத் தாங்கிப் பிடிக்குமென்று அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை இரண்டுகூட. அவளுடைய பின்பக்கத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கலர்கலரான டூத் பிரஷ்களைச் செருகிக்கொண்டு அய்மனத்தின் தெருக்களில் அம்மணமாகத் தான் நடந்துசெல்வதைக் கற்பனைசெய்து பார்த்தாள். சிரிப்பு சத்தமாகவே வந்துவிட்டது. அவசரமாகத் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டாள். அதன் தயக்கத்திலிருந்து ஒரு பைத்தியக் குளவி தப்பித்து குளியலறைக்குள் வெற்றிகரமாக வட்டமடித்ததைக் கவனித்தாள்.

அம்முவுக்குப் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றிக் கவலையாக இருந்தது.

அவர்கள் குடும்பத்தில் அது ஓடுவதாக மம்மாச்சி கூறுவாள். திடீரென்று வந்து எதிர்பாராத நேரத்தில் அவர்களைப் பீடித்துக் கொள்ளுமாம். பாதில் அம்மாயி, தன்னுடைய அறுபத்தி ஐந்தாம் வயதில் தனது உடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஆற்றங்கரைக்கு ஓடிப்போய் மீன்களைப் பார்த்து பாடிக்கொண்டிருந்தாள். தம்பி சாச்சென் ஒவ்வொரு நாள் காலையிலும் தான் கழித்த மலத்தை நிட்டிங் ஊசியால் கிளறி, பல வருடங்களுக்கு முன்னால் விழுங்கிவிட்ட ஒரு தங்கப் பல்லைத் தேடிக்கொண்டிருந்தார். டாக்டர் முத்தச்சனை அவருடைய திருமணத்திலிருந்தே மூட்டையாகக் கட்டி வெளியேற்ற வேண்டியிருந்தது. எதிர்காலச் சந்ததியினர், ‘அம்மு என்றொருத்தி இருந்தாள் - அம்மு ஐப். ஒரு பெங்காலியைத் திருமணம் செய்து கொண்டாள். பைத்தியம் பிடித்துவிட்டது. சின்ன வயதிலேயே செத்துப் போய்விட்டாள். எங்கேயோ ஒரு மலிவான லாட்ஜில்’ என்பார்களா?

சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது தான் மனச்சிதைவு அவர்களிடம் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் என்றான் சாக்கோ. மம்மாச்சி அது காரணமல்ல என்றாள்.

அம்மு, தன் கனத்த கூந்தலைச் சேகரித்து முகத்தைச் சுற்றி, சுற்றினாள். முடிக்கற்றைகளின் பிரிவுகளுக்கிடையே முதுமைக்கும் மரணத்துக்கும் செல்லும் பாதையை உற்று நோக்கினாள். ஒரு மத்திய காலத் தூக்கிலிடுபவன் தனது தலைக் கவசத்தின் சாய்ந்த பிளவு வழியாகப் பலியாளைப் பார்ப்பதைப் போல. கரிய மார்புக்காம்புகளும், சிரித்தால் குழி விழும் கன்னங்களும் கொண்ட ஒரு மெல்லிய, நிர்வாணமான தூக்கிலிடும் அதிகாரி. யுத்தத்தில் தோற்ற செய்திக்கு மத்தியில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிறந்த இரு கரு இரட்டைக் குழந்தைகளால் உண்டான ஏழு வெள்ளி நிறப் பிரசவ ரேகைகளோடு.

அவளுடைய பாதையின் இறுதியிலிருந்தது அவளை பயமுறுத்திய அளவிற்கு அப்பாதையின் இயல்பு அம்முவைப் பயமுறுத்தவில்லை. தூரத்தைக் குறிக்கும் மைல்கற்கள் இல்லாத, மரங்கள் வளர்ந்திருக்காத, இறைந்த நாணயங்கள்போல் நிழல் போர்த்தியிருக்காத, மூடுபனி கவிந்திருக்காத, பறவைகள் மேலே வட்டமிடாத, சாலை முடிவைக் கொஞ்சம்கூட மறைக்காத, வளைவுகளோ திருப்பங்களோ கொண்டை ஊசி வளைவுகளோ இல்லாத, அவளுக்கு மிகத் தெளிவாக முடிவதைக் காட்டும் நேர்ச்சாலை. இதுதான் அம்முவுக்கும் ஒரு கொடூர பயத்தை நிரப்பியது. தன் எதிர்காலம் கணித்துச் சொல்லப்படுவதைக் கேட்க அம்முவிற்கு விருப்பம் கிடையாது. அது அவளுக்கு மிகுந்த அச்சமூட்டுவது. அவள் சின்னதாக ஒரு வரம் கேட்கலாமென்றால், அது தெரிந்துகொள்ள இயலாமையாகத்தானிருக்கும். ஒவ்வொரு நாளும் அவளுக்கு நிகழப் போவதென்னவென்று தெரிந்துகொள்ளவியலாமை. அடுத்த மாதம், அடுத்த வருடம் அவள் எங்கிருப்பாள் என்று அறிந்துகொள்ளவியலாமை. பத்து வருடங்கள் கழித்து என்ன நடக்குமென்றறியாத அறியாமை. அவளுடைய சாலை எந்தப் பக்கம் திரும்புமென்றும், வளைவைத் தாண்டி என்ன இருக்குமென்றும் தெரியாமை. ஆனால் அம்முவுக்குத் தெரிந்திருந்தது. அல்லது அவளுக்குத் தெரிந்திருப்பதாக நினைத்திருந்தாள். அது உண்மையில் அதேயளவு கொடுமையானது. (ஏனென்றால், கனவில் மீன் சாப்பிட்டிருந்தால், அதற்கு நீங்கள் மீன் சாப்பிட்டதாகவே அர்த்தம்.) அம்மு அறிந்திருந்தவற்றிலிருந்து (அல்லது அறிந்திருப்பதாக அவள் நினைப்பதிலிருந்து) பாரடைஸ் ஊறுகாய் கம்பெனியின் சிமெண்ட் தொட்டிகளிலிருந்து எழும் உவப்பற்ற, காடிப்புகை நாற்றம் எழுந்தது. இளமையைச் சுருங்கச் செய்யும், எதிர் காலங்களை ஊறுகாய் போடும் புகை.

தன் சொந்த முடியிலேயே முக்காடிட்டிருந்த அம்மு குளியலறையின் கண்ணாடியில் சாய்ந்து, விசும்புவதற்கு முயன்றாள்.

தனக்காக.

சின்ன விஷயங்களின் கடவுளுக்காக.

அவள் கனவின், சர்க்கரை தூவிய இரட்டை செவிலித்தாய்களுக்காக.

அந்தப் பிற்பகலில் - அவர்களுடைய மர்மமான அம்மாவின் பாதையின் போக்கை, விதி பயங்கரமாக மாற்றியமைத்தபோது, வெளுத்தாவின் புழக்கடையில் ஒரு பழைய படகு அவர்களுக்காகக் காத்திருந்தபோது, ஒரு மஞ்சள்நிற தேவலாயத்தில் ஒரு வௌவால் குட்டி பிரசவமாகக் காத்திருந்தபோது - அவர்களுடைய அம்மாவின் படுக்கையறையில் ராஹேலின் பிட்டத்தில் தன் தலையை வைத்து எஸ்தா தலைகீழாக நின்றான்.

நீலநிறத் திரைச் சீலைகளையும் ஜன்னல் கண்ணாடிகளைச் சோதித்துக்கொண்டிருந்த மஞ்சள் குளவிகளையும் கொண்டிருந்த படுக்கையறை. அவற்றின் வேதனைக்குரிய ரகசியங்களைச் சீக்கிரமே அறிந்துகொள்ளப் போகும் சுவர்களைக் கொண்டிருந்த படுக்கையறை.

அந்தப் படுக்கையறையைத்தான் அம்மு முதலில் தாளிட்டுக்கொண்டு, பின்பு தன்னையும் தாளிட்டுக்கொண்டாள். ஸோஃபீ மோளின் சவஅடக்கம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து, துக்கத்தில் உந்தப்பட்டவனாக சாக்கோ அந்த அறையின் கதவுகளைத்தான் உடைத்துத் தள்ளினான்.

“உன் உடம்பிலுள்ள எல்லா எலும்புகளையும் நான் அடித்து நொறுக்குவதற்கு முன் என் வீட்டை விட்டு வெளியே போய்விடு!”

என் வீடு, என் அன்னாசிப்பழங்கள், என் ஊறுகாய்.

அதற்குப் பிறகு ராஹேல் இந்தக் கனவைப் பல வருடங்களாகக் கண்டு வந்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பிணத்துக்கருகில். ஒரு பருமனான, முகமற்ற மனிதன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறான். பிணத்தின் முடியை அறுத்தெறிகிறான். அதன் உடம்பிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் முறிக்கிறான். குட்டி எலும்புகளைக்கூட உடைக்கிறான். பின்பு விரல்கள். செவி எலும்புகளை முறிக்கும்போது மரக்கிளைகளை உடைக்கிற மாதிரி சத்தம் கேட்கிறது. படக்படக். உடையும் எலும்புகளின் மெல்லிய ஒலிகள். பியானோ கட்டைகளை ஒரு பியானோ கலைஞன் கொல்கிறான். கருப்பு கட்டைகளைக்கூட. அந்த இருவரையுமே ராஹேல் நேசித்தாள் (பல வருடங்கள் கழித்து, மின் மயானத்தில் சாக்கோவின் பிடியிலிருந்த வியர்வை வழுக்கலைப் பயன்படுத்தித் தன் கையை அவள் பிடுங்கிக்கொண்டாலும்.) பியானோ கலைஞனும் பியானோவும்.

கொலைகாரனும் பிரேதமும்.

அந்தக் கதவு மெதுவாக உடைத்துத் தள்ளப்பட்டபோது தன் கைகளின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள அம்மு ராஹேலின் ரிப்பன்களை எடுத்து அவற்றின் ஓரங்களை ஹெம்மிங் செய்துகொண்டிருந்தாள். அந்த ரிப்பன்களுக்கு ஹெம்மிங் தேவையாக இருக்கவில்லை.

“நீங்கள் ஒருவரையொருவர் எப்போதும் நேசித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குச் சத்தியம் செய்துகொடுங்கள்.” பிள்ளைகளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு அவள் கூறுவாள்.

“பிராமிஸ்” எஸ்தாவும் ராஹேலும் சொல்வார்கள். அவர்களுக்கு ஒருத்தர், மற்றொருத்தர் என்று கிடையாது என்பதைக்கூற அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்காததால்.

இரண்டு அம்மிக் கற்களும் அம்மாவும். மரத்துப்போன அம்மிக் கற்கள். அவர்கள் செய்த அனைத்தும் அவர்களை அகற்றுவதற்காகவே திரும்புபவை. ஆனால் அது அப்புறம்.

அப் - புறம். பாசி படர்ந்த கிணறு ஒன்றில் ஆழமாக ஒலிக்கும் மணிச்சத்தம். விட்டில் பூச்சியின் நடுங்கும், ரோமக்கால்களைப் போல்.

அந்த நேரத்தில் தொடர்பற்றது மட்டுமே இருக்கும். அர்த்தங்கள் நழுவி விழுந்து விஷயங்கள் வீறல் விட்டிருப்பதைப் போல. தொடர்பறுந்ததாக. அம்முவின் ஊசியின் பளபளப்பு. ரிப்பன் ஒன்றின் நிறம். படுக்கை விரிப்பின் குறுக்குத் தையல் நெசவு. மெதுவாக உடையும் ஒரு கதவு. எதையும் அர்த்தப்படுத்தாத தனித்தனி விஷயங்கள். வாழ்வின் ஒளித்து மறைக்கப்பட்ட படிமங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் அறிவு - பிரதிபலிப்புகளைப் பிம்பங்களுடன் இணைப்பதைப் போல, மினுக்கலை ஒளியோடும் நெசவுகளைத் துணிகளோடும், ஊசிகளை நூலோடும் சுவர்களை அறைகளோடும் காதலை முதலில் பயத்தோடும் பின் கோபத்தோடும் இறுதியாகக் கழிவிரக்கத்தோடும் இணைப்பதைப்போல - சட்டென்று தொலைந்துபோனது.

“உன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இங்கிருந்து ஓடிப் போ.” உடைந்து சிதறியிருந்தவற்றைத் தாண்டி வந்த சாக்கோ கத்துகிறான். அவற்றைத் தாண்டி வரும்போது பார்க்கப் பயங்கரமாக இருக்கிறது. அவன் கையில் கதவின் ஒரு குரோமியக் கைப்பிடி இருக்கிறது. திடீரென்று வினோதமான நிசப்தம். தன்னுடைய பலத்தைக் கண்டு தனக்கே உண்டான வியப்பு. அவனுடைய பிரம்மாண்டம். அவன் ஆக்கிரமிப்பின் பலம். அவன் தனிப்பட்ட துக்கத்தின் விஸ்தீரணம்.

சிவப்பு. உடைந்து சிதறியிருந்த கதவுத் துண்டுகளின் நிறம்.

அம்மு, வெளியே அமைதியாகவும் உள்ளே நடுங்கிக்கொண்டும் தன்னுடைய தேவையற்ற ஹெம்மிங்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கவே மாட்டாள். வண்ணவண்ண ரிப்பன்கள் இருந்த டின் அவள் மடியில் திறந்துகிடக்கும். அந்த அறையின் மீது தனது தலையீட்டுரிமையை அவள் இழந்துவிட்டிருப்பாள்.

இதே அறையில்தான் (ஹைதராபாத்திலிருந்து அந்த இரட்டையர்கள் நிபுணர் பதிலளித்த பிறகு) அம்மு, எஸ்தாவின் சிறிய ட்ரங்க் பெட்டியிலும் காக்கி ஹோல்டாலிலும் பொருட்களை பேக் செய்தாள்: 12 கையில்லாத காட்டன் பனியன்கள், 12 கையுள்ள காட்டன் பனியன்கள். எஸ்தா, இவற்றில் உன் பெயர் வண்ணான் இங்க்கில் எழுதப்பட்டிருக்கிறது, பார். அவன் சாக்ஸ். அவனது டிரெயின் பைப் கால்சராய்கள். அவனது கூர் காலர் சட்டைகள். அவனது பீஜ், கூர் ஷூக்கள் (அவற்றிலிருந்துதான் கோப உணர்ச்சிகள் வரும்.) அவனது எல்விஸ் ரிகார்டுகள். அவனது கால்சியம் மாத்திரைகளும் வைடாலின் சிரப்பும். (வைடாலின்னோடு வந்த) அவனுடைய இலவச ஒட்டகச்சிவிங்கி. அவனது Books of Knowledge Vols 1- 4. இல்லை கண்ணா, அங்கே மீன் பிடிக்க ஆறு இருக்காது. அவனது வெள்ளைத் தோல் ஜிப்-அப் பைபிள். ஜிப்பின் கொக்கியில் இம்பீரியல் என்டமாலஜிஸ்ட்டின் செவ்வந்திக்கல் பதித்த கஃப் - லிங்க். அவனது மக். அவனது சோப்பு. அவனுக்கு முன்கூட்டியே தரப்பட்ட பிறந்தநாள் பரிசு. அதை அவன் திறக்கக் கூடாது. நாற்பது பச்சைநிற இன்லேண்ட் கவர்கள். இங்கே பார் எஸ்தா, இவற்றின் மேல் நம் முகவரியை எழுதியிருக்கிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் இதை மடிக்க வேண்டும். இப்படி. நீயே மடிக்கிறாயா என்று பார்க்கலாமா? எஸ்தா அந்தப் பச்சை இன்லேண்ட் கவர்களைப் புள்ளி வரிசையின் மேல் ஒழுங்காக மடிப்பான் (அதில் இங்கே மடிக்கவும் என்றிருக்கும்.) மடித்துவிட்டு அம்முவை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைப்பான். அது அவள் இதயத்தை நொறுக்கும்.

நிச்சயம் கடிதம் எழுதுவாய் அல்லவா? பிராமிஸ்? எழுதுவதற்கு எதுவும் இல்லாவிட்டால்கூட?

பிராமிஸ், எஸ்தா கூறுவான். தனது நிலைமையை முழுதாகப் புரிந்துகொண்டிராமல். திடீரென்று அவனுக்குக் கிடைத்திருக்கும் இந்தச் செல்வங்களில் அவனுடைய தயக்கங்கள், பயங்களின் கூர் விளிம்புகள் மழுங்கியிருந்தன. இவையெல்லாம் அவனுடையவை. அவன் பெயர்கூட இங்க்கில் மேலே எழுதப்பட்டிருக்கின்றன. படுக்கையறையின் தரையில் இறைந்திருக்கும் இவற்றை (அவன் பெயர் எழுதப்பட்ட) ட்ராங்க் பெட்டியில் பேக் செய்ய வேண்டும்.

வருடங்கள் கழித்து இதே அறைக்கு ராஹேல் திரும்பி வரப்போகிறாள். ஒரு மௌனமான அந்நியன் குளிப்பதைப் பார்க்கப் போகிறாள். நொறுங்கித் தூளாகும் பளீர் நீல சோப்பில் அவன் துணிகளைத் துவைப்பதைப் பார்க்கப் போகிறாள்.

ஒட்டிய தசை. தேன் நிறம். கண்களில் சமுத்திர ரகசியங்கள். செவிமடலின் மீது ஒரு வெள்ளி மழைத்துளி.

எஸ்தப்பாப்பிசாச்சன் குட்டப்பன் பீட்டர் மோன்.

அருந்ததி ராய்
தமிழில்: ஜி. குப்புசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X