உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர்...
— இப்படி, பல விதங்களில் ஆண்களுடன் இந்நாளைய பெண்கள் பழக நேரிடுகிறது. "ஆகா! இவர் நமக்கு லட்சியக் கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை!
ஆண்களை வகைப்படுத்தி, "உஷார்!' என்று எச்சரிக்கிறது ஒரு ஆங்கில பத்திரிகை. இன்னின்னாரை நம்பி ஏமாறாதீர்கள் என்று அது தந்துள்ள பட்டியலை, உ.ஆ., ஒருவர் உதவியுடன் படித்து, தெரிந்து கொண்டேன். பட்டியல் இதோ:
* திருமண சோம்பேறி!
இந்த நபர் காலையில் எழுந்து பல் விளக்க எவ்வளவு சோம்பல் படுவாரோ, அதே அளவுக்குக் கல்யாண விஷயத்திலும் சோம்பேறித்தனமாக இருப்பார். "படிப்பு முடியட்டும்... வேலை முடியட்டும்... பிரமோஷன் கிடைக்கட்டும்... தங்கச்சிக்கு திருமணம் ஆகட்டும்...' என்று, திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார். இவரை நம்பினால், உங்கள் திருமணத்தையும், மணிவிழாவையும் ஒன்றாக நடத்த வேண்டியிருக்கும்!
* சிக்கன சிங்காரம்!
ஒரு முறை உங்களை வெளியே அழைத்துச் சென்று திரும்பி வந்தவுடனே, என்னென்ன செலவாயிற்று என்று கணக்கு எழுதுகிறவர் இவர். இவரிடம் ஒரு மைல் தள்ளி நில்லுங்கள்; இதே போல, நோட்டு, நோட்டாக பறக்க விடுகிறவரிடமும் எச்சரிக்கை தேவை. ஒரு நாள் உங்களையே பறக்க விட்டு விடுவார் இவர்.
* புத்தக புழு!
ஏராளமாகப் படிப்பவர், அறிவு ஜீவி; ஆனால், பெண் மனம் இவருக்குப் புரியாது; புரிந்தாலும் கவலைப்படமாட்டார்.
* "தேக' பக்தர்!
"காபி சாப்பிடப் போகிறாயா? அதற்கு முன் இந்த மாத்திரையை போட்டுக் கொள்ளும்படி டாக்டர் சொன்னார் இல்லையா? டைரியில் கூட குறித்து வைத்திருக்கிறேன்!' என்று பதறுவார். எப்போதும் பயம், படபடப்பு. உங்களுக்கு தலைவலி வந்தால், அவருக்கு நெஞ்சுவலி வந்து விடும். இவரை திருத்துவது நன்று; துறப்பது அதனினும் நன்று!
* சாப்பாட்டு ராமன்!
"ஓட்டல் சாப்பாட்டினால் நாக்கே செத்து விட்டது!' என்று சொல்லி அடிக்கடி உங்கள் வீட்டு சமையலில் எதையாவது ருசி பார்த்தபடி இருக்கிறாரா? ஜாக்கிரதை! கல்யாணத்துக்குப் பிறகும் இவர் சமையலறையை விட்டுக் கிளம்ப மாட்டார்!
* பொழுது போக்காளர்!
இவருக்குத் தேவை ஒரு சினேகிதி தான்; மனைவி அல்ல!
* மிஸ்டர் நாகரீகன்!
"அது பண்பாடில்லை; இது, "பேஷன்' இல்லை. அப்படி சிரிக்காதே! இப்படிப் பேசாதே...' என்று அடிக்கடி உபதேசம் செய்து, உங்களை திருத்திக் கொண்டே இருப்பார். இவருடன் வாழ்வது கொடிது; கொடிது!
— இப்படி எர்ச்சரிக்கை செய்து இருக்கிறது அந்தப் பத்திரிகை. இன்னும் திருமணமாகாத வாசகியருக்கு இந்த எச்சரிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சரி... பெண்களுக்கு எச்சரிக்கை விட்டு எழுதியிருப்பது போல, எந்த வகையான பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வகையான பெண்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என, ஆண்களுக்கு அறிவுரை ஏதும் அதே புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதா என புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.
ம்... ஹூம்... ஒன்றும் இல்லை!
***
"மக்களும் மரபுகளும்' என்ற நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது! அதில் குருவிக்காரர்கள் பற்றிய குறிப்புகள் படு சுவாரசியமாக இருந்தன...
இதோ —
நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களை சேர்ந்த நாடோடி இனத்தவர். இவர்கள் மத்திய மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர். தென் மாநிலங்களில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்து வரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலந்து விடவில்லை!
நரிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள். சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுள்களைத் தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர்! அக்கடவுள்களின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அத்துணி மூட்டை, சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை கவனிக்கப்படுகிறது. சாமி மூட்டையிலுள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் அடங்கி இருக்கும். இவற்றை அவர்கள் பல பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வர்.
ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று, "சாமி பாவாடை' என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை; அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடக் கூடாது. அடுத்தவர்களுக்கு அவர்கள் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்ட விரும்புவதில்லை.
வழிபாடு செய்யும் பொழுது, தன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின்னர், ரத்தம் தோய்ந்த பாவாடையை அணிந்து, வழிபாடு செய்வான்.
பூவும், குங்குமமும், மஞ்சள் தூளும் தேவதைகளின் முன் படைக்கப்படும். பலி கொடுத்த மிருகத்தின் ரத்தமும் தேவதைகளின் முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த ரத்தத்தில் புரள்வான் குடும்பத்தின் தலைவன்.
ஒரு குடும்பத்தில் மகன் மணம் புரிந்து கொண்டால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படும். குடும்பத்தில் மூத்த மகன் தந்தையினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனது சாமி மூட்டையில் உள்ள ரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டுத் தலைமுறைகள் கடந்த மிகப் பழைய துணியாக இருக்கும். எப்பொழுதெல்லாம் பூஜை நடத்துகின்றனரோ, அப்பொழுதெல்லாம் உறவினர்களையும், கோத்திரக்காரர்களையும் (தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்கு தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பர்.
— இப்படியாகச் செல்கிறது புத்தகம்!
***