மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
00:00

புதிய சாகுபடி முறை: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சடைவளந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சிவானந்தம். இவர் மொட்டைமாடியில் எந்தப் புறத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டார். பிறகு பூமியில் அரை அடி குழிவெட்டி, நன்கு ஆறவைத்து, மக்கிய தொழு உரம் 10 கிலோ வைத்தார். விதைப்பதற்கு 30 நாட்களுக்கு முன் ஒரு கிலோ மக்கிய தொழு உரத்தில் சூடோமோனாஸ் 20 கிராம், அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா 50 கிராம் இவைகளைக் கலந்து நிழலில் நீர் தெளித்து (குழியில்) உடனே வைத்தார். குழியில் சாணிப்பாலில் ஊறவைத்த மூன்று விதைகளை நடவுசெய்தார். குழியை சுற்றி தடுப்பு வேலி அமைத்தார். இது ஆடு, மாடு, கோழி, எலி இவைகளின் பாதிப்பினை தடுத்தது. பத்து நாட்கள் கழித்து குழியில் முளைத்துள்ள மூன்று செடிகளில் நல்ல திடமான செடி ஒன்றைதேர்ந்தெடுத்து மற்றவைகளை அகற்றினார். செடிகள் கொடிவிட்டு வளர்ந்தது. கொடியை விட்டுஅரை அடி தள்ளி கணு உள்ள மூங்கிலை நட்டார். கொடி மூங்கிலில் ஏறத்துவங்கியது. இந்தக் கொடியை மொட்டைமாடிக்கு கொண்டு செல்ல முயற்சிசெய்தார். கொடி கீழே சாயாமல் இருக்க ஒரு முறை கொடியை கயிற்றில் பூ நார் கொண்டு கட்டினார். இதனால் கொடி கீழே வளைந்துவிடாமல் நிமிர்ந்துசென்றது. கொடிகளில் எந்த பக்கத்துளிரும் இல்லாமல் மாடியை எட்டிவிடட்டது. மாடியை எட்டியவுடன் செடி பரவலாக மொட்டைமாடியில் பரவியது. ஏற்கனவே தேர்ந்தெடுத்த சூரிய ஒளி படும் இடத்தில் செடி செழிப்பாக பரவியது. மாடியில் பரவும் இந்த செடி ஒரு விதையில் பிறந்து வளர்ந்தது ஆகும். இந்த செடி ஜூலை மாதம் விதைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் பூக்கள் பூத்தன. ஜனவரி மாதம் பரங்கி பிஞ்சுகள் விட்டு அறுவடைக்கு வந்துவிட்டது. செடியின் வேர் பூமியில் உள்ளது. காய்கள் மொட்டைமாடி மேல் காய்க்கின்றது. இதனால் ஆடு மாடுகள் போன்றவைகளால் பாதிக்கப் படவில்லை. காய்த்த காய்கள் மொட்டை மாடி மேல் அப்படியே இருந்து முதிர்ச்சி அடைந்தது. விவசாயிக்கு ஒரு விதையில் அறுபது பரங்கி (முதிர்ச்சி அடைந்தது) கிடைத்தது. ஒரு பரங்கி இருபது கிலோ எடை இருந்தது. வீட்டு உபயோகத்திற்கு போக ரூ.5000க்கு விற்கப்பட்டது.

குடும்பத்தின் உதவி: வீட்டில் விவசாயியின் மனைவி மற்றும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும் காய்களை அறுவடை செய்து கடையில் விற்பனையும் செய்துவந்தார்கள். பெண்களுக்கும் விவசாயத்தின் மேல் ஆசையும் வந்துவிட்டது. பிஞ்சுக் காய்களைவிட்டு நல்ல முதிர்ச்சி அடைந்த காய்கள் விற்பனை செய்யப்பட்டது. விவசாயி செய்த புதிய சாகுபடி முறையை மக்கள் நேரில் வந்து பார்த்தனர். கிராமங்களிலும் நகரங்களிலும் மொட்டைமாடியில் எளிமையாக செய்யக்கூடிய லாபகரமான, மனமகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய விவசாயம். பள்ளிக் குழந்தைகளை ஈடுபடுத்துவதால் விவசாயத்தில் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படுகிறது. மிக முக்கியமான கருத்துக்களை நாட்டின் நன்மைக்காக தனது செயல்விளக்கம் மூலம் நிரூபித்த விவசாயி சிவானந்தத்தை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

கிராமத்தில் வெற்றிகரமாக சாகுபடி செய்த பரங்கியை நகரத்தில் உள்ளவர்களும் செய்யலாம். சாகுபடி செய்யக்கூடியவர்களுக்கு விவசாயத்தில் ஆழ்ந்த பற்றும் இருக்க வேண்டியது அவசியம். மொட்டை மாடியில் தொட்டிகளில் காய்கறிகள் சாகுபடி செய்யலாம். தற்போது கடைகளில் காய்கறிகளின் விலை மிக அதிகமாகிவிட்டது. இம்மாதிரி காய்கறிகளை விலைக்கு வாங்காமல் மொட்டை மாடியில் சாகுபடி செய்தால் நமக்கு தரமிக்க காய்கறிகள் கிடைக்கும். காய்கறிகளை விற்றாலும் லாபம் கிடைக்கும். மொட்டை மாடியில் தொட்டிகளில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி செய்ய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்களுக்கு பயிற்சியும் அளிக்கின்றனர்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X