பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2013
00:00

கேட்டை திறக்கும்போது, ஹரிதாவின் அழுகுரல், ராமின் செவியை எட்டியது.
"பாவம் குழந்தை, இன்னைக்கு எதற்காக லதாவிடம் அடி வாங்கினாளோ...' என்று பத்து வயது மகளிடம் பரிதாபமும், மனைவி மேல் கோபமும் ஒரே சமயத்தில் தோன்றியது.
""அப்பா...'' அழுதபடியே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஹரிதா. கண்களை துடைத்து, ஆறுதலாய் தட்டி கொடுத்தவன், ""நீ உள்ளே போடா...'' என்று சொல்லி விட்டு, மனைவி பக்கம் திரும்பினான்.
""உனக்கு எவ்ளோ தரம் குழந்தையை அடிக்காதே, அடிக்காதேன்னு சொல்றது?''
""உங்களுக்கு என்ன.... நீங்க ஆபீஸ் போய்டுவிங்க. இவ ஸ்கூலில் பேரண்ட்ஸ் - டீச்சர்ஸ் மீட்டிங் நடக்கும்போது எல்லாம், நான்தானே அங்க போய் அசிங்கப்படறேன்.''
""இந்த தடவை என்ன சொன்னாங்க?''
""ஹும்ம்... உங்க பொண்ணு எல்லா சப்ஜெக்டிலும் வீக். கிரேட் ஷீட் கொடுத்து இருக்காங்க பாருங்க. இவ அது எதை பத்தியும் கவலைப்படாம, ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து விளையாடிட்டு வரா. ஸ்கூல் விட்டு வந்தா, ஒழுங்கா உட்கார்ந்து படின்னா கேக்கறதே இல்லை,'' கோபத்துடன் லதா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி அடித்தது.
கதவைத் திறந்தவள், ""அவளுக்கு உடம்பு சரி இல்லை விளையாட வர மாட்டா... நீ போய் விளையாடுமா,'' என்று வலிந்த குரலில் மென்மையை வரவழைத்து, பதில் சொன்னாள்.
கதவை சாத்திவிட்டு, ""இதுங்க தொல்லை வேற...'' என்று பொருமினாள்.
""யார திட்டற லதா?'' முகம் கழுவி வந்த ராம் கேட்டான்.
""வேற யாரு... எல்லாம் உங்க பொண்ணு கூட சுத்தற வானர படைதான்,'' குரலில் எரிச்சல் இருந்தது.
"குழந்தையை போட்டு ஏன் தான் இப்படி படுத்துகிறாள்...' என்று எண்ணியவாறே, கிரேடு ஷீட் எடுத்தவன், அதில் இருந்த மதிப்பெண்கள் கண்டு புருவம் உயர்த்தினான்.
""ஹே லதா... எல்லாத்துலயும் நல்லாதானே கிரேடு வாங்கி இருக்கா... அப்புறம் என்ன?''
""என்னத்த வாங்கி இருக்கா? "பி-பிளஸ், ஏ' அவ்ளோதானே. இது எல்லாம் ஒரு கிரேடா? "இ' வாங்கணும். அதாவது, "எக்ஸ்செலன்ட் கிரேடு' இந்த தடவை சொல்லிட்டாங்க. அடுத்த முறையும் இதே மாதிரி வாங்கினா, அடுத்த வருஷம் வேற ஸ்கூல் பார்த்துக்க வேண்டியதுதானாம்.''
பிள்ளைகளை அவர்கள் இயல்பில் வளர விடாமல், மதிப்பெண்களை மட்டுமே துரத்தும் பள்ளிகளை நினைத்து, கோபம் வந்தது ராமிற்கு. தனக்கு இஷ்டமே இல்லாவிட்டாலும், லதாவின் பிடிவாதத்திற்காக நகரத்திலேயே பெரிய பள்ளியில் ஹரிதாவை சேர்த்தது, மிகவும் தவறு என்று உணர்ந்தான்.
""சரி... வேற ஸ்கூலுக்கு மாத்திடுவோம்,'' ராம் சொல்லி முடிக்கும் முன், பிடித்து கொண்டாள் லதா.
""உங்களுக்கு என்ன... நான்தானே இந்த ஸ்கூலில் இடம் கிடைக்க, யார் யார் காலிலோ விழுந்தேன். என் அப்பா, லட்ச கணக்குல லஞ்சம் கொடுத்து, சீட் வாங்கி கொடுத்தார். உங்க பொண்ணை, ப்ரெண்ட்ஸ் கூட சுத்தறத விட்டுட்டு வீட்டில் உட்கார்ந்து படிக்க சொல்லுங்க. அதை விட்டுட்டு ஸ்கூல் மாத்தறேன், அப்படி இப்படின்னு உளறாதீங்க.''
வறட்டு கவுரவத்துக்காக, பெரிய பள்ளியில் குழந்தையை சேர்த்துவிட்டு, அவளை லதா படுத்துவது கொஞ்சம் அதிகப்படியாக தெரிந்தது. பத்து வயது குழந்தையை விளையாட விடுவதில்லை. கல்யாணம் காட்சிக்கு அழைத்து போவதில்லை. பள்ளி விட்டால், வீட்டிற்கு வந்து பாடம் மட்டும் படித்து கொண்டிருக்க வேண்டும். இப்படி ஒரு குழந்தை வளர்ந்தால், அதற்கு எப்படி ஒரு ஆரோக்கியமான மனநிலை உருவாகும்? இதையெல்லாம் நினைத்து ராமிற்கு மனம் குமுறியது.
பொறுமையாய் பேசி பார்த்தால், என்னவென்று தோன்றியது. ""லதா... நான் சொல்றத கொஞ்சம் கேளு. வாழ்க்கைக்கு படிப்பு முக்கியம்தான். ஆனால், அதே சமயம், ஒரு குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல மனநிலையிலும் வளர, அதுக்கு நாலு நண்பர்களாவது வேண்டும்.
""குழந்தைகள் சேர்ந்து விளையாடும் போது, நல்லது கெட்டதை தானே தெரிந்து கொள்வர். அவர்களுக்குள் சண்டை வந்தாலும், அவர்களே தீர்த்து கொள்வர். இது பின்னாளில் வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள மனோதைரியத்தை வளர்க்கும்.
""அதுமட்டுமல்ல, பின்னாளில் திருமணம் செய்து போகும் வீட்டில், நாத்தனார், மச்சினர் என்று இருந்தால், அவர்களுடன் இயல்பாய் நட்புடன் இருக்க முடியும். இது ஏதும் புரியாமல், மதிப்பெண் மட்டுமே எல்லாவற்றையும் தந்துவிடும் என்று நீ நினைப்பது தவறு,'' ராம் முடிக்கவில்லை லதா எரிச்சலுடன் கத்தினாள்...
""உங்களுக்கு என்ன... நீங்கள், 70 சதவீதம் வாங்கும் ரகம். ஆனால், நான், 90 சதவீதம் வாங்கியவள். படிப்பின் அருமை எனக்கு தெரியும். உங்களை போன்ற மக்குகளுக்கு எல்லாம் ஒன்றும் புரியாது,'' கடுமையான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, ஏதும் நடவாதது போல சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். இவளிடம் பேசி பயன் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.
அதன்பின் வந்த நாட்களில், ஹரிதா, லதாவிடம் அடிவாங்காமல் ராம் பார்த்துக் கொண்டாலும், குழந்தைகளுடன் விளையாட அனுப்ப, லதா ஒத்து கொள்ளவில்லை. எப்போதும், புத்தகமும், கையுமாய் இருக்கும் ஹரிதாவை பார்க்கும் போது, பாவமாய் இருந்தது. குழந்தை முகம் ஒளி இழந்து காணப்பட்டது.
அந்த சம்பவத்திற்கு பின், தன்னிடம் இருந்து ராம் ஒதுங்கியே இருப்பது போல லதாவிற்கு தோன்றியது. வீட்டிற்கு வந்தால் கொஞ்ச நேரம் ஹரிதாவிடம் நேரம் செலவழித்து விட்டு, லேப்- டாப்பும் கையுமாய் உட்கார்ந்து விடுவான். அதுமட்டும் இல்லாது, அவ்வப்போது மொபை லுடன் தனியிடம் தேடி அவன் போவது, லதாவிற்கு உறுத்தியது.
பொறுக்க முடியாமல், ஒரு நாள், ""அப்படி என்ன எப்போதும் போன், லேப்-டாப்பே கதின்னு கிடக்கறீங்க?'' என்று இவள் கேட்க, ""ஆபீஸ் வேலை,'' என்று பதில் வந்தது. கணவன் மேல் சந்தேகம் தோன்ற, அவன் அறியாமல் அவனை வேவு பார்க்க துவங்கினாள்.
வீட்டிற்கு வந்தது முதல், அவன் செய்யும் செயல் எல்லாம், லதாவிற்கு தெரியக் கூடாது என்பதில், அவன் கவனமாய் இருப்பது புரிந்தது.
ஒரு நாள், அவன் மறந்து வைத்துவிட்டு போன மொபைலை எடுத்தவள், கடைசியாக ராம் பேசிய எண்ணிற்கு அழைத்துவிட்டு, போனை காதிற்கு கொடுத்தாள். எதிர்முனையில், ""சொல்லுங்க ராம்...'' என்று பெண் குரல் ஒலிக்க, ""இது ராம் இல்லை. அவர் மனைவி லதா நீங்க?'' இவள் இழுக்கவும், பதில் சொல்லாமல் எதிர்முனை துண்டிக்கப்பட்டது. இவளும் விடாமல் மற்ற எண்களை அழைக்க, எல்லாவற்றிலும் பெண் குரலே ஒலித்தது. இவள் குரல் கேட்கவும், தொடர்பை துண்டித்தனர். சுத்தமாய் உடைந்து போனாள் லதா.
அப்பாவிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று தோன்ற, அப்பாவை அழைத்தாள். அப்பாவும் ஆண்தானே? அவர் என்ன சொல்வார்?
"லதாம்மா... மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். அப்படி எல்லாம் வழி தவறி போக மாட்டார். வீணா சந்தேகப்படாதே...' அம்மா உயிருடன் இருந்தால், ஒருவேளை, தனக்கு ஆறுதலாய் பேசி இருப்பாள் என்று தோன்ற, முகமே பார்த்தறியாத அம்மாவிற்காக அன்று அழுது தீர்த்தாள்.
திடுமென மறுநாள், தனக்கு பிறந்த நாள் என்று நினைவுக்கு வர, கண்டிப்பாக ராம் வழக்கம் போல, "உனக்கு பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும்?' என்று கேட்பார்.
கேட்டால், "உங்கள் அன்பு மட்டும் போதும்...' என்று பதில் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். மனம் ஆறுதல் அடைந்தது போல தோன்றியது.
இரவு பல சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளுக்கு, நடுநிசி தாண்டியே உறக்கம் வந்தது.
காலையில் மணி எட்டாகி விட்டதை உணர்ந்து, அரக்க பறக்க எழுந்தவள், வீடே அமைதியாய் இருப்பதை உணர்ந்தாள். ராம், ஹரிதாவை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் ஆபீஸ் கிளம்பி விட்டான் என்று புரிந்தது. ராம், ஏன் தன்னை எழுப்பவில்லை என்று உறுத்த, பிறந்த நாளுக்கு வாழ்த்து கூட அவன் சொல்லாமல் சென்றது மனதை வருத்தியது.
இதே நினைவுடன் அமர்ந்திருந்தவளை, மொபைல் அழைத்தது. ராம்தான் அழைக்கிறான் என்று எண்ணினாள். ஆனால், வந்ததோ புதிய எண். சுவாரசியமின்றி காதுக்கு கொடுத்தாள்.
""லதாதானே?'' என்று எதிர்முனையில் கேட்க, ""ஆமாம்,'' என்றாள்.
""லதா... எப்படிம்மா இருக்க? நான் சுந்தரி மிஸ்ம்மா...'' ஒரு நிமிடம் தான் கேட்டதை உள்வாங்கியவள், சந்தோஷத்தில் முகம் மலர்ந்தாள். சுந்தரி அவளுடைய பள்ளி நாட்களில் அவளுக்கு மிகவும் பிடித்த டீச்சர்.
அவரும் அவளை மாணவியாய் பார்க்காமல், பெற்ற மகள் போலவே பாவித்தார்.
எந்த ஒரு விஷயத்தையும் முதலில் அவளிடம்தான் சொல்வாள். ஆனால்,
பள்ளிப்படிப்பு இவள் முடித்த சமயம், அவரும் வேறு மாநிலத்திற்கு, அவர் கணவர் வேலை பொருட்டு குடி பெயர, ஒரு சில தொலைபேசி அழைப்புகளுக்கு பின், அவருடன் இருந்த தொடர்பு விட்டு போய்விட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின், அவரது குரலை கேட்டவளுக்கு, அன்று இருந்த மனநிலைக்கு அழுகை வந்தது. பதறியவர், அவளை சமாதானம் செய்து, பழைய கதைகள் பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். திடீரென ஒன்று தோன்ற, அவரிடம், ""மிஸ் உங்களுக்கு எப்படி என்னுடைய நம்பர் கிடைத்தது?'' என கேட்க, சற்றே சிரித்தவர், ""உன் அப்பாகிட்டே வாங்கினேன்,'' என்றவர், ""உன்கிட்டே நிறைய பேசணும். எங்க இருக்கீங்க? இன்னும் பெங்களூருதானா?''
""இல்லை. சென்னை ஆழ்வார்திருநகரில் இருக்கேன்,'' என சொன்ன போது, லதாவிற்கு மனம் குதூகலித்தது.
""நான் வளசரவாக்கத்துல இருக்கேன். எவ்ளோ பக்கத்துல இருக்கோம். கண்டிப்பா ஒரு நாள் உங்களை பார்க்க வர்றேன். கூடிய விரைவில் சந்திப்போம். அப்புறம் நான் எதுக்கு போன் பண்ணினேன் தெரியுமா? உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல... வாழ்த்துகள் லதா.''
""தேங்க்ஸ் மிஸ். இவ்ளோ வருஷம் கழிச்சும் நினைவு வச்சு இருக்கீங்களே,'' மகிழ்ச்சியுடன் சொன்னவள், ""கண்டிப்பா உங்க வீட்டுக்கு ஒரு நாள் வர்றேன்,'' என்று சொல்லி, தொடர்பை துண்டித்தாள்.
மனம் புத்துணர்ச்சியுடன் இருந்தது. வாழ்த்தாமல் போன ராம், ஹரிதா மேல் இருந்த கோபம், போன இடம் தெரியவில்லை.
எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, அருகில் இருந்த வினாயகர் கோவில் போய்விட்டு வந்தாள்.
மதியத்திற்கு தனக்கு மட்டும் சமைக்க பிடிக்கவில்லை. கார்ன் பிளக்சில் பாலூற்றி சாப்பிட்டாள், தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த ஒரு அறுவை படத்தை ரசித்து பார்த்தாள். தன் மனநிலையின் மாற்றம் அவளுக்கே வித்தியாசமாய் இருந்தது.
மாலையில் அலுத்து களைத்து வீடு திரும்பிய ராம், ஹரிதாவிற்கு தானே செய்த முந்திரி அல்வாவும், பாவ் பாஜியும் கொடுத்தாள்.
""இன்னைக்கு என்ன விசேஷம்... முந்திரி அல்வா செய்து இருக்க?'' கேட்டவனை ஒரு மாதிரி பார்த்தாள். பின்னர் சமாளித்து, ""என் பிறந்த நாள்,'' என்று அவள் சொல்லவும், துள்ளி எழுந்து விட்டான் ராம்.
""சாரிம்மா... சுத்தமா மறந்துட்டேன். வேலை கொஞ்சம் அதிகம் ஒரு வாரமா,'' என்றவன், கை கழுவ போனான். ஆனால், இவளோ, "ஹும்ம்... உங்க வேலை பளுதான் எனக்கு தெரியுமே...' என்று முனகி கொண்டாள்.
அவளை அருகில் இழுத்தவன் கட்டி அணைத்து, ""வாழ்த்துகள் செல்லம்....'' என்று சொல்ல, சற்றே வெட்கப்பட்டவள், ""உள்ள ஹரிதா இருக்கா, கொஞ்சம் ஒழுங்கா இருங்க...'' என்றாள்.
""ஓஹ்ஹோ... அப்படியா? குட்டிம்மா ஓடிவா... அம்மாவுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம்!''
""ஹாப்பி பர்த் டே அம்மா...'' கைபிடித்து ஹரிதா சொல்ல, குழந்தையை முத்தமிட்டாள்.
""ஹரிதா... நாம அம்மா பிறந்தநாளை மறந்துட்டோம் இல்ல... அதுக்கு அம்மாவை சமாதானப்படுத்த இன்னைக்கு எங்க போகலாம்?''
இடுப்பில் கை வைத்து பெரிய மனுஷி பாவனையில், ""ஓட்டல் கிரீன் பார்க்,'' என்றது குழந்தை.
""அடி கழுதை... படிக்கறத விட்டுட்டு ஊர் சுத்த பாக்கிறாயா.... ஓட்டல் போயிட்டு வந்தா இரண்டு மணி நேரம் போய்டும்... அப்புறம் தூங்கிடலாம் அதானே உன் ஐடியா... ஒழுங்கா உக்கார்ந்து படி... நானே சமைக்கறேன்,'' கண்டிப்புடன் லதா பேச, குழந்தையின் முகத்தில் சற்று முன் இருந்த சந்தோஷம், சுத்தமாய் வடிந்து இருந்தது.
""நாளைக்கு ஞாயிறு, லீவு தானே... அப்போ ஹோம் வொர்க் பண்ணிப்பா. இன்னைக்கு ஒரு நாளாவது அவ, "ரிலாக்ஸ்' செய்யட்டுமே! உனக்கு பிறந்த நாளுக்கு வெளியில் போனது போல இருக்கும்,'' ராம் சொல்ல, அதுவும் சரிதான் என்று லதாவிற்கு தோன்றியது.
ஓட்டல் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன், ""லதா... அங்க போறது என் நண்பன் கிரி போல இருக்கு,'' என்றவன் வேகமாய் நடையை எட்டி போட, ""அப்பா நானும் வர்றேன்,'' என்று, அவன் பின்னாடியே ஓடினாள் ஹரிதா. போய் கொண்டிருந்த நபரை நிறுத்தி பேசிவிட்டு, அவருடனே நடந்து கண் மறைந்து விட்டான்.
பத்து நிமிடம் கழித்து மொபைலில் அழைத்தவன், ""நீ இடது பக்கமா நடந்து, இங்க இருக்கற பார்ட்டி ஹால் வா... கிரி தங்கைக்கு திருமண வரவேற்பு,'' என்றான்.
லதாவிற்கு ராம் செய்வது, கொஞ்சம் எரிச்சலை வரவழைத்தது. வந்த இடத்தில், நண்பனை கண்டு, அவனது அழையா விருந்தாளியாய், அவன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பது, அவளுக்கு சங்கடமாய் இருந்தது. யோசனையுடன் பார்ட்டி ஹால், கண்ணாடி கதவை திறந்தவள் மேல் பூ மழை பொழிய, கோரசாக, "ஹாப்பி பர்த்டே...' என்று குரல் ஒலிக்க, ஒன்றும் புரியாமல், சுற்றும், முற்றும் பார்த்தவளுக்கு, அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.
அங்கு குழுமி இருந்தவர்கள், அனைவரும் அவளது பள்ளி தோழிகள், சுந்தரி மிஸ் மற்றும் அவள் சிறு வயதில் நெருங்கி பழகிய பக்கத்து வீட்டு மற்றும் எதிர் வீட்டு தோழிகள். சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க, ராம் எந்த அளவிற்கு முயற்சி எடுத்து இருப்பான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் குசலம் விசாரித்து, பேசி சிரித்து என நேரம் கரைந்தது. இரவு ஒன்பது மணி போல கேக் வெட்டி, டின்னர் முடித்து, மீண்டும் அரட்டை தொடங்கியது. அனைவரும் விடைபெற்ற போது, இரவு மணி பனிரெண்டை தொட்டுவிட்டது.
வீட்டிற்குள் வந்தவள், முகம் ஜொலிக்க, ""நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்... என் நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததில் மனம் நிறைஞ்சு இருக்கு. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்,'' என்று சொல்லி, அவன் கரம் பற்றி, தன் நன்றியை வெளிப்படுத்தியவள், ஏதோ தோன்ற, ""எப்படி உங்களுக்கு இந்த ஐடியா வந்துச்சு?'' என்று கேட்டாள்.
""இது நம்ம பொண்ணு ஐடியா...'' என்றவன் ஹரிதாவை பார்த்து, கண் அடித்து சிரித்தான். மகளை பாசமுடன் அணைத்து கொண்டாள் லதா. ""தாங்க்ஸ் செல்லம்...'' என்று உச்சி முகர்ந்தாள்.
""எல்லாரையும் எப்படி ஒண்ணு சேர்த்தீங்க... என்கிட்டே கூட அவங்க எல்லார் நம்பரும் இல்லை.''
""பாடத்தில், 90 மார்க் வாங்கினா பத்தாது... கொஞ்சம் மூளை வேணும். அது இந்த, 70 சதவீதத்துகிட்ட இருக்கு,''
அவன் கிண்டல் உணர்ந்து, சிரித்தாள்.
""பேஸ் புக் மாதிரி சமூக வலைதளங்கள் இருக்கும்போது, எதுக்கும் கவலைப்பட வேண்டியதே இல்லை... ஒருத்தரை பிடித்தேன், அப்படியே அவங்க மூலம் எல்லாரையும் பிடிச்சிட்டேன். உனக்குத்தான் இதில் எதிலும் ஆர்வம் இல்லையே... உன் பெண்ணை எப்படி, 99 சதவீதம் வாங்க வைக்கலாம்ன்னு தானே உனக்கு பொழுதுக்கும் சிந்தனை!''
""சரி, சரி... என்னை குட்டியது போதும்.''
இத்தனை ஆண்டுகளில், தன் மகள் படிப்பு, மதிப்பெண் இவற்றை தாண்டி, தான் இதுவரை வேறு எதுவும் சிந்திக்கவே இல்லை என்பதை உணர்ந்தவள், சற்று வெட்கினாள்.
""உனக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி தர போறதை பத்தி, உன் தோழிகளிடம் பேசி, இடம் முடிவு செய்து, உன் சுந்தரி மிஸ்சை உன்கிட்ட பேச சொல்லி, அப்பப்பா... எல்லாமே இயல்பாய் நடக்கற மாதிரி, நானும் குட்டிமாவும் நடித்து, எத்தனை வேலை செய்து இருக்கோம் தெரியுமா?''
""அப்போ என் பிறந்த நாளை மறந்தது கூட நடிப்பா?''
""அப்புறம் என்ன... நீ சி.ஐ.டி., மாதிரி என் போனை ஆராய்ந்து, எல்லாருக்கும் கால் பண்ணுவே, நான் என் கோபத்தை எப்படி காட்டறது? நீ கேட்டது எல்லாமே உன் பிரெண்ட்ஸ் குரல்தான்!''
தன் சின்னத்தனமான செயலை எண்ணி வருந்தினாள்.
""சாரிங்க...''
""இட்ஸ் ஓ.கே., நான் ராமன். என்னை நீ சந்தேகப்பட கூடாது,'' என அவன் கூறவும், மவுனமாய் தலையாட்டி சிரித்தாள்.
திடீரென முகத்தில் கடுமையை வரவழைத்து கொண்டவன், மகளை பார்த்து, ""சரி சரி ஹரிதா நீ போய் படு... நாளைக்கு நீ படிக்கணும்,'' கட்டளை போல சொன்னான் ராம்.
அவனை முறைத்த லதா, ""போதும் ரொம்ப நடிக்காதீங்க... எனக்கு நட்பும், அது தர்ற சந்தோஷமும் என்னான்னு புரிய வச்சுட்டீங்க ரெண்டு பேரும்... இன்னைக்கு நாங்க எல்லாம் பேசிட்டு இருந்தப்பதான், ஒரு விஷயத்தை உணர்ந்தேன்...
""நான் சிறுவதில் விளையாடாமலா இருந்து விட்டேன்? அதற்காக பொறுப்புணர்ந்து படிக்காமல் விட்டுட்டேனா? இல்லை, என் தோழிகள்தான் படிக்காமல் இருந்து விட்டார்களா? என் தோழிகளில் எவ்ளோ பேர், எவ்ளோ பெரிய பதவிகளில் இருக்காங்க!
""அதுமட்டுமில்ல, எங்களுக்கு வகுப்பு எடுத்த எல்லா ஆசிரியர்களுமே, எங்ககிட்ட அன்போட இருந்தாங்க... நாங்க தப்பு செய்தாலோ, இல்லை குறைந்த மார்க் வாங்கினாலோ, எங்களை அன்பு காட்டி நல்வழிபடுத்துவாங்க...
""சுந்தரி மிஸ் வீட்டிற்கு, அவங்க செய்யற தோசையை சாப்பிடவே நாங்க எல்லாம் அடிக்கடி போவோம். அவங்களும் நெய் தோசையோட எங்களுக்கு பாடத்தையும் ஊட்டுவாங்க. அதே மாதிரி நட்புடன் பழகக் கூடிய ஆசிரியர், ஹரிதாவுக்கு இல்லை என்பது நம் அதிஷ்டமின்மை...
""நீங்க சொன்ன மாதிரி அவளை வேற பள்ளிக்கு மாத்திடலாம். அங்கே, அவளுக்கு சுந்தரி மிஸ் போல, ஆசிரியைக் கிடைக்கலாம்! மதிப்பெண்ணை மட்டுமே பெரிதாய் நினைக்கும், இந்த பள்ளி வேண்டவே வேண்டாம். என் குழந்தை, எதை எல்லாம் இத்தனை நாள் இழந்து இருக்கான்னு நல்லாவே புரியுது...
""பட்டாம்பூச்சி மாதிரி சிறகடிச்சு சந்தோஷமா இருக்க வேண்டிய வயசில், அவளை நான் தேவை இல்லாம அதிகமா படுத்திவிட்டேன்... அப்புறம் இதுக்கும் மேலயும் நான் குழந்தையை நண்பர்களுடன் சேர்ந்து விளையாட அனுப்பலைனா, நான் பெரிய ராட்சசியா தான் இருப்பேன்.''
""இப்ப மட்டும்...'' ஹரிதா சின்ன குரலில் சொல்ல, அவளை செல்லமாய் அடிக்க துரத்தினாள் லதா. அவள் கைகளில் அகப்படாமல் ராமிடம் தஞ்சம் புகுந்தாள் ஹரிதா.
***

நித்யா பாலாஜி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahim Khan - Riyadh,சவுதி அரேபியா
19-ஜன-201315:45:55 IST Report Abuse
Abdul Rahim Khan கதாசிரியருக்கு, குழந்தைகளை பாலு தூக்கும் இயந்திரமாக மாற்றி அதன் மூலம் மன்ப்பளுவையும் சுமந்து சுதந்திரமான வாழ்கை நடவடிக்கைகளை பெறாது தவிக்கும் இந்த பிஞ்சு மனங்களில் உள்ள வேதனைகளை சொல்லிய விதம் மிகவும் நன்று. பள்ளிகள் மாறாவிட்டாலும் பெற்றோர்கள் மாறினால், பள்ளிகள் தானாக மாறிவிடும். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Mahesh Kumar - chennai,இந்தியா
17-ஜன-201314:26:47 IST Report Abuse
Mahesh Kumar அருமையான கதை , பாராட்டுக்கள் .
Rate this:
Share this comment
Cancel
nagaraj - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201318:58:37 IST Report Abuse
nagaraj மிக அருமையான மற்றும் தற்போதைய எந்திர வாழ்க்கைக்கு தேவையானது . நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X