அனுராதா ரமணன்! (கட்டுரை) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அனுராதா ரமணன்! (கட்டுரை)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 மே
2010
00:00

- எஸ்.ரஜத்
இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் - பாலா) இருவரில், சுரேஷின் மனைவியும், அனுராதா ரமணனின் தங்கையுமான ஜெயந்தி சுரேஷ், 33 ஆண்டுகள், அனுராதா ரமணனுடன், அவர் நிழல் போல வாழ்ந்தவர். அவருக்கு செகரட்டரியாக, உற்ற தோழியாக, உடல் நலம் பேணுபவராக, நெருக்கமான துணையாக, அவர் எழுத்துக்களுக்கு முதல் வாசகியாக, வாழ்ந்திருக்கும் ஜெயந்தி சுரேஷ், சமீபத்தில் காலமான அனுராதா ரமணன் பற்றி நினைவு கூர்கிறார்...
சொந்தத்தில், அனு எனக்கு அக்கா என்றாலும், அவரது இரு மகள்கள் சுதா, சுபா இருவரைப் போலவே, எனக்கும் அவர் பாசமிக்க அனும்மா தான். அவர், எழுத்துலகிற்கு வந்த ஆண்டு 1977. எழுதிய சிறுகதைகள், ஆயிரத்திற்கும் மேலே. எழுதிய நாவல்கள், தொடர் கதைகள் 850க்கும் மேல். திரைப்படமான நாவல்கள் பல. தொலைக்காட்சி தொடர்கள் பலப்பல. அவரது 18ம் வயதில், அவருக்கு திருமணம் நடந்தது; அவருடைய 28 வயதில், அவர் கணவர் ரமணன் இறந்தார்.
மொத்த திருமண வாழ்க்கை, பத்தே ஆண்டுகள் தான்.
ஓவியம் வரைவதில் வல்லவர். சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில், முறையாக ஓவியம் பயின்றார். பரீட்சை சமயத்தில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்படவே, இடது கையினாலும் வரையப் பயின்று, பரீட்சையில் வெற்றி பெற்றார்.
இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு மூன்று இதழ்களிலும், "லேஅவுட்' ஓவியராக அவர் பணியாற்றிய சமயம். தினமணி கதிரில், உதவி ஆசிரியர் சி.ஆர்.கண்ணனை நேரில் சந்தித்து, ஓவியங்கள் வரைய வாய்ப்பு கோரினார். அப்போது, அவர் மறந்துவிட்டுச் சென்ற பென்சில் ஓவியங்கள், அவற்றில் இருந்த குறிப்புகளை ரசித்த கண்ணன், "நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகள் நன்றாக, வித்தியாசமாக இருக்கின்றன... எழுதுங்கள்!' என்று உற்சாகப்படுத்தினார். அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் உருவானார்.
சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என்ற பரிமாணங்களைத் தவிர, அனுராதா ரமணன் செய்த மற்றொரு முக்கிய சாதனை, பல்லா யிரக்கணக்கான வாசகர்களின் சொந்த வாழ்க்கை யில் ஏற்படும் பிரச்னைகளை, கனிவாக புரிந்துகொண்டு, அவற்றுக்கு யதார்த்தமான தீர்வுகள் கூறியது தான்.
தினமலர் வாரமலர் இதழில், 15 ஆண்டு களுக்கு மேலாக, ஒவ்வொரு வாரமும், "அன்புடன் அந்தரங்கம்' பகுதியில், இவர் எழுதிய பயனுள்ள ஆலோசனைகனை, ஏராளமான வாசகர்கள் படித்து, பயன் பெற்றனர். ஒரு வார இதழில், தொடர்ந்து, ஒரு எழுத்தாளர் இத்தனை வருடங்கள் எழுதியிருப்பதும் மாபெரும் சாதனை.
தினமலர் வாரமலர் மூலம், ஆலோசனை பெற்ற பலர், அவரது விலாசம் அறிந்து, வீட்டுக்கும் சென்று தொடர்பு கொண்டனர். அவர்களோடு பேசி, பிரச்னைகளை அலசி, தீர்வு சொல்லும் நேரடி கவுன்சிலிங், கடந்த 10 ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்தது.
மே 2000ல், இவருக்கு, "பைபாஸ் சர்ஜரி' - இதய மாற்றுவழி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 35 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். "நான் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம். நான் வாழ்கிற ஒவ்வொரு நாளுமே, எனக்கு போனஸ் மாதிரி தான்!' என்றார். அதை அடுத்து எடுத்த முடிவு தான், நேரம் கிடைக்கும் போதெல் லாம் நேரடி கவுன்சிலிங்.
டெலிபோனில், நேரில், வாரமலர் இதழ் மூலம், அக்கறையாக பிரச்னை களுக்கு தீர்வு சொல்வார். அவரை ஒரு தாயாக, சகோதரியாக, நல்ல தோழியாக மற்றவர் கள் கண்டனர். தனக்கு கிடைக் கிற நேரத்தை கூட, மத்தவங்க வாழ்க்கை சிறப்பாக, சரியாக வேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளிப்பார்.
நேரடி கவுன்சிலிங் போது, எப்போதும் கூடவே இருந்தவள் என்ற முறையில், அனு கையாளும் பலவிதமான பிரச்னைகளைக் கண்டு, வியந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாதது, புரிதல் இல்லாதது, பல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்ட ஒரு இளம் பெண்ணை, முதலில் சாப்பிட வைத்து, அன்பாக பேசி, அவரது பிரச்னைக்கு காரணம் கண்டு, சரி செய்து, மீண்டும் நம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறார்.
மறக்க முடியாத அனுபவம் ஒன்று:
தன் காதலனை நம்பி, கர்ப்பமாகிவிட்ட இளம் பெண்; துபாயில் பணி புரியும் இளைஞர். கர்ப்பத்தை இனியும் மறைக்க முடியாத நிலை. உடனே சென்னைக்கு வர முடியாத சூழ்நிலையில் காதலன். தன் சொந்த செலவில், துபாய்க்கு அன்று மட்டும் ஐந்து முறை பேசி, காதலனை கன்வின்ஸ் பண்ணி, இளம் பெண்ணை, அவர் உடனே ஏற்றுக் கொள்ளச் செய்தார். இரு குடும்பங் களும், அவர்கள் காதலை ஏற்று, இப்போது கணவன், மனைவி, குழந்தை மூவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
நம்மில் பலருக்கு, உடல்நிலை பிரச்னை, ஆபரேஷன், ஐ.சி.யு., வாசம் என்றாலே பயம் தான் வருகிறது. ஆபரேஷன், சிகிச்சை என்று பல தடவை மருத்துவமனை வாசம், அதிலும் ஐ.சி.யு., என்பதை சிறிதும் கவலையின்றி, நகைச் சுவையோடு பார்க்கவும், ஐ.சி.யு.,க்கு செல்வதை ஒரு பிக்னிக் போல என்று வர்ணிக்கவும் அனுவால் மட்டும் தான் முடியும். மருத்துவமனையில் இருந்தாலும், "பளிச்'சென்று, சிரித்த முகத்தோடு, நன்றாக உடையணிந்து இருப்பார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் கூட, "எல்லா பேஷன்ட்களும் உங்களை மாதிரி குதூகலமாக, சிரித்துக் கொண்டு இருந்தால், எங்களுக்கு ரொம்ப தெம்பாக இருக்கும்...' என்பார்.
சுயசரிதம் என்றோ, வாழ்க்கை வரலாறு என்றோ, பிரத்யேகமாக அவர் புத்தகம் எழுதவில்லை. ஆனாலும், தன் வாழ்க்கை அனுபவங்களை, தன் உணர்வுகளை, எண்ணங்களை, நான்கு மாறுபட்ட புத்தகங்களாக எழுதியிருக்கிறார். "மீண்டும் மீண்டும் உயிர்த் தெழலாம்!' என்ற தலைப்பில், மங்கையர் மலரில் தொடராக எழுதினார்.
எப்போதுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கணும் என்பது அனுவின் நித்ய மந்திரம். வீட்டிலோ, விழாவிலோ, மருத்துவமனையிலோ... எந்த இடமாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு மை, உதட்டுக்கு லிப்ஸ்டிக், திலகம் பொட்டு, கீழே வெள்ளை சாந்தில் பிறை நிலா, கீழே அரக்கு நிற சாந்து பொட்டு, பளிச்சென்று பட்டுப்புடவை. இவை அவரது டிரேட் மார்க் தோற்றம்.
"என் இறுதி யாத்திரையின் போது, எதுவும் கலைந்தோ, சரியாக இல்லாமலோ இருக்கக் கூடாது...' என்பது, அவர் எனக்கு இட்ட கட்டளை. அவருக்கு மிகவும் பிடித்த அரக்குப் புடவை கட்டி, அவருக்கு பிடித்த டிரேட் மார்க் தோற்றத்துடன், அவர் இறுதி யாத்திரை நடைபெற்றது. திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கும் தன் மகள்கள் சுதா, சுபா இருவரிடம், அனும்மா சொன்ன கடைசி வார்த்தைகள் - "பீ பாசிடிவ்!' இறப்பற்கு முந்தைய நாள், என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள், "எப்போதும் சிரிக்கக்கிட்டே இரு!' - பிறகு நினைவு தவறியது.
அனு, எங்களை விட்டுப் போனது, மே 16ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. அன்று அட்சய திரிதியை. தான் இறந்த பிறகு, தன் உடலை மருத்துவ படிப்பிற்காக, தானம் செய்ய விரும்பினார். 33 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் உடலை தானம் செய்ய இயலவில்லை; ஆனால், கண்கள் மட்டும் நன்றாக இருந்தன. சங்கர நேத்ராலயாவிற்கு போன் செய்து வரச் சொன்னேன். உடனே வந்து, அவரது கண்களை எடுத்துச் சென்றனர். இனி யாரோ இருவர், அனுவின் கண்களால் பார்வை பெறுவர். அட்சய திரிதியை அன்று, தானம் கொடுக்க வேண்டும் என்பர். அதற்கேற்ப, அனுவின் கண்கள், அன்று தானம் செய்யப்பட்டன.
***


Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X