நாட்டியமணி பத்ம ஸ்ரீசோபனா, ஒரு தலைசிறந்த திரைப்பட நடிகை மட்டுமின்றி, சிறந்த நடனமணியும் ஆவார். அவரால், நிறைய மாணவமணிகள் நாட்டியத்தில் உருவாகி இருப்பதோடு, அவருடைய முதல் மாணவியாக சுமாமணி குருவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். "பரதார்ப்பணா' நடன குரு சுமாமணியின் சிறந்த சிஷ்யைகளுள், 14 வயதேயான மனஸ்வினி முக்கியமானவர். ஆழ்வார்பேட்டை மகாராட்டிரா ஹாலில் இவரின் நிகழ்ச்சி நடந்தது.
துறுதுறுவென்று பாதவேலைகளும், அக்கறையும், ஆடுவதற்கு ஏற்ற உடல்வாகு, உயரம், அழகிய முகம் எல்லாமே குட்டி சோபனா போன்று, பார்த்த மாத்திரத்தில் மனம் கவர்ந்தார் என்றால் மிகையில்லை. சற்றும் சோர்வோ, தொய்வோ இல்லாமல் அக்கறையாக ஆடியது இவருக்கு பிளஸ். கம்பீர நாட்டை, ஆதிதாளம் புஷ்பாஞ்சலியில் ஒரு மலராக மலர்ந்து ஆடிய அபிநயம், விறுவிறு பாத வேலைகள் எல்லாமே அழகாக இருந்தன. தொடர்ந்து, விஷ்ணு கவுத்துவத்தில் (நாட்டை - ஆதி) திருமாலின் அவதாரங்கள், முத்திரைகள், பளிச்சென்று பார்த்தவர்களைக் கவர்ந்தன. பிரதான லால்குடியின் சண்முகப்ரியா வர்ணத்தை கடும் உழைப்புடன் ஆடினார் மனஸ்வினி. திருமாலின் கருணையை விளக்கிய குசேலர் - கண்ணன் நட்பு - கருணை வாமனாவதாரத்தில் மூன்றடி மண்கேட்டு உலகை அளந்தது, திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்யும் காட்சிகளை தத்ரூபமாக அபிநயம் செய்த அழகும், கடவுகளை பளிச்சென்று தீர்மானங்களில், மனநிறைவுடன் ஆடிய விதமும் மனம் கவர்ந்தன.
குரு சுமாமணியும் - லய வித்வான் வெங்கட் மற்றும் சித்ராம்பதி இணைந்து வடிவமைத்த பஞ்ச ராக, தாள மாலிகா தில்லானா, இந்த நிகழ்ச்சியில் சிகரம் போன்று அமைந்தது. இதன் நடை, லய, கதி பேதங்களை உயர்வான அபிநயத்துடன் ஆடியது ரசிக்க முடிந்தது. கடும் உழைப்புடன் மனஸ்வினி ஆடியதைப் பாராட்ட வைத்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கலா ரசிகர் க்ளீவ் லாண்ட் சுந்தரமும், பிரபல நடன குரு கலைமாமணி இந்திரா ராஜனும் மனஸ்வினியின் நாட்டியத் திறமையைப் பாராட்டினர். நடனகுரு சுமாமணியின் நடன வடிவமைப்பும், நட்டுவாங்கமும், குறிப்பாக சித்ராம்பரியின் பாட்டு, வெங்கட சுப்ரமண்யத்தின் லயம், ஜெயஸ்ரீ ஸ்ரீதருடைய சிறப்பன இணைப்புரை எல்லாமே முதல் தரமாக இருந்தன. - மாளவிகா