எஸ்.ஓ.கே., என்று அன்பாக மலேசியர்களால் அழைக்கப்பட்டவருக்கு கிடைத்த பட்டங்களும், விருதுகளும் அதிகம். தஞ்சை மண்ணில் பிறந்து, மலேசியத் தமிழராக, இந்தியராக செல்வாக்குடன் வாழ்ந்தவர் டான் ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா. அவர் நினைவாக, மலேசியாவில் தபால் தலை வெளியிடப்பட்டிருக்கிறது.
மலேசிய இந்தியர்களின் மூத்த அரசியல், சமூகத் தலைவர்களில் ஒருவரான உபைதுல்லா தஞ்சை மாவட்டம், ராஜகிரியில், ஜூன் 18, 1918ல் பிறந்தார். 21 வயதில், பி.ஏ., பட்டம் பெற்று, மலாயாவுக்கு சென்றார்.
அரசியல், சமூகப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்ட உபைதுல்லா, நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிப் பழகியவர். நேதாஜி, 1940 தொடக்கத்தில், மலாயாவில், ஆசாத் ஹிந்த் சர்க்கார் அமைத்த போதும், அதன் ராணுவப் படையைத் தொடங்கிய போதும், அவருடன் நெருக்கமாக இருந்து, மலாயா, இந்தியா சுதந்திரத்துக்குப் பாடுபட்டார் எஸ்.ஓ.கே., உபைதுல்லா, 1948ல் மலாயா பெடரல் சட்டசபை உறுப்பினர் ஆனார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியில், பல முக்கிய பதவிகளை வகித்தார். அந்தக் கட்சியின் பல மாநாடுகளில், அவர் அவைத் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
கல்வித் திறனும், அரசியல் செல்வாக்கும் அதிகமாக இருந்ததால், பார்லிமென்ட், மேலவை, செனட் துணைத் தலைவராக, 1971 முதல் 1980வரை இருந்தார். இந்திய வம்சாவளி மலேசிய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக, பெர்கிம் எனும் அமைப்பை, உபைதுல்லா உருவாக்கினார். 1969 முதல் பத்து ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக இருந்தார். விமானம், கப்பல் சரக்கு ஏற்றுமதி நிறுவனத்தை, நீண்ட காலம் நடத்தி, செல்வந்தரானார்.
மலேசியாவின் முந்தைய பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், டுன் ரசாக், டுன் ஹுசேன் ஓன், டாக்டர் மஹாதீர் ஆகியோரின் அன்புக்குரியவர் இவர். மலேசிய இந்தியர் காங்கிரசின் அன்றைய தலைவர்களான, அமைச்சர்கள் டுன் சம்பந்தன், டான் ஸ்ரீ மாணிக்க வாசகம் ஆகியோருடன் கட்சி, சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட்டு, டான் ஸ்ரீ முதலான மலேசிய விருதுகளை எஸ்.ஓ.கே., குவித்தார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவராக, 31 ஆண்டுகள் பதவி வகித்து, அண்மையில் ஓய்வு பெற்ற டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அரசியல் ஆசானாக இவரை மதித்து வந்தார். டத்தோ, டான் ஸ்ரீ போன்ற மலேசிய விருதுகளைப் பெற்ற செனட்டர் உபைதுல்லாவுக்கு, மா அல் ஹிஜ்ரா என்ற கண்ணியத்துக்குரிய சிறப்பு விருது, 1980ல் வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்ற, முதல் மலேசிய இந்திய முஸ்லிம் பிரமுகர் இவர்தான். அந்த விருதுடன், 30 ஆயிரம் மலேசிய வெள்ளியும் வழங்கப்பட்டது. அந்தத் தொகை முழுவதையும், சமய நற்பணிகளுக்காக வழங்கி விட்டார் எஸ்.ஓ.கே., பொதுப் பணிகளுக்கு உதவுவதற்காக தம் பெயரில், உபைதி என்ற அறக்கட்டளையை நிறுவினார். அது, உதவிப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கோலாலம்பூரில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றி, அதைப் புதுப்பித்து விரிவுப்படுத்தினார் இவர்.
சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா உபைதுல்லா என்ற பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் கூடிய குடும்பப் பெயரின் சுருக்கமே, எஸ்.ஓ.கே., இவரிடம், "எஸ்'சும் இல்லை, "ஓ.கே.,'வும் இல்லை என்று, சிலேடையாகச் சிலர் கூறுவர். எடுத்த எடுப்பில் பதில் கூறாமல், சிந்தித்து முடிவு கூறும் அவருடைய பக்குவமே அதற்கு காரணம்.
"ஒவ்வொரு தடவையும், டான் ஸ்ரீ உபைதுல்லாவுடன், 10 நிமிடம் பேசி விட்டுத் திரும்பினாலும், கருத்துள்ள ஒரு புத்தகத்தை படித்துவிட்டுப் புறப்படுவதுபோல் இருக்கும்...' என்கிறார், மூத்த மலேசியப் பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ். மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத்தில், 47 ஆண்டு பொறுப்பு வகித்தார் உபைதுல்லா. பேங்க் பூமி புத்ரா எனும் வங்கியிலும், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திலும் இயக்குனராக இருந்தார்.
உலகம் சுற்றிய டான் ஸ்ரீ உபைதுல்லா மலேசியாவுக்கு வரும் தமிழகக் கலைஞர்களை வரவேற்று உபசரித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களில் ஒருவர்.
எஸ்.ஓ.கே., லட்டு பிரியர். லட்டைப் பார்த்து விட்டால், ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் இருக்க மாட்டார். இனிப்பை நிறைய சாப்பிடக் கூடாதுதான் என்றும் தலையை ஆட்டிக் கொள்வார். அவர் சாதித்தவை அதிகம் என்பதால், சகாப்த மனிதராகப் போற்றப்படுகிறார். 2009ல், 93 வயதில், மறைந்தார் இந்த தபால்தலை நாயகன். அவருடைய துணைவியாரும், இரு புதல்வர்களும், கோலாலம்பூரில் நடைபெற்ற தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். **