இரும்புக்கோட்டை அருப்புக்கோட்டை | செய்தி கட்டுரைகள் | News Stories | tamil weekly supplements
இரும்புக்கோட்டை அருப்புக்கோட்டை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2011
00:00

""நாட்டை அன்னியனிடம் அடமானம் வைக்க வேண்டாம். கான்சாகிப் நம்மை தேடி வந்தாலும் வருவான். அதற்குள் பெருநாழிக்கு சென்று காட்டில் பதுங்கிக்கொள்ள வேண்டும்,'' என எண்ணியவாறே தூரத்தில் சிதலமடைந்த அந்த கோட்டையை பார்த்தார் எட்டயபுர பாளையக்காரரான ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர்.
அந்த கோட்டை மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கர் கட்டியது. ஆனால் அந்த கோட்டைக்குள் நுழையாமல், அதை பார்த்தவாறே பெருநாழி காட்டை நோக்கி நடந்தார். அவர் கோட்டையை கண்டு பெருமூச்சு விட்ட இடம் அருப்புக்கோட்டை.
ஆங்கிலேயரின் பிரதிநிதி கான்சாகிப், வரி கொடுக்காததால் எட்டப்ப நாயக்கரை நாடு இழக்கச்செய்து பெருநாழி காட்டிற்கு அனுப்பினான். இதன் அருகில்தான் அருப்புக்கோட்டை உள்ளது. இந்த ஊரில் வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595) ஒரு கோட்டையை கட்டினார். இதையொட்டி மல்லிகை பூந்தோட்டம் இருந்தது. இதன் செடிகள் கோட்டைச் சுவர்களை சுற்றி, அரும்பாக மலர்ந்ததால், ஆரம்பகாலத்தில் "அரும்புக்கோட்டை' என அழைக்கப்பட்டு, பின் மருவி அருப்புக்கோட்டையானது.
இந்த ஊரைச் சுற்றி, கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக கல்திட்டைகள் காணப்படுகின்றன. முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன. கோட்டைக்குள் புகுந்த எதிரிகளை, வீரர்கள் கதிர் அறுப்பதுபோல், தலைகளை அறுத்து எறிந்ததால் "அறுப்புக்கோட்டை' எனவும் அழைக்கப்பட்டதாக கூறுவதுண்டு. ஆனால் இந்த ஊரின் பழமையான பெயர் "செங்காட்டிருக்கை இடத்துவழி' என்பதாகும். கி.பி.1664ன் கல்வெட்டில், இந்த ஊரின் பெயர் "அருப்புக்கோட்டை' என்றே பொறிக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்த ஊர் சிறந்த வணிக நகரமாக இருந்தது. செல்வ வணிகர்களின் பெயர்களில் தெருக்கள்
இருந்ததை கி.பி.13ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன. மேலும், கடல் வாணிபத்தில் செல்வந்தர்களான வணிகர்கள், தென்இலங்கை வலஞ்சியார் வணிககுழு என்ற பெயரில், விக்கிரபாண்டிய பெருந்தெருவில் வசித்துள்ளனர்.
பிற்கால பாண்டியர் ஆட்சியில், இங்கு மழை இல்லாமல் வறண்ட பூமியானது. அதைபோக்க, கி.பி.1193ல் திருவாளவாவுடையான் சோழகங்கன் என்பவரது மகன் அருளாள அழகப்பெருமான், இங்குள்ள சொக்கநாதசுவாமி கோயிலின் தென்புறத்தில் குளம் வெட்டித் தந்தார். இக்கோயில் முதலாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன்(1190-1218) ஆட்சியில் கட்டப்பட்டது. இக்கோயில் மாடச் சிற்பங்கள், இவ்வூர் வணிகர்களால் செய்விக்கப்பட்டவை. லிங்கோத்பவர் சிற்பத்தை இலுப்பையூர்க் கிழவன் என்ற வணிகர் செய்வித்ததாக கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள வாழவந்த அம்மன் கோயிலுக்கு ஜடாவர்மன் குலசேகர பாண்டிய மன்னன் ஆட்சியில், அன்னதானம் வழங்கும் பொருட்டு நெல் காணிக்கையாக அளித்துள்ளனர். இப்படி ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அருப்புக்கோட்டை, இரும்புக்கோட்டை போல் தலைநிமிர்ந்து நிற்கிறது.
- கே.ராஜா, வரலாற்று ஆய்வாளர்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X