சின்னச்சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2011
00:00

லவங்கப்பட்டையில் புதிய ரகங்கள் எஸ்எல்63, ஐஎன்189: இந்தியாவில் முதன் முதலாக இரண்டு லவங்கப்பட்டை ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோழிக்கோட்டிலுள்ள இந்திய வாசனைப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சின்னமோயம் வீரம் என்ற தாவரப் பெயர் கொண்ட லவங்கப் பட்டை லாரேசி என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. லவங்க மரத்திலிருந்து எடுக்கப்படும் காய்ந்த உள்பட்டைதான் லவங்கப் பட்டை. இதன் பிறப்பிடம் இலங்கையாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
கேரளத்திலுள்ள கண்ணூரை அடுத்துள்ள அஞ்சரகண்டி என்ற கிராமத்திலுள்ள ஏண்டாதாரா எஸ்டேட்டில் சுமார் 85 எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப் பட்டு வரும் தோட்டம்தான் ஆசியாவிலேயே பெரிதான லவங்கத் தோட்டமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் நீலகிரி, கீழ்பழநி மலைப்பகுதிகள், குற்றாலம், கன்னியாகுமரி மற்றும் கர்நாடகாவில் தென்கனரா ஜில்லாவிலும் லவங்கப்பட்டை சாகுபடி செய்யப்படுகிறது.
எஸ்எல்63 என்ற இலங்கை ரகமும் ஐஎன் 189 என்ற இந்திய ரகமும் இந்தியா முழுவதும் பயிரிட உகந்தவையாகும். நட்ட முதல் 3 ஆண்டுகளுக்கு இடைவெளிப்பயிராக பயறு வகைப்பயிர்களான தானிய வகைப் பயிர்கள் மற்றும் விதை வாசனைப்பயிர்கள் ஆகியவற்றை லவங்கத் தோட்டத்தில் பயிர்செய்து லாபம் அடையலாம். இந்த இரு வகைகளையும் மானாவாரியாகப் பயிரிடலாம். நட்ட ஒரு ஆண்டுக்கு மட்டும் நிழல் தந்து இவற்றைப் பேண வேண்டும்.
இந்த லவங்கப்பட்டை ரகங்களைப் பயிரிட்டு விளைச்சலை அதிகரித்து உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதுடன் தரமுள்ள பட்டை, பட்டை எண்ணெய், இலை எண்ணெய் மற்றும் பட்டை ஒலியோரெசின் ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.
(தகவல்: பி.கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை விஞ்ஞானி, இந்திய வாசனைப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம், கோழிக்கோடு-673 012).

பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்: இப்பூசணம் எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது. பூசணத்தின் வித்துக்கள் பூச்சி, புழுக்களின் மேல் பட்டவுடன் சாதகமான சூழ்நிலையில் அவை முளைத்து பூசண இழைகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பூசணம் நொதிப் பொருட்களை உற்பத்தி செய்து மேற்புற தோலினை சிதைத்து பூச்சியின் உடலுக்குள் ஊடுருவிவிடுகிறது. அங்கு நச்சுப்பொருளை உற்பத்தி செய்து பூச்சியின் வயிற்றில் உள்ள பாக்டீரியாவை எளிதில் அழித்து, பூசணம் உடல் முழுவதும் வளர்ந்து பரவி பூச்சியைச் செயலிழக்கச் செய்து கொன்றுவிடுகிறது.
இப்பூசணம் மக்காச்சோள பயிரில் உட்சென்று நீர் உறிஞ்சும் குழாய்களில் தங்கி தாவர உட்பூசணமாகச் செயல்பட்டு இப்பயிரினைத் தாக்கும் தண்டு துளைப்பான்களை சிறப்பான முறையில் கட்டுப் படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நன்மை செய்யும் இப்பூசணம் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தாவர நோயியல் துறையில் இப்பூசணம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ விலை ரூ.100. துகள் வடிவில் வழங்கப்படும் இப்பூசணத்தை மண்வழியாகவும், இலை வழியாகவும் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதைக்கும் முன் மண்ணில் இடவேண்டும்.
இலையை உண்ணும் புழுக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு லிட்ட ருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். (தகவல்: த.தினகரன், கோ.அர்ச்சுணன், வானொலி உழவர் சங்க செய்திக்கதிர், அக்டோபர் 2011)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X