Advertisement
மாவட்டம் » மதுரை சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
மதுரை

மதுரை வரலாறு

வரலாறு

Hotel image

சங்க காலம், தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் ஆகும். மதுரை தமிழ் சங்கங்களின் இருப்பிடம் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் மதுரை வந்ததாக வரலாறு உள்ளது. மேலும் ரோமானியர், கிரேக்கர்கள் பாண்டிய மன்னர்களுடன் வர்த்தகம் செய்துள்ளனர்.

கி.பி. 920ம் ஆண்டு முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாண்டிய நாடு சோழர்கள் வசம் இருந்தது. கி.பி.1223ம் ஆண்டு பாண்டியர்கள் மீண்டும் தங்கள் நாட்டை பெற்றனர். பாண்டியர்கள் காலத்தில் தமிழ் மொழி தழைத்தோங்கியது. அவர்கள் காலத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.

1311ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி, நகைகள் மற்றும் அரிய பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மதுரைக்கு படை திரட்டி வந்தார். இந்த சம்பவம் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மதுரையில் கொள்ளை அடிப்பதற்கு வழியாக அமைந்தது. 1323ம் ஆண்டில் மதுரை டில்லியை ஆண்ட துக்ளக் மன்னர்களின் ஒரு மாகாணமாக மாறியது. பின்னர் 1371ம் ஆண்டில் மதுரை விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயரின் மறைவிற்கு பின் நாயக்கர்கள் மதுரையை ஆண்டனர். நாயக்கர்களின் ஆட்சியில் திருமலை நாயக்கர் மன்னர் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் மதுரையின் கட்டமைப்பை மேம்படுத்தினார். மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம், புதுமண்டபம் மற்றும் திருமலை நாயக்கர் மகால் ஆகியவை அவரது புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பின்னர் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட போது, மதுரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. 1781ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதுரைக்கு தங்கள் பிரதிநிதியை அனுப்பினர். ஜார்ஜ் புரோக்டர் மதுரையின் முதல் கலெக்டர் ஆவார். மதுரையின் வரலாற்றில் ராணி மங்கம்மாவை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் சுதந்திரத்திற்காக போராடிய பெண்களில் இவரும் முக்கியமானவர் ஆவார்.மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் தவிர, தேவார ஸ்தலமான அப்புடையார் கோயில், திவ்ய தேச கோயில்களான கூடலழகர் கோயில், கள்ளழகர் கோயில், காளமேக பெருமாள் கோயில், அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகியவை பிரசித்தி பெற்ற ஸ்தலங்களாகும்.


கலாசாரம்

மதுரை கலாசார சிறப்பு வாய்ந்த நகரமாகும். நட்புணர்வு, உபசரிப்பு, பாரம்பரியத்தை மதித்தல், எளிய வாழ்க்கை முறை மற்றும் விருந்தோம்பல் இங்குள்ள மக்களின் சிறப்பாகும். பரவலாக ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் சேலையும் அணிகின்றனர். தற்போது சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகள் பெண்களின் முக்கிய ஆடையாக மாறியுள்ளது. மதுரையில் 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இவையே மக்களின் முக்கிய பொழுதுபோக்காகும். தவிர இங்குள்ள தீம் பார்க், காந்தி மியூசியம், ராஜாஜி பூங்கா ஆகியவையும் மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகும். மதுரை சிறந்த இசை பாரம்பரியத்தை கொண்டதாகும். மறைந்த, பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி மதுரையில் பிறந்தவராவார்.


உணவு

ஜில் ஜில் ஜிகர்தண்டா, பருத்தி பால், கரும்பு சாறு ஆகியவை மதுரையின் புகழ் பெற்ற பானங்கள் ஆகும். பழமையான உணவகமான மார்டன் ரெஸ்டாரென்ட் 1956ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. மற்றுமொரு புகழ் பெற்ற உணவகமாக முருகன் இட்லி கடை விளங்குகிறது. பழமையான உணவுகளான இட்லி, தோசை, பொங்கல் போன்ற அரிசி உணவுகளுடன், வடக்கிந்திய உணவுகள், சீன உணவு வகைகளும் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.


மல்லிகை

மதுரை மல்லிகை பூக்களுக்கு பெயர் போனதாகும். தமிழகத்தின் எந்த பகுதியில் கிடைக்கும் மல்லிகையை விட மதுரை மல்லிகைக்கு அதிக மணம் உள்ளதால் இதற்கு எப்போதும் வரவேற்பு அதிகமாகும். இங்கு கிடைக்கும் பூக்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


தொழில் வளர்ச்சி

மதுரையின் தொழில் வளர்ச்சி, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களை விட மிக பின்தங்யே உள்ளது. டிவிஎஸ், இண்டியா, ஹைடெக் அரே லிமிடட் போன்ற ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்ரீசக்ரா, டிவிஎஸ் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் நிறுவனங்கள், பிவிசி கன்வேயர் பெல்ட் தயாரிக்கும் பென்னர் நிறுவனம், டாபே டிராக்டர் தயாரிப்பு நிறுவனம், மதுரா கோட்ஸ், போன்ற முக்கிய நிறுவனங்கள் உள்ளன. இவை தவிர ஹனிவெல், சாம்ட்ரக் (பிபிஓ நிறுவனம்), செல்லா சாப்ட்வேர், வின்வேஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடட் போன்ற நிறுவனங்களும் உள்ளன.மத்திய மாநில அரசுகள் மதுரையின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க சிறு தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் மாவட்ட தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் 1979ம் ஆண்டு இத்திட்டம் துவங்கப்பட்டது. இந்த மையம் தொழில்படிப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் தொழில் துறை பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. மேலும் பெண்கள் தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.


தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி

மதுரையில் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் அருகிலும், புறநகர் பகுதியிலும் இரண்டு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இலந்தைகுளம் அருகில் 8.81 ஹெக்டேர் நிலமும், கிண்ணிமங்கலத்தில் 16 ஹெக்டேர் நிலமும் எல்காட் நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது. மதுரை மாநகராட்சி, 29.93 ஹெக்டேர் நிலத்தை டைடல் தொழில் நுட்ப பூங்காவிற்காக ஏற்பாடு செய்துள்ளது.


நிர்வாக அமைப்பு

சுதந்திரத்திற்கு பின்னர் மதுரை மாவட்டம், மதுரை நகரை தலைநகராக கொண்டு செயல்பட்டது. மேலும் ராமநாதபுர மாவட்டத்திற்கும் மதுரையே தலைமையகமாக விளங்கியது. 1984ம் ஆண்டு மதுரை மாவட்டம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. 1997ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டின் கிளை தற்போது மதுரையில் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.


பொருளாதாரம்

மதுரையின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. அடுத்தபடியாக நெசவுத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறையை சார்ந்துள்ளது. சுங்குடி சேலை, ஜரிகை கரை துணிகள், பிரிண்ட் காட்டன் ஆகியவற்றிற்கு மதுரை புகழ் பெற்றதாகும். தற்போது இறக்குமதி பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதால் விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் நசிவடைந்து வருகிறது. மதுரை மணக்கும் மல்லிக்கு பெயர் பெற்றதாகும். மல்லிகை, கொடைக்கானல் மலையடிவாரம், மற்றும் செம்மண் தரையில் பயிரிடப்படுகிறது. இந்த பூக்களுக்கு மும்பை, பெங்களூரு, கொச்சி, டெல்லி, திருவனந்தபுரம், கோல்கட்டா, ஐதராபாத் போன்ற நகரங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. மதுரை மல்லிகை சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நறுமண தைலம் தயாரிப்பதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.


மதுரையின் பிரச்னைகள்

மதுரையில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களை கவரும் வகையான அமைப்புகள் இல்லை. மதுரையில் தொழில் வளர்ச்சி இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலைக்காக சென்னை, பெங்களூர் போன்ற தொழில் வளர்ச்சி உள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை சாலை போக்குவரத்து வசதி மற்றும் உட்கட்டமைப்பு மிகுந்த நகரங்களில் நிறுவ விரும்பகின்றன. மதுரையில் தொழிற்சாலைகள் துவங்கும் அளவிற்கு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாததே இதற்கு காரணம். மதுரையில் இருந்த மதுரா கோட்ஸ் நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டு விட்டது.மதுரையில் பல தொழில்நுட்ப கல்லூரிகள் இருந்தும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு இல்லை. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே வேலை கிடைக்கிறது. நல்ல திறமையுள்ளவர்கள் முக்கிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால் மதுரையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி உள்ளது.


 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X