Advertisement
மாவட்டம் » திருநெல்வேலி சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் முதல் பக்கம்
திருநெல்வேலி நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திருநெல்வேலி சுற்றுலா
புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் (ஊசி கோபுரம்)
புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் 1826ம் ஆண்டு ரெவரென்ஸ் ரேனியஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1826ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 175 நாட்களில் 2 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது.

64 அடி நீளம், 30 அடி அகலத்தில் கட்டப்பட்ட ...
மேலும்...
திருநெல்வேலி
திருநெல்வேலி

திருநெல்வேலி வரலாறு

வரலாறு

Hotel image

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000 ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி சிறந்த சான்றாகும். இந்த தாழியில் சில எலும்பு கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்களும், உமி, அரிசி ஆகியவையும் இருந்தன. இவற்றை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு பழமையானது என உறுதியளித்தனர். இதன் மூலம் புதிய கற்காலத்தில் இருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே திருநெல்வேலியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் ஆராய்வதற்காக அரிச்சநல்லூர் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தக நகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லை சீமை என்று அழைத்தனர்.


பாண்டியர்கள் ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல் 1200 வரைசோழ பேரரசின் முக்கிய நகரமாக திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலும், நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 1781ம் ஆண்டு ஆற்காடு நவாப்கள் உள்ளூர் நிர்வாகத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். 1801ம் ஆண்டு திருநெல்வேலியை ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்றினர். அதன் பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர்களுக்கு திருநெல்வேலி என்பது உச்சரிக்க சிரமமாக இருந்ததால் ஆற்காடு நவாப்கள் 1801ம் ஆண்டு தின்னவேலி என பெயரிட்டனர். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் திருநெல்வேலி ராணுவ தலைமையகமாக இருந்தது. இதன் மூலம் பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் ஒடுக்கினர். இதன் பின்னர் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை இரண்டும், இரட்டை நகரங்களாக வளர துவங்கியது.


திருநெல்வேலி அல்வா நகரம் என்றும் அழைக்கப்பட்டது. திருநெல்வேலி அல்வாவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அடுத்து, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி கோயில் பிரசித்தி பெற்றதாகும். திருநெல்வேலி, திருநெல்வேலி டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என்று மூன்று நிர்வாக மையங்களாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மக்கள் தொகை, வருவாய் ஆகியவற்றை கொண்டு 1999ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி பிறநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் (தூத்துக்குடி) போன்றவர்கள் திருநெல்வேலியை சேர்ந்தவர்களாவர். 1990ம் ஆண்டிற்கு முன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் இருந்தது.


பெயர் காரணம் : முற்காலத்தில் வேதபட்டர் என்ற சிவபக்தர் ஒருவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவ பெருமான் அவருக்கு வறுமையை உண்டாக்கினார். ஒருநாள் அவர் பல வீடுகளில் இருந்து பிச்சை பெற்ற நெல்லை சூரியஒளியில் காய வைத்து விட்டு நதியில் நீராட சென்றார். நீராடி, கடவுளிடம் மழை தருமாறு வேண்டினார். பக்தரின் வேண்டுதலுக்கு உடனடியாக செவிசாய்த்த இறைவன் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ய செய்தார். அப்போது தான் பக்தருக்கு நெல்லை காயவைத்தது நினைவிற்கு வந்தது. நெல் நனைந்து விடுமே என வேகவேகமாக திரும்பியவருக்கு மிகவும் ஆச்சரியமடைந்தார். மழை நெல் காயவைத்திருக்கும் பகுதியை தவிர பிற இடங்களில் பெய்தது. நெல்லை வேலி போல் காத்து பிற இடத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலி என்ற பெயர் வந்தது.


திருநெல்வேலி, நெல்லை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியின் சாட்டிலைட் படத்தில் நகர் சுற்றி நெல்வயல்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாக கூறுவதுண்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியால் நகரம் செழிப்புடன் காணப்படுகிறது.


போக்குவரத்து பஸ் : திருநெல்வேலியில் பிறநகரங்களை இணைக்கும் சாலை வசதி உள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வெய்ந்தாங்குளத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் வெளியூர் பஸ்கள் கிடைக்கும். இந்த பஸ் நிலையம் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் பஸ் கிடைக்கிறது. உள்ளூர் பஸ் போக்குவரத்திற்கு பொளை பஸ்நிலையம், திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்கும்.


ரயில்வே : தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் திருநெல்வேலி ஜங்ஷனும் ஒன்றாகும். ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 3 அகல ரயில் பாதையாகவும், 3 குறுகிய ரயில் பாதையாகவும் உள்ளது. தமிழகத்தின் பிற நகரங்களுக்கும், கொல்கத்தா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து செல்ல ரயில் வசதி உள்ளது.


விமான நிலையம் : திருநெல்வேலியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், வாகை குளம் என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. மேலும் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களாகும். திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் உபயோகிக்கப்படாத ரன்வே உள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஏர்டெக்கான் நிறுவனம் மட்டும் சென்னை செல்வதற்கான விமான சேவையை தினமும் ஒரு முறை வழங்கி வருகிறது.


கல்வி: நெல்லையின் முக்கிய கல்வி மையமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் விளங்குகிறது. இந்த பல்கலைகழகம் நெல்லை ஜங்ஷனில் இருந்து 11கி.மீ தொலைவில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைகழகத்தின் கிளை இங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் நெல்லையில் அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவ, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை தமிழக அரசினால் நடத்தப்படுபவையாகும். செயின்ட் சேவியர், செயின்ட் ஜான்ஸ், சாராடெக்கர், எம்.டி.டி. இந்து கல்லூரி மற்றும் சதகதுல்லா அப்பா கல்லூரி ஆகியவை அனைவராலும் அறியப்பட்ட கல்லூரிகளாகும்.


அல்வா : திருநெல்வேலி அல்வா என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. மதுரை மல்லிகை போல திருநெல்வேலி அல்வா மிகவும் புகழ் பெற்றதாகும். கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு தாமிரபரணி நீரினால் நல்ல சுவையளிக்கிறது. இங்குள்ள இருட்டு கடை அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் லட்சுமி விலாஸ், சாந்தி ஸ்வீட்ஸ் ஆகியவை அல்வாவிற்கு பெயர் பெற்றவையாகும். நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அல்வா கடைகள் நிறைந்து உள்ளன.


உணவு: நெல்லையில், சொதி, கூட்டாஞ்சோறு, உளுந்து சோறு, எள்ளு துவையல் போன்றவை இங்குள்ள மக்களின் முக்கிய உணவாகும். சொதி என்பது தேங்காய் பால், காய்கறிகளை சேர்த்து செய்வதாகும்.


தொழில் வளர்ச்சி: நெல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.


பிரச்னைகள்: தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லையில் போதிய தொழில் வளர்ச்சியின்மையால் இங்குள்ள மக்கள் சென்னை கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு போதிய அளவில் இல்லை. இதனால் இங்கு தொழில் வளர்ச்சி குறிப்பிடும் படியாக இல்லை.


பாளையங்கோட்டை: திருநெல்வேலியின் மற்றொரு நகரம் பாளையங்கோட்டை ஆகும். தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை, அங்குள்ள கல்வி நிலையங்களால் பெயர் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்பே இங்கு பல கல்வி நிலையங்கள் இருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள் இங்குதான் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரி, அரசு சித்தமருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, சாராடெக்கர் கல்லூரி ஆகியவை பாளையங்கோட்டையில் உள்ளது. மேலும் இந்த நகரம் தென்னிந்தியாவின் முக்கிய கிறிஸ்தவ மத அமைப்புகளுக்கான மையமாகும். இங்குள்ள ஹோலி டிரினிடி கதீட்ரல் சர்ச் தென்னிந்தியாவின் முக்கிய திருச்சபையாகும். கோபாலசுவாமி கோயில் , சிவன் கோயில், ராமர் கோயில், உச்சினி மாகாளி கோயில் போன்ற பல்வேறு இந்து கோயில்களும் இங்கு காணப்படுகிறது.

அண்ணா மைதானம், வ.உ.சி மைதானம் ஆகியவை மாவட்ட, மாநில அளவிலான கபடி, ஹாக்கி விளையாட்டுகள் நடைபெறும் இடமாகும். சுதந்திர தின, குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறும். மேலும் மத்திய சிறைசாலை பாளையங்கோட்டையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சிறையில் பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.


தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி : மத்திய, மாநில அரசுகள் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை அமைப்பதற்காக முயற்சிகள் எடுத்து வருகின்றன. விரைவில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் திருநெல்வேலியில் அமைய உள்ளது. 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X