சிவகங்கை சுற்றுலா
இடைக்காட்டூர் சர்ச்
இடைக்காட்டூர் புனித இருதய ஆண்டவர் சர்ச் மிகவும் பழமையானதாகும். பிரான்சில் உள்ள ரெய்ம்ஸ் கதீட்ரல் சர்ச்சை மாதிரியாக கொண்டு 110 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் உள்ள சிலைகள் பிரான்சில் இருந்து கொண்டுவரப்பட்டவையாகும். மதுரையிலிருந்து 36 கி.மீ தொலைவில் ராமநாதபுரம் செல்லும் வழியில் இந்த சர்ச் அமைந்துள்ளது.
காளீஸ்வரர் (காளையார்) கோயில்
சிவகங்கையின் புகழ் பெற்ற கோயிலாக காளையார் கோயில் விளங்குகிறது. சிவகங்கையில் இருந்து 18 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. காளையார் கோயில் என்ற பெயர் காளீஸ்வர் கோயில் என்ற வார்த்தையில் இருந்து மருவி வந்தாதாகும். மிக உறுதியான கற்சுவர்களால் சூழப்பட்ட இந்த கோயில் மிக பெரியதாகும். இதன் உயரம் 18 அடி. இந்த கோயிலில் பெரியதும், சிறியதுமாக 2 ராஜகோபுரங்கள் <உள்ளது. கோயிலின் தெற்கு பக்கம் பெரிய குளம் உள்ளது.
கண்ணதாசன் நினைவகம்
கவிஞர் கண்ணதாசனின் பிறந்த ஊரான காரைக்குடி, திரு முக்கூடல் பட்டியில் இந்த நினைவகம் அமைந்துள்ளது. 1992ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி இந்த நினைவகம் துவங்கப்பட்டது. காரைக்குடி பஸ் நிலையத்தின் எதிரில் கண்ணதாசன் நினைவகம் அமைந்துள்ளது.
காரைக்குடி
காரைக்குடி செட்டியார்களின் வீடு கட்டமைப்பிற்கு மிகவும் பெயர் போனதாகும். இங்குள்ள மக்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்களாவர். இங்குள்ள நகரத்தார் வீடு சிறப்பான மர வேலைப்பாடுகளால் அரண்மனை போன்ற தோற்றத்துடன் விளங்குகிறது. இங்கு அழகப்ப செட்டியாரால் நிறுவப்பட்ட அழகப்பா நிகர்நிலை பல்கலை கழகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
தெய்வம் பொழுதுபோக்கு பூங்கா
காரைக்குடியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ளது. பிள்ளையார் பட்டியில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள இந்த பூங்கா அருங்காட்சியகத்தில் விநாயகரின் பல்வேறு சிலைகள் உள்ளன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பூங்கா திறந்திருக்கும். முகவரி :- வைரவன்பட்டி வளைவு அருகில், பிள்ளையார்பட்டி போஸ்ட் - 630207. தொலைபேசி - 9842434961.
கண்டதேவி கோயில்
தேவகோட்டை டவுனில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கண்டதேவி கிராமம் உள்ளது. இங்குள்ள கோயிலில் அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் என்றழைக்கப்படும் சிறகிலிநாதர், பெரியநாயகி அம்மையுடன் வீற்றிருக்கிறார். இந்த கோயில் 350 ஆண்டுகள் பழமையானதாகும். சிவகங்கை தேவஸ்தானத்தால் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் உற்சவம் மிக புகழ் வாய்ந்ததாகும். சுமார் 75 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொள்வர்.
குன்றக்குடி கோவில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் குன்றகுடியில் அருள்மிகு சண்முகநாதன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் இந்த கோயிலை செப்பனிட்டனர். தைப்பூசம், திருகார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலில் உறைந்திருக்கும் முருகனை வழிபட்டால் மனக்கவலைகள், நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மருதுபாண்டியர்கள் நினைவகம்
வீரத்துடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைக்காக போராடிய மருது பாண்டியர்களின் நினைவகம் அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான திருப்பத்தூரில், ஸ்வீடன் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. 1992ம் ஆண்டு நினைவகம் துவங்கப்பட்டது.
பிள்ளையார்பட்டி
காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை - காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது. விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.மிகப்பழமையான இத்திருக்கோயில் ஒரு குடவரைக் கோயில் ஆகும். பண்டைய பாண்டியர்கள் காலத்தில் மலையை குடைந்து இந்த கோயில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கற்பக விநாயகர் சிலை மற்றும் சிவலிங்கத்தை இகாட்டூர் கூன் பெருபரணன் என்பவரால் செதுக்கப்பட்டதாகும். புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.
இளையான்குடி
தொழில் வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிகுந்துள்ள இவ்வூர் பரமக்குடியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் இந்த ஊரைச் சேர்ந்தவர். இந்நாயனார் பாண்டிய சிற்றரசர்களுள் ஒருவர். இங்கு இரண்டு சிவன் கோவில்கள், இரண்டு பெருமாள் கோவில்கள், நான்கு பள்ளி வாசல்கள், ஒரு தேவாலயம், வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முதலியன உள்ளன. வெற்றிலைக் கொடிக் கால்கள் இங்கு ஏராளம். பெரிய ஏரி இருப்பதால் இருபோகம் நெல் விளைகிறது.
திருகோஷ்டியூர் கோயில்
சிவகங்கையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோயில் 108 வைணவ திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். கதம்ப மகரிஷி கடும் தவம் புரிந்து வந்தார்.அவரது தவ வலிமை காரணமாக அரக்கர்களும் விலங்குகளும் இந்த வட்டாரத்திற்கே வருவதில்லை.அமைதி நிறைந்த வனமாக விளங்கியது.எனவே இந்த தலத்தை தங்கள் ஆலோசனை தலமாக மும்மூர்த்திகளும் ஆலோசனை தலமாக தேர்ந்தெடுத்தனர்.மகா விஷ்ணு மூன்றாவது அவதாரமான வராக அவதார காலத்தில் உருவானதாம் இந்தக் கோயில்.அகோபிலத்தில் இரண்யாசுரனை அழிக்க மும்மூர்த்திகளும் கோஷ்டி சேர்ந்து திட்டம் தீட்டியதால் இது திருக்கோஷ்டியூர் என் று அழைக்கப்படுகிறதென ஐதீகம்.பரமபத விபூதிம் பாவயந்தீக கோஷ்டீபுரம் என்று பராசுரபட்டரால் பாடப்பட்ட திருத்தலம்.நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் 5 ஸ்லோகங்களில் திருக்கோஷ்டியூர் பாடப்பட்டுள்ளது.இதனால் 108 வைணவ திருப்பதிகளில் இது முதன்மையானது என்று கூறப்படுவதுண்டு.இத்தலத்தல் ராமானுஜருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் ராமானுஜர் ஓம் நமோ நாராயணாய (அஷ்டாக்சர மந்திர உபதேசம்) எனும் மந்திரத்தை மூன்றாம் தளத்தில் நின்று கொண்டு பக்தர்களுக்கு உபதேசித்துள்ளார் பொதுவாக வைணவ தலங்களில் பெருமாள் நின்ற,அமர்ந்த,சயன கோலங்களில் காட்சி தருவார்.இந்த மூன்று கோலங்கள் மட்டுமல்லாது நான்காவதாக நர்த்தன நாயகனாகவும் காட்சி தருவது இங்கு மட்டுமே. வைணவ தலமான இங்கு வராக அவதார காலத்தில் சுயம்புவாக சிவன் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.4 அடுக்கு மாடங்களாக கோயில் அமைந்துள்ளது.பொதுவாக வைணவ தலங்களில் பெருமாள் நின்ற,அமர்ந்த,சயன கோலங்களில் காட்சி தருவார்.இந்த மூன்று கோலங்கள் மட்டுமல்லாது நான்காவதாக நர்த்தன நாயகனாகவும் காட்சி தருவது இங்கு மட்டுமே. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
செட்டிநாடு
சர்வதேச கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. 80 முதல் 120 ஆண்டுகளை கடந்தும், புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. செட்டிநாடு பகுதியில் உழைப்புக்கு முன்னோடியாக திகழும் நகரத்தார்கள் பல நாடுகள் கடந்து வியாபாரம் செய்தாலும், சொந்த ஊரில் அந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்து, சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.பங்களா முகப்பில் நுழைந்து பின் வாசல் வழியே வெளியேற அரை கி.மீ.,தூரம் நடக்கவேண்டும். பங்களாவின் நுழைவு வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளால் ஆனவை. தரையில் 'டச்சு'நாட்டில் இருந்து வந்த பளிங்கு கற்கள், ஆத்தங்குடி டைல்ஸ் பதித்துள்ளனர். பங்களா உட்புறமேற்கூரை சந்திரவட்ட பிறை வடிவில் தேக்கு மரங்களால் ஆனது. இதில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பம் கண்ணிற்கு விருந்தளிக்கும். மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்று பல ஆன்மிக சுற்றுலா தலங்களை சுட்டிக்காட்டும் 'பச்சிலை ஓவியம்' நகரத்தாரின் ஆன்மிக ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. தரைதளத்தையொட்டி சுவற்றில் பொருத்தப்படும் ஜப்பான் 'பூ' கற்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அறையின் மேற்கூரையில் உள்ள தேக்கு மரங்களை தாங்கி 'பொருசு' மர தூண்கள் நிற்பது கம்பீரம். பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் கிடாரத்தில்(ஆள்உயர அண்டா) சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார்.
|