விருதுநகர் சுற்றுலா
காமராஜர் இல்லம்:
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அவருடைய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு, அவர் உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
ரமண மகரிஷி ஆசிரமம்:
ரமண மகரிஷி 1879ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திருச்சுழியில் பிறந்தார். அவரது தாயார் அழகம்மாள், தந்தை சுந்தரம் ஐயர். அவர் வாழ்ந்த வீடு சுந்தர மந்திரம். சேதுபதி ஆரம்பப்பள்ளியில் அவர் கல்வி பயின்றார். அவருடைய பெயரால் 1988ம் ஆண்டு குண்டாற்றின் கரையில் ஆசிரமம் அமைக்கப்பட்டது.
ஆண்டாள் கோயில்:
ஆண்டாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் அமைந்துள்ளது. விருதுநகரில் இருந்து தென்காசி செல்லும் ரயில் பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது. இங்குள்ள பெருமாள் வடபத்ரசாயி ரங்கமன்னார் என அழைக்கப்படுகிறார். விருதுநகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. தொலைப்பேசி : 04563 - 260254
பூமிநாத சுவாமி கோயில்:
பூமிநாதசுவாமி கோயில் திருச்சுழியில் உள்ளது. பாண்டிய நாட்டின் புகழ் பெற்ற 14 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கடவுள் பூமிநாதர், தாயார் துணைமாலை அம்மன். இந்த தலம் சைவ நாயன்மார் சுந்தரமூர்த்தி மற்றும் சேக்கிழாரால் பாடப்பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதியால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டன. குண்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்தார்.
திருமேனிநாத சுவாமி கோயில்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பார்த்திபனூர் செல்லும் வழியில் திருச்சுழியில் திருமேனிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒன்பது தீர்த்தங்களும், எட்டு வகையான லிங்கங்களும் உள்ளன. தென்பாண்டி நாட்டில் பாடல் பெற்ற 14 தலங்களில் இது 10வது தலம்.
அய்யனார் அருவி:
விருதுநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அய்யனார் அருவி உள்ளது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயிலை ஒட்டி அருவி அமைந்துள்ளது. பதினைந்து அடி உயரத்தில் இருந்து அருவி விழுகிறது. விருதுநகர் மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது.
குகன்பாறை :
கழுகுமலையில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் குகன் பாறை அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள கிராமமும் குகன்பாறை என்றே அழைக்கப்படுகிறது. பாறையின் அடிப்பகுதியில் ஒரு குகை உள்ளது. இதில் ஜென துறவிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாறைகளில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
குல்லூர் சந்தை நீர்தேக்கம்:
கவுசிக மகாநதியில் குல்லூர்சந்தை நீர்தேக்கம் அமைந்துள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு இடமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி வரை ஏராளமான நீர்பறவைகளை இங்கு காணலாம்.
பள்ளிமடம்:
குண்டாற்றின் கிழக்கு கரையில் பள்ளிமடம் அமைந்துள்ளது. 10ம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் இந்த இடத்தில் தனது உயிர் நீத்தார். அவரது சகோதரர் வீர பாண்டியன் இங்கு பள்ளிபடை என்ற நினைவு இடத்தை நிறுவினார். இங்குள்ள கோயில் கலைநாதசுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. பள்ளிப்படை என்ற சொல் மருவி பள்ளிமடம் என ஆகியது.
பிளவக்கல் அணை:
பிளவக்கல் அணைப்பகுதி பொழுதுபோக்கு இடமாகும். இந்த அணை பெரியார் அணை, கோவிலார் அணை என இரு பகுதியாக உள்ளது. இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் அழகான தோட்டங்கள் உள்ளன. படகு சவாரியும் உள்ளது.
சவேரியார் சர்ச்:
பிரான்சிஸ் அசோசியேஷனால் 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இந்த சர்ச் கட்டப்பட்டது. புனித பிரான்சிஸ் நினைவாக இந்த சர்ச் நிறுவப்பட்டது. சர்ச்சின் சுவர்களின் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்து கீதை உபதேசிப்பது, இஸ்லாமியர்களின் பிறை, ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது.
செண்பகதோப்பு சரணாலயம் :
ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு என்ற இடத்தில் 480 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் புலி, சிறுத்தை, மான், குரங்குகள், சிங்கவால் குரங்குகள், லாங்கூர்கள், பறக்கும் அணில்கள், 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அரிய வகை அணில்கள் வேறு எங்கும் காண கிடைக்காததாகும்.
வெம்பக்கோட்டை :
வெம்பக்கோட்டை நீர்தேக்கம் வைப்பாறு மூலம் நீரை பெறுகிறது. வைப்பாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
திருத்தங்கல்:
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் திருத்தங்கல் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் வாழ்ந்த கவிஞர்களான முடக்கோரனார், பொற்கொல்லன் வெண்ணகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் திருத்தங்கலில் வாழ்ந்தவர்களாவர்.
சிவகாசி :
சிவகாசி முக்கியமான தொழில் நகரமாகும். லித்தோகிராபிக், ஆப்செட் பிரிண்டிங்கிற்கு புகழ்பெற்ற நகர். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் நகரின் முக்கிய தொழிலாகும். சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஏறக்குறைய 4500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. 400 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் 70 சதவீத பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. அதிக அளவிலான பட்டாசு ஏற்றுமதியும் நடைபெறுகிறது. சிவகாசி ஆப்செட் பிரின்டிங் தொழிலுக்கு பெயர் பெற்றதாகும். புத்தகங்கள், போஸ்டர்கள், வாழ்த்து அட்டைகள், டைரிகள் போன்றவை இங்கு தயாரிக்கப்படுகின்றன.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் :
விருதுநகரில் இருந்து 32 கி.மீ தூரத்திலும், மதுரையில் இருந்து 90 கி.மீ தூரத்திலும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் :
விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை, மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
|