கேளுங்க சொல்கிறோம்!
டிசம்பர் 16,2011,10:20  IST

** வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா?
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்
மார்கழி நெருங்கும் சமயத்தில் இக்கேள்வி கேட்டிருப்பது பாராட்டுக்குரியது. கோலம் என்றால் "அழகு'. இதனை வடமொழியில் "ரங்கவல்லி' என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று வரையப்படுவது கோலமாகும். "வல்லீ' என்றால் கொடி. கொடிகளைப் போன்ற கோடுகளாலும், புள்ளிகளாலும் அழகாகப் போடப்பட வேண்டியவையே கோலங்கள். தெய்வங்களின் உருவங்கள் வீட்டு வாசலில் கோலமாகப் போடுவது, பிறகு அதன் மீது கால் பட நடப்பது இவற்றையெல்லாம் யோசிக்கவே கஷ்டமாகவே உள்ளது. எனவே இவற்றை நம் சகோதரர்களிடம் சொல்லி அழகான புள்ளி கோலங்கள், சிக்குக் கோலங்கள் முதலியவற்றின் மூலம் தங்களது கைவண்ணத்தை திறம்பட காண்பிக்குமாறு செய்ய வேண்டும்.

* பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எந்த வயதில் கணிக்க வேண்டும்?
என்.சக்தி சரவணன், வேடசந்தூர்
ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற இக்கால சூழ்நிலையில் சிறுவயதிலேயே குழந்தைகள் குழப்பமான மனநிலைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?
எஸ்..தீபா, பரமக்குடி
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.

* குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?
பி.சேர்மத்தாய், வண்டியூர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X