தட்சிணாமூர்த்தி அம்மன்
அக்டோபர் 15,2012,12:35  IST

""தட்சிணாமூர்த்தி ஆண் தெய்வமல்லவா! அவரை அம்மன் என்கிறீர்களே!'' என்பவர்கள், உண்மையிலேயே பெண் வடிவத்தில் உள்ள இவரை சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் காணலாம். தக்ஷிணரூபிணி என்பது இவரது திருநாமம்.

தல வரலாறு:ஆணும், பெண்ணும் சமமே என்பதை உலகுக்கு உணர்த்த சிவசக்தி முடிவெடுத்தனர். இதற்காக, தங்களில் யார் அதிக சக்திமிக்கவர் என்ற விவாதத்தை உருவாக்கினர். பார்வதிதேவி, "தானே பெரியவள்' என்று கோபத்துடன் வாதிட்டாள். இதனால், அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார். பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன், தில்லையில்(சிதம்பரம்) தவமிருந்து என்னிடம் வந்து சேர்வாய்,''என்றார். பார்வதி கோப சக்தியாக, "தில்லைக்காளி' என்ற பெயரில் அமர்ந்தாள்.

நான்கு முக அம்மன்:சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவராக ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணத்தால் முடியாமல் போனது. இதனால் அவள் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது.

தல சிறப்பு:பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்' என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளாள். பக்தர்கள் இவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை. ஞாயிறு ராகு காலம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இவளுக்கு சிறப்பு பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

பெண் தட்சிணாமூர்த்தி:பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷிண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

திறக்கும் நேரம்:காலை 6.30 - 12, மாலை 4.30 - 8.30.

இருப்பிடம்:சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கி.மீ.

போன்:04144 - 230 251

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X